Tiruppavai-Tiruvempavai | மார்கழி வழிபாடு : திருப்பாவை - திருவெம்பாவை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மார்கழி வழிபாடு : திருப்பாவை - திருவெம்பாவை

Added : டிச 26, 2012
Advertisement
மார்கழி வழிபாடு : திருப்பாவை - திருவெம்பாவை

மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் உங்கள் இனிய குரலில் பாடி மகிழுங்கள்.

திருப்பாவை

பாடல் - 12


கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றிச்
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: பசியால் கதறும் கன்றுகளை எண்ணிய எருமைகள், தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றன. இவ்வாறான, பால்வளம் மிக்க எருமைகளுக்கு
சொந்தக்காரனான ஆயனின் தங்கையே! கொட்டும் பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு, அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம். நீயோ, இன்னும் எழாமல் இருக்கிறாய். எல்லாரும் எழுந்த பின், உனக்கு மட்டும் ஏன் இந்த பேருறக்கம்?

திருவெம்பாவை

பாடல் - 12


ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்

பொருள்: தோழியரே! இப்போது வாய்த்துள்ள பிறவியாகிய துன்பம் இனிமேலும் வராமல் தடுக்கும் கங்கையைத் தலையில் கொண்டவனும், கையில் அக்னியுடன் நடனமாடும் கலைஞனும், வானத்தையும், பூலோகத்தையும், பிற
உலகங்களையும் காத்தும், படைத்தும், அழித்தும் விளையாடுபவனுமான தன்மைகளைக் கொண்டவன் நம் சிவபெருமான். அவனை, நம் கரங்களில்உள்ள வளையல்கள் ஒலிஎழுப்பவும், இடுப்பில்உள்ள ஆபரணங்கள் பேரொலி எழுப்பவும், பூக்களையுடைய பொய்கையில் நீந்தி மகிழ்ந்து, "சிவாயநம' என்னும் மந்திரம் சொல்லி வழிபடுவோம். அவனது
பொற்பாதத்தை வணங்கி மகிழ்வோம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை