மதுரை: மதுரை சிறை மருத்துவமனையில், அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து, கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மதுரை கரும்பாலையை சேர்ந்தவர் சோணைமுருகன், 24. பெண் கடத்தல் வழக்கில், அண்ணாநகர் போலீசாரால் டிச.,14ல், சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று முன் தினம் இரவு 8.15 மணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார். சாவில் மர்மம் இருப்பதாகக்கூறி, நேற்று மாலை வரை உடலை உறவினர்கள் பெறவில்லை. சிறை மருத்துவமனையில், சோணைமுருகனுக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் கூறி, நேற்று (டிச.,25) காலை, நக்சைலட் அமைப்பைச் சேர்ந்த விவேக், பாளையங்கோட்டை சிறையில் இருந்து சமீபத்தில் மாற்றப்பட்ட சுதர்சன், மதுரை சப்பாணி முருகன், உண்ணாவிரதம் இருந்தனர். "கலெக்டர் மற்றும் சிறை ஏ.டி.ஜி.பி., நேரில் வந்து விசாரிக்க வேண்டும்' எனவும் வலியுறுத்தினர். இவர்களுக்கு ஆதரவாக, மதியம், "ரிமாண்ட் 2' கட்டடத்தில் 50 விசாரணை கைதிகள் உண்ணாவிரதம் இருந்தனர். அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். நேற்று மாலை வரை போராட்டம் தொடர்ந்தது.