தூத்துக்குடி : ""தமிழக வறட்சி நிவாரண பணிக்காக, மத்திய அரசு, 1,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும்,'' என, தமிழ்நாடு விவசாயிகள் சங்க, மாநில பொதுச் செயலர் சண்முகம் வலியுறுத்தினார்.
தூத்துக்குடியில், அவர் கூறியதாவது: தமிழகத்தில், வறட்சி, வறுமை காரணமாக, இதுவரை, ஒன்பது விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். காவிரியில், உரிய நீரை பெற்றுத்தராததால், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில், 14 லட்சம் ஏக்கரில், பயரிடப்பட்டிருந்த நெற்பயிர் கருகி விட்டது. விவசாயிகளுக்கு, 5,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
எனவே, வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட, விவசாயிகள் குடும்பத்திற்கு, தமிழக அரசு, தலா, 10 லட்சம் ரூபாய், குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு வேலை வழங்கவேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய், அவர்களின் குடும்பத்திற்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும். இதை,பேரிடராக அறிவித்து, மத்திய அரசு, தமிழக வறட்சி நிவாரண பணிக்காக,1,000 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட, மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.