நிதிமோசடி குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், மர்ம நபர்களால் கடத்தப்படும் சம்பவங்கள் கோவை, திருப்பூரில் அதிகரித்து வருகின்றன. "மோசடி வழக்குகளில், போலீஸ் நடவடிக்கை மீதான நம்பிக்கை, முதலீட்டாளர்களிடம் குறைந்து வருவதே, இதுபோன்ற கடத்தல்களுக்கு முக்கிய காரணம்' என, கூறப்படுகிறது.
கோவை, திருப்பூரில் முன்னெப்போதும் இல்லாத அளவில், நிதி மோசடி குற்றங்கள் அதிகரித்துள்ளன. நடப்பாண்டில், புற்றீசல்போல முளைத்த எண்ணற்ற ஈமு கோழி நிறுவனங்கள், பொதுமக்களிடம் பல கோடி ரூபாயை சுருட்டின. அடுத்ததாக, நாட்டுக்கோழி, வான் கோழி, ரியல் எஸ்டேட் என்ற பெயரில், மேலும்பல மோசடி நிறுவனங்கள் தோன்றி, தங்கள் பங்குக்கு பணத்தை அபகரித்தன.இம்மோசடிகளை எல்லாம் விழுங்கும் வகையில், "பைன் பியூச்சர்' "பைன் இந்தியா' என்ற பெயரில், கோவையில் நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 8,000 ரூபாய் வரை வருமானம் அளித்து, இரண்டாண்டு முடிவில், முதலீட்டுத்தொகையை திரும்ப வழங்குவதாகவும் அறிவித்தன. இதையடுத்து, பல ஆயிரம் முதலீட்டாளர்கள் தலா 5 லட்சம், 10 லட்சம் என, பல நூறு கோடி ரூபாயை முதலீடு செய்தனர்; இரு மாதங்களில் அந்நிறுவனம் மூடுவிழா கண்டது; முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர போலீஸ் மற்றும் மாவட்ட போலீஸ் அலுவலகங்களில் புகார் அளித்தனர். எனினும், மோசடி நபர்கள் மீதான நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டாததால், தங்களது முதலீட்டுத் தொகை திரும்பக்கிடைக்குமா? என, விரக்தியடைந்துள்ளனர். ஒரு சில முதலீட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள், ரவுடிகளின் உதவியையும் நாடியதாக கூறப்படுகிறது.இதன்காரணமாக, நிதிமோசடி குற்றவாளிகள் கடத்தப்படும் சம்பவங்கள், அடுத்தடுத்து நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. சமீபத்தில், கோவையில் "பைன் பியூச்சர்' மோசடி நிறுவன நிர்வாகி விவேக் என்பவரை கடத்த முயன்ற கும்பலை, பீளமேட்டில் போலீசார் கைது செய்தனர்; ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈமு அதிபர் கொலை :
திருப்பூர், பொல்லிகாளிபாளையம், பொன்கோவில்நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட "ஜோதிவேல் ஈமு கோழி நிறுவனம்' கரூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பூர், கோவையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நபர்களிடம் 300 கோடி ரூபாயை சுருட்டியது. நிறுவன இயக்குனர்கள் மோகன், அமுல் ஆகியோர் தலைமறைவாகினர். அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள், கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில், கடந்த 10ம் தேதி காரில் கடத்தப்பட்ட மோகன், கர்நாடகாவில் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
மூன்றாவது கடத்தல்:
சோமனூர் அடுத்த தேவராயம்பாளையம், சிங்கப்பூர் நகரைச் சேர்ந்த மோகன் என்பவர், "பைன் பியூச்சர்' நிறுவன ஏஜன்டாக செயல்பட்டு, மக்களிடம் பல லட்சம் ரூபாயை வசூலித்து, நிறுவனத்தில் செலுத்தினார். அந்த நிறுவனம் மூடப்பட்டதால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல், கடந்த 24ம் தேதி மோகனை கடத்தியது. போலீசார் தங்களை தேடுவதை அறிந்த கும்பல், மோகனை விடுவித்து தப்பியது. அடுத்தடுத்து நடக்கும் கடத்தல் சம்பவங்கள், போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன.
