ஈரோடு:பவானி, காடையம்பட்டி பகுதியில் ரோடு ஓரத்தில் கொட்டி கிடக்கும் சாயக்கழிவால், அப்பகுதி முழுக்க கடும் துர்நாற்றம் வீசுகிறது.
திருப்பூர் லோக்சபா தொகுதியில் பவானி தொகுதி வருகிறது. ஈரோடு மாநகரம் மஞ்சள் உற்பத்தியில் முன்னனி வகிப்பது போன்று பவானி நகரம் ஜமுக்காளம் மற்றும் நெசவுத் தொழிலில் முன்னனி வகிக்கிறது. இத் தொழிலை நம்பி, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அன்றாடம் பிழைப்பு நடத்தி வருகின்றன. நெசவுத் தொழில் சார்ந்த கைத்தறி பட்டறைகள், விசைத்தறி கூடங்கள் என அனைத்துத் தொழில்களும் இப்பகுதியில் காணலாம். அதோடு மட்டுமல்லாமல், 500க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் உள்ளன.
பவானி, காடையம்பட்டி, சேர்வராயன்பாளையம், தொட்டியபாளையம், செங்காடு ஆகிய பகுதிகளில் இந்த பட்டறைகள் உள்ளன. அதில் இருந்து நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சம் லிட்டர் கழிவுநீர் வெளியேறுகிறது. சாயக்கழிவு நீர் காடையம்பட்டி பிரிவு வழியாக சாலையைக் கடந்து பவானி, சின்னாற்றில் சென்று கலக்குகிறது. இந்த நீரை பயன்படுத்தும் அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் பல்வேறு நோயால் அவதிப்பட்டு வருகின்றனர்.
மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்டுகொள்ளாத நிலையில், பல்வேறு விவசாய அமைப்புகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
சுத்திகரிப்பு நிலையம் அமைக்காத ஆலைகள் மற்றும் அனுமதி பெறாமல் செயல்படும் ஆலைகளை சீல் வைக்க நீதிமன்றம் உத்திரவிட்டது. பல சாயப்பட்டறைகள் சீல் வைக்கப்பட்டன. இருப்பினும் இப்பகுதியில் உள்ள ஒரு சில ஆலைகள் நீர்நிலைகளில் கழிவுநீர் திறந்து விடுவது குறையவில்லை. பவானி பகுதியில் விடப்படும் சாயக்கழிவு நீர், நேரடியாக காடையம்பட்டி பகுதியில் உள்ள பவானி, சின்னாற்றில் சென்று கலக்கிறது.
பவானி-அத்தாணி சாலை ஓரங்களில் செல்லும் சாயக்கழிவு நீருக்கு வடிகாலாய் சிறிய வாய்க்கால் ஓடுகிறது. வாய்க்கால் முழுக்க உப்பாக படிந்து, சேறும் சகதியுமாக கிடக்கிறது. சாக்கடையில் கிடந்த கழிவுகளை தோண்டி சாலை ஓரத்தில் குவித்துள்ளனர். அப்பகுதி வழியே சாலையில் வருவோர், செல்வோர் பெரும் துர்நாற்றத்தில் அவதியுறுகின்றனர். வாகனங்களில் செல்வோர் அப்பகுதியில் சுவாசிக்கவே பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அவ்வழியே நடந்து செல்வோர், மூச்சு விடமுடியாமல் திணறி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாயக்கழிவை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.