புதுக்கோட்டை: நகராட்சி பகுதியில் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட, 3.60 கோடி ரூபாய் மதிப்பிலான இடம் ஆக்கிரமிக்கப்பட்டு, தனியார் வசம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நகரமைப்பு விதிமுறையின் படி, தனியார் இடத்தை வீட்டுமனைகளாக பிரித்து வரைபடம் (லே அவுட்) தயார் செய்வதென்றால், அந்த இடத்தின் மொத்த பரப்பளவில், மூன்றில் ஒருபகுதி இடம் பொது காரியங்களுக்காக ஒதுக்கவேண்டும். இவ்வாறு ஒதுக்கப்படும் இடம், நில உரிமையாளரால் செட்டில்மென்ட் பத்திரத்தின் மூலமாக, தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த இடத்தை கல்வி நிறுவனம், விளையாட்டு மைதானம், பூங்கா, வணிக வளாகம், குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைத்தல் போன்ற பொது பயன்பாட்டுக்காக உள்ளாட்சி அமைப்புகள் பயன்படுத்தலாம்.
அந்த இடத்தை தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகள் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியும். இதனடிப்படையில் புதுக்கோட்டை நகராட்சிகுட்பட்ட நிஜாம்காலனி பகுதியை வீட்டுமனைகளாக பிரித்து வரைபடம் தயார் செய்தபோது, ஆலங்குடி சாலையின் தென்புறம், மக்கள் மன்ற கட்டிடத்தின் எதிர்புறம், 12 ஆயிரம் சதுர அடி இடம் பொதுபயன்பாட்டுக்காக செட்டில்மென்ட் பத்திரப்படி, நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது அதன் அருகில் உள்ள இடங்கள், சதுர அடி ஒன்றுக்கு, மூவாயிரம் ரூபாய் வரை விலை போகிறது. இதை வைத்து பார்த்தால், 12 ஆயிரம் சதுர அடி இடத்தின் தற்போதைய மதிப்பு, மூன்று கோடியே, 60 லட்சம் ரூபாயாகும்.
காலி மனையாக விடப்பட்ட அந்த இடத்தை பாதுகாக்க நகராட்சி நிர்வாகம் தவறியதால், காலப்போக்கில் சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அந்த இடம், தற்போது முழுமையாக தனியார் வசம் உள்ளது.
இந்நிலையில் நிஜாம் காலனி இடத்தை வீட்டுமனைகளாக பிரித்து வரைபடம் (லே அவுட்) தயாரித்த அப்போதைய நில அளவைத்துறை அலுவலர் ராமையா, பொதுப்பயன்பாட்டுக்காக நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட இடம், தற்போது தனியார் வசம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். தான் தயாரித்த வரைபடத்தின் நகலுடன் நகராட்சி கமிஷனர் முருகேசனை தொடர்புகொண்ட ராமையா, நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட, 12 ஆயிரம் சதுர அடி இடத்தை காண்பிக்குமாறு கேட்டுள்ளார்.
பல ஆண்டுகள் கடந்துள்ளதால், இதற்கான ஆவணங்களை தேடி கண்டுபிடிப்பது சிரமம் என, கமிஷனர் பதிலளித்துள்ளார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்குரிய ஆவணங்களை பாதுகாக்க முடியாதது என்று கூறியதை கேட்ட ராமையா, நகராட்சி வசம் ஆவணங்கள் இல்லாவிட்டாலும், இவற்றின் நகல் தன்வசம் உள்ளதாக அவர் கூறியும், கமிஷனர் முருகேசன் ஏற்பதாக இல்லை.
விரக்தியடைந்த ராமையா, பொதுபயன்பாட்டுக்காக ஒப்படைக்கப்பட்ட இடம், தற்போது நகராட்சி வசம் உள்ளதா?, இல்லை என்றால் யார் வசம் அந்த இடம் உள்ளது?, அவர் வசம் எப்படி சென்றது? என்பது உள்ளிட்ட பல கேள்விகளை கேட்டு, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், 30 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு நகராட்சி நிர்வாகத்திடம் கோரியுள்ளார். உரிய பதில் கிடைக்காவிட்டால், உயர்நீதிமன்றத்தின் உதவியை நாடவும் ராமையா முடிவு செய்துள்ளார்.
நகராட்சி நிர்வாகத்தின் மீது எழுந்துள்ள இந்த புதிய குற்றச்சாட்டு, நகர்ப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட பொது பயன்பாட்டுக்கான இடங்கள், இன்னும் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதா? அல்லது தனியார் வசம் உள்ளதா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.