"விபரீத முடிவுகள் எடுக்க வேண்டாம்' என்ற முதல்வரின் அறிவிப்பு டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு, மன ஆறுதலை தந்துள்ள நிலையில், பயிர் இழப்பீட்டு தொகையை அதிகரித்து, பண ஆறுதல் வழங்க வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறுவை சாகுபடி பொய்த்த நிலையில், வடகிழக்கு பருவமழை மற்றும் காவிரி தண்ணீர் தராமல், கர்நாடகா ஏமாற்றியதால், டெல்டா மாவட்டங்களில், 11.20 லட்சம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.நிலம், நகை உள்ளிட்டவற்றை அடகு வைத்து விவசாயம் செய்த நிலையில், கண்முன்னே பயிர்கள் கருகுவதால், மனம் உடைந்த விவசாயிகள் தொடர்ச்சியாக தற்கொலை செய்து வருகின்றனர்.இப்பிரச்னையை கையில் எடுத்துள்ள அரசியல்கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர், பயிர் இழப்பீடு வழங்க வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா, நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், "சம்பா பயிர் இழப்பு ஏற்பட்டால், அரசு உரிய நிவாரணம் வழங்கும். பயிர் இழப்பீடாக ஏக்கருக்கு, 13.7 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். எனவே, விவசாயிகள் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம்' என, வேண்டுகோள் விடுத்தார்.பயிர் கருகுவதால் என்ன செய்வது என தெரியாமல், மன உளைச்சல் அடைந்த டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு முதல்வரின் அறிவிப்பு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், முதல்வர் அறிவித்துள்ள நிவாரணத்தொகை, பயிர் இழப்பை சரி செய்வதற்கு போதுமானதாக இருக்காது என, விவசாயிகள் கருதுகின்றனர். எனவே, பயிர் இழப்பீட்டு தொகையை அதிகரிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலர் ஆறுபாதி கல்யாணம் கூறியதாவது:முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு உண்மையிலேயே விவசாயிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மன ஆறுதலை தருகிறது. இந்த அறிவிப்பை, 20 நாட்களுக்கு முன்பே வெளியிட்டு இருந்தால், உயிர் இழப்பை தடுத்திருக்க முடியும். 13.7 ஆயிரம் ரூபாயை, பயிர் இழப்பீடாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விவசாயியும் ஏக்கருக்கு, 20 ஆயிரம் முதல், 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளார். அதனால், அரசு வழங்கும் இழப்பீடு போதுமானதாக இல்லை. இந்த பணத்தால், அடகு வைத்த பொருட்களை மீட்கவோ, குடும்பத்தை காப்பாற்றவோ முடியாது.எனவே, பயிர் இழப்பீட்டு தொகையை, ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல், வழங்கினால் மட்டுமே, வரும் காலங்களில், விவசாயிகளையும், விவசாயத்தையும் அரசால் காப்பாற்ற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -