சேலம்: சேலம், வ.உ.சி., பூ மார்க்கெட் குறுகிய பகுதியில் இயங்குவதால், இடநெருக்கடி ஏற்பட்டு, பொதுமக்கள் தினம் தோறும் அல்லாடி வருகின்றனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி, "பிக்பாக்கெட்' பேர்வழிகள் பணம், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றவியல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம், சின்னகடை வீதியில், வ.உ.சி., பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட், ஆடு, கோழி இறைச்சி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தினம் தோறும், பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். வ.உ.சி., மார்க்கெட்டின் ஒரு பகுதியில், பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு, 300க்கும் மேற்பட்ட பூ கடைகள் உள்ளன.
சேலம், வ.உ.சி., பூ மார்க்கெட்டுக்கு வீராணம், கன்னங்குறிச்சி, பனமரத்துப்பட்டி, வலசையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து அரளி, சாமந்தி, மல்லிகை, குண்டு மல்லி, காக்கட்டான் என, பல ரக பூக்களை, விவசாயிகள் கொண்டு வந்து, விற்பனை செய்கின்றனர். வியாபாரிகள், 100 ரூபாய்க்கு, 10 ரூபாய் கமிஷன் அடிப்படையில் விவசாயிகள் கொண்டு வரும் மலர்களை விற்பனை செய்கின்றனர்.
பூ மார்க்கெட்டுக்கு தினம் தோறும், நான்கு டன் பூக்கள் வருகிறது. சீஸன் மற்றும் முகூர்த்த காலங்களில் கூடுதல் மலர்கள் விற்பனை செய்யப்படுகிறது.
சேலத்தில் இருந்து, தினம் தோறும், இரண்டு டன் பூக்கள் பெங்களூருக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிகாலை, 3 மணி முதல், இரவு, 10 மணி வரை, பூ மார்க்கெட் இயங்குகிறது. எப்பொழுதும் மக்கள் கூட்டம் அலைமோதும், பூ மார்க்கெட் மிகுந்த இடநெருக்கடியில் இயங்கி வருகிறது.
குறுகிய இடத்தில் வைக்கப்பட்டுள்ள பூ கடைகள், ஆக்கிரமிப்பின் பிடியிலும் சிக்கி தவிக்கிறது. கடைக்காரர்கள் பலகைகளை வெளியே இழுத்து வைத்து மலர்களை கொட்டி விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் கால் வைத்து நடந்து செல்ல முடியாத அளவுக்கு, நெரிசலில் ஏற்படுகிறது.
பூ மார்க்கெட்டில் குத்தகை ஏலம் எடுத்தவர்கள், ஒரு பைக்கு, 30 ரூபாய் வியாபாரிகளிடம் வசூலிக்கின்றனர். இங்கு தினம் தோறும் வெளியேற்றப்படும் பூக்கள் உள்ளிட்ட கழிவு பொருட்களை, மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் அப்புறப்படுத்த வருவதில்லை. வாரத்தில் ஒரு நாள் வரும் மாநகராட்சி ஊழியர்கள், வியாபாரிகள் காசு கொடுத்தால் மட்டுமே, குப்பைகளை அள்ளி செல்கின்றனர்.
மழை காலங்களில் மார்க்கெட் உள்பதியில் தேங்கும் சகதியில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படும். பூ வியாபாரிகள் பல ஆண்டுகளாக இட நெருக்கடிக்கு தீர்வு காண மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டு வருகின்றனர்.
புது பஸ் ஸ்டாண்ட் அருகே பூ மார்க்கெட்டுக்கு இடம் ஒதுக்கி கொடுப்பதாக தெரிவித்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இடநெரிசலை பயன்படுத்தி, "பிக்பாக்கெட்' பேர்வழிகள் பொதுமக்களிடம் பண பறிப்பு, செயின் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வ.உ.சி., பூ மார்க்கெட்டுக்கு, பொதுமக்கள் வந்து செல்லும் வகையிலான விசாலமான இட பகுதிக்கு மாற்றிடவும், "பிக்பாக்கெட்' பிரச்னைக்கு தீர்வு காணவும், சுகாதார வசதி செய்து கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.