கோவை: சிறுவாணி அணைப் பகுதியில் உள்ள கேரள அரசு விருந்தினர் மாளிகைகளில், சமூக விரோத செயல்கள் நடப்பதால், சுற்றுலா பயணிகள் இரவில் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி வனப்பகுதியில் நுழைவோர் கைது செய்யப்படுவர் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழக - கேரள எல்லையில், அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. கேரளாவின் நிலப்பகுதியில் கோவையின் குடிநீர் தேவைக்காக, இந்த அணை கட்டப்பட்டுள்ளது. பாலக்காடு மாவட்டம் மண்ணார்காடு வழியாக, ஜீப் மற்றும் வாகனங்களில், சிறுவாணிக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். அணையை ஒட்டி, கேரள வனத்துறை மற்றும் அம்மாநில நீர்ப்பாசனத்துறையின் விடுதிகள் உள்ளன. சமீபகாலமாக, இங்கு இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகள் தங்கி வந்தனர். சிறுவாணி அருகே அட்டப்பாடி அணை கட்டுவதற்கும், கேரளா, ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதை காரணம் காட்டி, வெளி ஆட்களை பலர் விருந்தினர் மாளிகைளில் தங்கி வந்தனர். அப்போது, மதுபான விருந்துகள் உள்ளிட்ட கேளிக்கை செயல்கள், சமூக விரோத செயல்கள் அரங்கேறி வந்தன.
இதற்கு கேரள வனத்துறை அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வனத்துறை - நீர்ப்பாசனத் துறை இடையே,"பனிப்போர்' நிலவி வந்தது. இந்த மோதலின் உச்சகட்டமாக, நீர்ப்பாசனத் துறை தலைமைப் பொறியாளர் காரையே, வனத்துறையினர் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தினர். இந்த புகாரை அடுத்து, கேரள வனத்துறை அமைச்சர் கணேஷ் குமார், நேற்று முன்தினம் இரு துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அன்னியர் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அடர்ந்த காடுகளில் சுற்றுலா பயணிகள் செல்வதால், அவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சிறுவாணி புராஜெக்ட், அட்டப்பாடி புராஜெக்ட் என்ற பெயரில், ஆய்வுக்கு வரும் பலரால், அணை பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து, "சிறுவாணியில் வனத்துறை அனுமதியின்றி யாரும், விருந்தினர் மாளிகை மற்றும் விடுதிகளில் தங்கக் கூடாது. யாரும் அத்துமீறி நுழையக் கூடாது. அனுமதியின்றி விடுதியில் தங்கினால், அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்படும். வனப்பகுதிக்குள் நுழைபவர்கள் கைது செய்யப்படுவர்' என, கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, சோதனைச்சாவடிகளில் விளம்பர பலகை வைக்கவும், கேரள வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். "நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் மற்றும் ஆய்வு திட்டத்துக்கு வருவோருக்கு வனத்துறை சார்பில், அடையாள அட்டை வழங்கப்படும்' என அறிவித்துள்ள அரசு, சிறுவாணியில் சுற்றுலா பயணிகள் வருவதற்கு
முன்பதிவு செய்யும், "வெப்சைட்' சேவையையும் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.