சின்னமனூர்:விவசாய பயன்பாட்டிற்கு, தினந்தோறும் கொடுக்கப்பட வேண்டிய மின்சாரம், மின்துறையின் அலட்சியத்தால், மாதத்தில் 10 நாட்கள் மட்டுமே சப்ளையாவதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம், கன்னிசேர்வைபட்டி பகுதியில் ஆயிரத்து 500 ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. வாழை, திராட்சை, தென்னை, சோளம் பயிரிடப்பட்டுள்ளது. விவசாய பயன்பாட்டிற்கு மட்டும் இப்பகுதியில் 10 டிரான்ஸ்பார்மர்கள் வாயிலாக மின்சாரம் சப்ளையாகிறது. இதில் எஸ்.எஸ். 6 ம் எண் டிரான்ஸ்பார்மரில், 225 ஏக்கர் நிலத்திற்கு தேவையான மின்சாரம் சப்ளையாகிறது.
இந்த டிரான்ஸ்பார்மரிலிருந்து, மின்சாரம் கடந்த 6 மாதங்களாக முறையாக சப்ளை செய்யப்படவில்லை. இரண்டு நாட்கள் சப்ளை நிறுத்தப்பட்டு ஒரு நாள் சப்ளையாகும். இப்படி மாதத்திற்கு 10 நாட்கள் மட்டுமே மின் சப்ளை கொடுக்கப்படுகிறது. இதனால் இந்த டிரான்ஸ்பார்மரின் வாயிலாக கொடுக்கப்படும் மின்சாரத்தில் பாசன வசதிபெறும் 225 ஏக்கரில் பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகிறது.இப்பகுதி விவசாயிகள் மின்வாரியத்தில் பல முறை முறையிட்டும் பயனில்லை. மின்துறை அலட்சியம் செய்துவருவதால், கடந்த 6 மாதங்களில் இரண்டுமுறை விவசாயிகளே தங்களது சொந்த செலவில் இந்த டிரான்ஸ்பார்மருக்கு காயில் கட்டியுள்ளனர். பழுதை சரிசெய்யாமல் மின்துறை அலட்சியம் செய்து வருவதால் கன்னிசேர்வைபட்டி விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.