Thiruvadhiral nannal | திருவாதிரை நன்னாள்: ஆடவல்லானின் ஆனந்த நடனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருவாதிரை நன்னாள்: ஆடவல்லானின் ஆனந்த நடனம்

Added : டிச 26, 2012
Advertisement

தமிழ் மாதங்களில் பக்திமயமாக விளங்குவது, மார்கழி மாதத்தின் தனிச் சிறப்பு. மாதங்களில் மார்கழியாகவும், நாட்களில் திருவாதிரையாகவும் விளங்குகிறேன் என, பகவான் கண்ணன், பகவத் கீதையில், மார்கழி மாதத்தின் சிறப்பை எடுத்துக் கூறுவதைக் காணலாம்.

மார்கழி மாதத்தின் அதிகாலை குளிரையும் பொருட்படுத்தாமல், திருக்கோவில் சென்று திருப்பள்ளியெழுச்சியும், திருப்பாவை - திருவெம்பாவை பாடல்களைப் பாடியும், இறைவனைப் போற்றி வழிபட்டு நலம் பெறுகின்றனர்.
வைணவ திருக்கோவில்களில் இம்மாதத்தில் வைகுண்ட ஏகாதசித் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. அது போன்று சிவாலயங்களில் மார்கழி மாதத்தில், "திருவாதிரை விழா' சிறப்பாக நடைபெறுகிறது.
திருவாதிரை நாளில், ஆடவல்லானாகிய நடராஜப் பெருமானுக்கு சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகின்றன. சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. திருநாவுக்கரசர் பெருமான் சிவபெருமானை, "ஆதிரை நாள் உகந்தான், ஆதிரை நன்னாளான் என்றெல்லாம் போற்றுகின்றார். மார்கழி மாதத்தில் திருவாதிரையில், தாண்டவ மூர்த்தியான நடராஜப் பெருமானை வழிபடுவது நல்லது என, காரணாகமம் கூறுகிறது. தமிழகத்தில் சிவாலயங்கள் அனைத்திலும் திருவாதிரை விழா சிறப்பாக நடைபெறுகிறது. எனினும் தில்லையில் நடைபெறும், "ஆருத்ரா தரிசனம்' மிகச் சிறப்பானது. இத்தலத்தில் ஆடவல்லான் கோவில் கொண்டு அனைவருக்கும் அருள் பாலிக்கின்றார். "செல்வம் உயர்கின்ற செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலமேய செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே' என, ஞானசம்பந்த பெருமான் போற்றுகின்றார். தில்லையை, சிதம்பரம் என அழைக்கிறோம். "சித்' என்பது அறிவு; "அம்பரம்' என்றால் ஆகாயம். அறிவு வெளியில் இறைவன் நடனமாடுவதால் இத்தலம், "சிதம்பரம்' என அழைக்கப்படுகிறது. தாருகாவன முனிவர்களின் கர்வத்தை அடக்கி, இறைவன் ஆடிய நடனம், "ஆனந்த நடனம்'. பதஞ்சலி முனிவரின் வேண்டுகோளின் படி தாருகாவனத்தில் அன்று ஆடிய நடனத்தை, தில்லையில் மீண்டும் ஆதிரை நன்னாளில் சிவபெருமான் ஆடியதாகக் கூறப்படுகிறது. இந்த நாளில் நடைபெறும் தரிசனத்தை, ஆருத்ரா தரிசனம் எனச் சிறப்பித்து அழைக்கிறோம். அன்று தான், "திருவாதிரை களி' என்ற அமுது, ஆடவல்லானுக்கு சிறப்பான அமுதாகப் படைக்கப்படுகிறது. திருவாதிரை விழா, திருவாரூர், மயிலாப்பூர் தலங்களில் சிறப்பாக நடைபெற்றதை அக்கோவில்களின் திருப்பதிகங்களால் அறிய முடிகிறது. ராமநாதபுரம் அருகில் உள்ள, "ஆதி சிதம்பரம்' எனப் போற்றப்படும் திரு உத்தரகோசமங்கை; திருச்சிக்கு அருகே உள்ள லால்குடி எனப்படும் திருத்தவத்துறை; மயிலாடுதுறை அருகே உள்ள ஆனந்த தாண்டவபுரம் போன்ற தலங்களில் நடைபெறும் திருவாதிரை விழா சிறப்பானதாக விளங்குகிறது.

திருமழபாடி அருகே உள்ள காமரசவல்லி திருக்கோவிலில் திருவாதிரை நாளில் இறைவனுக்கு, "அக்கார அடிசில்' அமுது படைக்கவும், "சாக்கைக் கூத்து' என்ற ஒரு வகை நடனம் நடத்தவும் தானம் அளிக்கப்பட்டதை, கல்வெட்டுகள் கூறுகின்றன. திருச்செங்கோடு கோவிலில், "திருவாதிரை கண பெருமக்கள்' என்ற ஒரு குழுவினர் இருந்ததாக அறிய முடிகிறது. ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்கள் தானமாகப் பெற்றுக் கொண்டு, அதிலிருந்து வரும் வட்டித் தொகையைக் கொண்டு திருவாதிரை நாளன்று, கோவிலுக்கு வரும் அடியார்களுக்கு உணவு அளிக்கும் தொண்டு செய்து வந்துள்ளனர் என்பதையும் அறிகிறோம்.

