செங்குன்றம்: "தேவு மிகவும் ஆபத்தானவன், அதனால் நாங்கள் முந்திக் கொண்டு அவனை கொலை செய்தோம்' என்று, ஆயுதப்படை போலீஸ் காவலில் இருந்த ரவுடியை, மாநகர பேருந்தில் வெட்டி கொலை செய்த முக்கிய குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்தனர். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் தேவு என்கிற தேவராஜன், 24. அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்தவர். திருச்சி மத்திய சிறையில் இருந்த அவர், சிலை திருட்டு வழக்கு விசாரணைக்காக, கடந்த 7ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கோர்ட்டிற்கு வந்தார். ஆயுதப்படை போலீசார் ரங்கராஜன், சுப்ரமணி ஆகியோர் காவலுக்கு வந்தனர்.
கொலை : அன்று மாலை செங்குன்றம் பேருந்து நிலையத்தில், பேருந்தில் வைத்து மர்மக் கும்பலால் சரமாரியாக தேவராஜன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, கூடுதல் துணை ஆணையர் ஜெயக்குமார் தலைமையில் தனிப்படை போலீசார், மணிகண்டன், செல்வம், பெருமாள், நாகராஜ் உட்பட 12 பேரை கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய 2 கார்கள், 10 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. முக்கிய குற்றவாளிகளான தினேஷ், 30, ஆதிகேசவன், 37 மற்றும் சுரேஷ், 34, ஆகியோர் கடந்த 10ம் தேதி காலை, வேலூர் ஜே.எம்., 3 கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை செங்குன்றம் போலீசார், நான்கு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி, நேற்று முன் தினம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி, மீண்டும் சிறையில் அடைத்தனர்.
முன்விரோதம் : தேவராஜனின் அண்ணன் சீனிவாசனின் மனைவிக்கும், காஞ்சிபுரத்தை சேர்ந்த சாராய வியாபாரி ஸ்ரீதருக்கும் இருந்த கள்ளத்தொடர்பால் மோதல், முன் விரோதம் ஏற்பட்டது. இதில் ஸ்ரீதர், தினேஷ் மற்றும் சிலர் சேர்ந்து, 2009ம் ஆண்டு சீனிவாசனை கொலை செய்தனர். அது தொடர்பாக கைது செய்யப்பட்டோரில், ஸ்ரீதர் வேலூர் சிறையில் உள்ளார். அந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. அந்த வழக்கு முடிவதற்குள், கோர்ட்டிற்கு வரும் வழியில் ஸ்ரீதரையும், அவரது கூட்டாளி தினேஷையும் தீர்த்து கட்ட தேவராஜன் திட்டமிட்டார். அதற்கிடையில் தினேஷை கொலை செய்ய, அவரது வீட்டிற்கும் ஆள் அனுப்பினார். இந்த தகவல் மணிகண்டன் மூலம் தினேஷுக்கு தெரிந்தது.
பணத்திற்காக கொலை : இதுகுறித்து வாக்குமூலத்தில் அவர்கள் கூறியதாவது: "தேவு' மிகவும் ஆபத்தானவன். அவன் யாரோடு சேர்ந்தாலும், பணத்திற்காக அவர்களின் உத்தரவை ஏற்று அவனுடன் பழகியவரை கூட தீர்த்துக் கட்டி புதைத்து விடுவான். இந்த வேலையை, அவன் தனி ஆளாகவே செய்து முடிப்பான். அவன் மீது காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான்கைந்து கொலை வழக்குகள் உள்ளன. அவன் ஜாமினில் விடுதலையானால் கூட, எங்கள் உயிருக்கு ஆபத்து நிச்சயம் என்பதை உணர்ந்தோம். அதனால் நாங்கள் முந்திக் கொண்டு அவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தோம். ஏற்கனவே காஞ்சிபுரம் கோர்ட்டிற்கு வரும் போது, அவனை தீர்த்துக் கட்ட முடியவில்லை. இதையடுத்து கடந்த 7ம் தேதி பொன்னேரி கோர்ட் வாசலில் காத்திருந்தோம். ஆனால் அங்கே கூட்டம் அதிகம் இருந்ததால்,தேவராஜை கொலை செய்ய முடியவில்லை. அடுத்து பொன்னேரி பஸ் நிலையத்தில் அவனை, போலீசார் அழைத்து சென்ற பஸ்சில் பள்ளி மாணவர்கள் கூட்டம் நிரம்பியிருந்ததால், அங்கும் முடியவில்லை. அந்த பஸ்சை தொடர்ந்து செங்குன்றத்திற்கு வந்தோம். அங்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கூட்டத்தால், தேவராஜை நெருங்க முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக அவர்கள் ஆட்கள் இல்லாத "ஏசி' பஸ்சில் ஏறியதை உறுதி செய்து, அவனை காலி செய்தோம். இவ்வாறு அவர்கள் கூறியிருந்தனர்.
மற்றவர்களும் கைது : இது பற்றி போலீசார் கூறுகையில், "இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க தேவராஜின் ரத்தம் மற்றும் பேருந்து இருக்கை, கத்தி, கார் ஆகியவற்றில் இருந்த ரத்த மாதிரிகள் மற்றும் அலைபேசி தொடர்புகள்
ஆகியவை துல்லியமாக சேகரிக்கப்பட்டன. இதனால் முக்கிய குற்றவாளிகள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். வேலூர் சிறையில் உள்ள ஸ்ரீதர் மற்றும் தலைமறைவாக உள்ள பரத் ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுவர்' என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.