இவற்றின் பின்னணி குறித்து, பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றிய அனுபவமிக்க, போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:நிதி மோசடி குற்றங்களில் தொடர்புடைய நபர்கள் கடத்தப்படுவதும், கொல்லப்படுவதும், போலீஸ்துறை மீது, மக்கள் நம்பிக்கை இழந்துவருவதையே காட்டுகிறது. முதலீட்டாளர்களிடம் புகார் பெற்றதும், போலீசார் துரிதமாக செயல்பட்டு, மோசடி நபர்களின் சொத்து மற்றும் வங்கி பண பரிமாற்றங்களை முடக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும். இந்நடவடிக்கையில் சுணக்கம் ஏற்படுமானால், மக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக முதலீட்டாளர்கள் கருத வாய்ப்புள்ளது. தற்போது, அதிகரித்துள்ள நிதி மோசடி குற்றங்களை விசாரிக்க, பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவில் போதிய எண்ணிக்கையில் போலீசார் இல்லை; அடிப்படை வசதிகளும் கிடையாது. வழக்குகள் அதிகளவில் தேங்க இதுவும் முக்கிய காரணம். பணத்தை இழந்த முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமான நடவடிக்கைகளை விரைவுபடுத்தினால் மட்டுமே, கடத்தல் மற்றும் கொலையை தடுக்க முடியும்.இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மக்களின் புத்தி எங்கே சென்று விட்டது? எல்லோரும் தான் பணம் வாங்கி கொண்டு பறந்து விடுகிறார்கள் என்று தெரிகிறது அல்லவா? பிறகு எதற்கு VOLUNTEER ஆக போய் தலையை கொடுக்கிறீர்கள்? நல்ல முறையில் சம்பாதித்த பணம் என்றால் கஷ்டம் தெரியும், வங்கியில் போடலாம் அதில் வரும் வட்டியை வாங்கி கொள்ளலாம். இது எல்லாம் நம்பர் 2 அமௌன்ட். இதற்கு கணக்கு இருக்காது. அதனால் தான் இதை போன்ற மோசடி கும்பலிடம் கொடுத்து ஏமாறுகிறார்கள். போலீசிடம் சென்றால் கணக்கு வழக்கு என்று வம்பு வரும். அதனால் ரௌடிகளை தஞ்சமடைகிறார்கள். வரி கட்டாமல் அரசை ஏமாற்றலாம் என்று நினைத்தவர்கள் தற்போது முதலுக்கே மோசமாகி ரெடி, அரசியல்வாதி என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
போலீஸ் மற்றும் ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை குறையும்போது பொது மக்கள் சட்டத்தை கையில் எடுத்து கொள்வது தவிர்க்க முடியாதது...............பொது மக்களே நீங்களும் பேராசை பட்டு தொடர்ந்து இந்த மாதிரியான நிதி நிறுவனங்களில் மூளையை கழட்டி வைத்து விட்டு முதலீடு செய்து வருகிறீர்கள். கடந்த பதினைந்து வருடமாக இது போன்ற நிறுவனங்கள் வித விதமான பெயர்களில், வித விதமான பொருளை காட்டி முதலீட்டை சுருட்டி வருகின்றன............நீங்கள் இனிமேலாவது திருந்தி வங்கி அல்லது mutual fund, insurance போன்றவற்றில் முதலீடு செய்யுங்கள்..........
நம்முடைய நாட்டில் தான் finance கம்பெனி நடத்தி கொள்ளை அடித்து விட்டு மூடு விழா நடத்திய பிறகு போலீஸ் நடவடிக்கை எடுக்கலாமா வேண்டாமா என்று யோசனை செய்து கொண்டு இருப்பார்கள். பணம் கட்டி ஏமாந்தவர்கள் எந்த முறையில் ஆவது பணத்தை வசூல் செய்வது தவறு ஆகாது. கடத்த படுபவர்கள் மகாத்மாக்கள் அல்லவே. மொள்ளமாரிகளும் முடிசரிகிகளும் தான்.
vellore உமாபதி, மலேசியா.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.