ஆனந்த நடனம் புரியும் ஆடவல்லானின் வடிவம் தமிழகத்திற்கு தனிப்பெருமை அளிக்கிறது என்றால் மிகையில்லை! பல்லவர் கால கோவில்களிலும், பாண்டியர் கால குடைவரைக் கோவில்களிலும் ஆடவல்லானின் அழகிய சிற்ப வடிவங்களைக் கண்டு மகிழலாம். சோழ மன்னர்கள் காலத்தில், பல கோவில்களில் ஆடவல்லானை அழகிய செப்புத் திருமேனிகளாகச் செய்து அளித்து வழிபட்டனர். ஆடவல்லானை, "தம் குல நாயகனாகப் போற்றினர்.

தஞ்சை பெரிய கோவிலில் நடராஜப் பெருமானே ஆடல் கரணங்களை ஆடுவதாக, விமானத்தின் உட்புறச்சுவரில் வரிசையாக சிற்பங்களை அமைத்து மகிழ்ந்து போற்றினான் ராஜராஜ சோழன்! இக்கோவிலில் பயன்பாட்டில் இருந்த, "தராசு'க்கும், மரக்காலுக்கும் கூட ஆடவல்லான் எனப் பெயரிட்டு அழைத்திருப்பதை கல்வெட்டுகளில் அறிய, வியப்பு ஏற்படுகிறது.
சிதம்பரம் கோவிலில், "பரதம் வல்லான்' என்று புகழ் பெற்ற காடவ குல மன்னன் கோப்பெருஞ்சிங்கனால், பரத நாட்டிய 108 கரணங்கள் உரிய குறிப்புகளுடன் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

ஆடவல்லானின், சில திருமேனிகளின் பெயர்களும், சிறப்பானதாக அமைகிறது. திருவெண்காடு கோவிலில் உள்ள நடராஜர் செப்புத் திருமேனியின் பீடத்தில், "ஸ்வஸ்திஸ்ரீ தேசி அபய நிதியாபரண நாயகர்' எனப் பொறிக்கப்பட்டுள்ளது. "தேசி' என்பது ஒரு வகை நடனத்தைக் குறிப்பதாகும். திருக்கோடிக்காவல் கோவிலில் வழிபாட்டில் இருந்த நடராஜர் திருமேனி, "கொட்டமைந்த ஆடலார்' என அழைக்கப்பட்டது. நடராஜப் பெருமான் திரு நடனம் ஆடியத் தலங்களாக சிதம்பரம் - கனக சபை, மதுரை - வெள்ளி சபை, திருநெல்வேலி - தாமிர சபை, திருக்குற்றாலம் - சித்திர சபை, திருவாலங்காடு - ரத்தின சபை ஆகியவை சிறப்பித்துக் கூறப்படுகின்றன.

திருவாலங்காட்டில் அற்புதக் கோலம் : சென்னைக்கு அருகில் அமைந்துள்ள, திருவாலங்காடு திருத்தலம் மிகவும் சிறப்பானது. "வடாரண்யம்' எனப் பெயர் பெற்றது. நடராஜப் பெருமானின் "ஊர்த்துவ தாண்டவத்தை' இங்கே கண்டு தரிசிக்கலாம். கல்வெட்டில் இத்திருமேனியை, "அரங்கில் அண்டமுற நிமிர்ந்தருளிய நாயனார்' என்று குறிக்கப்படுவது சிறப்பானது. இறைவன் காளியுடன் நடனமாடிய திருத்தலம். சிவபெருமானால், "அம்மையே' என அழைத்துப் போற்றப்பட்ட, காரைக்காலம்மையார் தலையால் நடந்து வந்து, நடராஜப் பெருமானின் திருவடிக் கீழ் இருந்து, சிவானந்த இன்பத்தை அனுபவித்த திருத்தலம். காரைக்காலம்மையார் கையில் தாளத்துடன் திருவடிக் கீழ் அமர்ந்திருக்கும் அற்புத கோலத்தை இக்கோவிலில் கண்டு வழிபடலாம். ஆனந்தம் ஆடரங்கு, ஆனந்தம் அகில சராசரம் ஆனந்தம் ஆனந்த கூத்து என திருமூலர், ஆனந்த தாண்டவத்தைப் போற்றுகின்றார். சிறப்பு வாய்ந்த திருவாதிரை ஆருத்ரா தரிசன நாளில், ஆடவல்லானை வழிபட்டு வாழ்வில் ஆனந்தம் அடைவோம்!

- க.ஸ்ரீதரன்

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை