சென்னை : பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு, மதுரை கலெக்டர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய கோரி, தலைமைச் செயலரிடம், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி மனு அளித்தார். மதுரையில், இம்மாதம், 20ம் தேதி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில், அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், நாடக காதல் திருமணங்ளால், இளம்பெண்கள் மற்றும் சமுதாயத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, விவாதிக்கப்பட்டு, ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், செய்தியாளர்களிடம் பேசிய, ராமதாஸ், தீர்மானங்கள் குறித்து விளக்கினார். இதையடுத்து, சில அமைப்பினர், மதுரை கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில், ராமதாஸ் வன்முறையை தூண்டும் விதத்தில்,பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக தெரிவித்திருந்தனர்.
தொடர்ந்து, "அடுத்த இரு மாதங்களுக்கு, மதுரை மாவட்ட எல்லைக்குள் நுழைய, ஏன் தடை விதிக்கக் கூடாது' என்பது குறித்து, 26ம் தேதி (நேற்று) விளக்கம் அளிக்கும்படி, ராமதாசுக்கு, மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், ராமதாஸ் தரப்பில், இதற்கு பதில் அளிக்கவில்லை.
இதையடுத்து, நேற்று, சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்த, பா.ம.க., தலைவர் மணி, தலைமைச் செயலர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில், மதுரை கலெக்டர் அளித்த நோட்டீசை ரத்து செய்யும்படி, கோரிக்கை விடுத்திருந்தார்.