புதுடில்லி :மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிப்பு விவகாரம் தொடர்பாக, டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்துக்கும், டில்லி போலீசாருக்கும் இடையே, கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. "மாணவியிடம், மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றபோது, போலீஸ் உயதிரகாரிகள், தேவையின்றி குறுக்கீடு செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேக்கு, முதல்வர் ஷீலா கடிதம் எழுதியுள்ளார்.
டில்லியில், மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட விவகாரத்தில், திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில், டில்லி போலீசார் மீது, காங்., மூத்த தலைவரும், டில்லி முதல்வருமான, ஷீலா தீட்ஷித், துவக்கத்திலிருந்தே, குற்றம் சாட்டி வந்தார்.டில்லியை பொறுத்தவரை, போலீஸ் துறை, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை; மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால், "பிரச்னைக்கு, போலீசாரின் கவனக் குறைவே காரணம்' என, ஷீலா, புகார் கூறி வந்தார்.
கடிதம்:
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டேவுக்கு, ஷீலா தீட்ஷித் எழுதிய கடிதம், மீடியாக்களுக்கு கிடைத்துள்ளது.
அதில் அவர் கூறியுள்ளதாவது: பாதிக்கப்பட்ட மாணவியிடம் வாக்குமூலம் பெறுவதற்காக, டில்லி சப் - டிவிஷனல் மாஜிஸ்திரேட், உஷா சதுர்வேதி, 21ம் தேதி இரவு, மருத்துவமனைக்கு சென்றார். அவருடன், போலீஸ் அதிகாரிகளும் சென்றுள்ளனர். மாணவியின் குடும்பத்தார் தடுத்தும் கூட, வாக்குமூலம் அளிப்பதை, போலீசார், வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெறும்போது, போலீசாரும் வாக்குமூலம் பெற்றுள்ளனர். மாஜிஸ்திரேட், குறிப்பிட்ட கேள்விகளை, மாணவியிடம் கேட்டபோது, போலீசார், தாங்கள் தயாரித்து வைத்திருந்த கேள்விகளை கொடுத்து, அந்த கேள்விகளை கேட்கும்படி, அவரை வற்புறுத்தியுள்ளனர்.
நடவடிக்கை இல்லை:
மாஜிஸ்திரேட், இதற்கு மறுப்பு தெரிவித்தபோது, அவரை, விமர்சித்துள்ளனர். வாக்குமூலம் பெறும் போது, தேவையின்றி, மூன்று உயர் போலீஸ் அதிகாரிகள், குறுக்கீடு செய்துள்ளனர்.
இதுகுறித்து, மாஜிஸ்திரேட், என்னிடம் புகார் தெரிவித்ததை அடுத்து, டில்லி உதவி போலீஸ் கமிஷனரிடம், பேசினேன். அவரிடமிருந்து, சரியான நடவடிக்கை இல்லை.எனவே, மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெறும்போது, போலீஸ் உயரதிகாரிகள் குறுக்கீடு செய்தது தொடர்பாக, உயர்மட்ட அளவிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கடிதத்தில், ஷீலா தீட்ஷித் கூறியுள்ளார்.
பதிலடி:
இதற்கு, டில்லி போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர். டில்லி போலீசாரின் செய்தி தொடர்பாளர், ராஜன் பகத் கூறியதாவது:முதல்வர் ஷீலா தீட்ஷித், உள்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதம், மீடியாக்களுக்கு கசிந்தது எப்படி? இதுகுறித்து, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மாஜிஸ்திரேட், வாக்குமூலம் பெற வந்தபோது, அவருடன் வீடியோ கேமராமேன்களும் வந்தனர்.அவர்களை மீடியாக்காரர்கள் என, நினைத்து, மாணவியின் குடும்பத்தினர் தடுத்தனர். "வாக்குமூலம் பெறும்போது, இதுபோல் வீடியோ எடுப்பது, வழக்கமான நடைமுறை தான்' என, அவர்களுக்கு எடுத்துக் கூறினோம்.மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றபோது, போலீசார் யாரும், அந்த அறையில் இல்லை. பாதிக்கப்பட்ட மாணவியே, வாக்குமூலம் பெற்ற, அனைத்து பக்கங்களிலும், கையெழுத்திட்டார். வாக்குமூலத்தின் போது, போலீசார், அதில் குறுக்கிடவே இல்லை.இவ்வாறு ராஜன் பகத் கூறினார்.இந்த விவகாரத்தில், டில்லி போலீசாருக்கும், முதல்வருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல், டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், டில்லி மாஜிஸ்திரேட் சார்பில், பாதிக்கப் பட்ட மாணவியிடம், நேற்று மீண்டும் வாக்குமூலம் பெறப்பட்டது.இதற்கிடையே, மாணவி கற்பழிப்பு விவகாரத்தில், போலீசார் கவனக்குறைவாக செயல்பட்டது குறித்து, டில்லி ஐகோர்ட் நீதிபதி, உஷா மெக்ரா தலைமையில், ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.