மும்பை: "சூரிய அஸ்தமனத்திற்கு பின், பெண்களை கைது செய்து, எந்த ஒரு குற்றத்திற்காகவும், காவலில் வைக்க கூடாது' என்ற கண்டிப்பான உத்தரவை, அனைத்து காவல் நிலையங்களுக்கும் பிறப்பிக்கும்படி, மகாராஷ்டிரா டி.ஜி.பி.,க்கும், மும்பை நகர போலீஸ் கமிஷனருக்கும், மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.டில்லியில், ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வலியுறுத்தி, விமர்சனங்கள் எழுந்துள்ளன.அந்த வகையில், 2007ம் ஆண்டு மும்பையில், பெண் ஒருவரை, போலீசார், இரவில் கைது செய்து, காவலில் வைத்த வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.மும்பையில், 2007ம் ஆண்டு, ஜூன், 13ம் தேதி மாலை, பாரதி காந்தார் என்ற பெண்ணை, போலீசார் கைது செய்து, மாதுங்கா காவல் நிலையத்தில் காவலில் வைத்தனர். அவரை காவலில் வைப்பதற்கு, சட்டப்பூர்வ அனுமதி பெறவில்லை. அடுத்த நாள், அப்பெண், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.அவர் விடுதலையானதும், தன் மீதான கைது நடவடிக்கை, காவல் நிலையத்தில், எவ்விதமான சட்டப்பூர்வ அனுமதியின்றி, காவலில் வைத்தது குறித்து, போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தார். அதில், சம்பந்தப்பட்ட போலீசார் மீதுநடவடிக்கை எடுக்க கோரினார்.இதற்கு, கமிஷனரிடம் இருந்து பதில் வரவில்லை. இதையடுத்து, மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த மனு மீதான விசாரணை, நேற்று நீதிபதிகள், ஏ.எஸ்.ஓகா மற்றும் எஸ்.எஸ். ஷிண்டே அடங்கிய பெஞ்ச் முன் வந்தது.போலீசார் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், "மனுதாரர் மீது செக் மோசடி தொடர்பாக பல வழக்குகள் உளளன. இதில், பல குற்றங்கள் ஜாமினில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் உள்ளன' என, குறிப்பிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:எந்த ஒரு வழக்கிலும், பெண் ஒருவரை, சூரிய அஸ்தமனத்திற்கு பின்னோ, சூரிய உதயத்திற்கு முன்னரோ, கைது செய்து காவலில் வைக்க கூடாது. அப்படி காவலில் வைப்பது என்றால், சம்பந்தப்பட்ட பகுதிக்குள் வரும் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அனுமதி வாங்க வேண்டும்.இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள், சட்டத்தை மீறி செயல்பட்டது தெளிவாக தெரிகிறது. அவர்கள் மீது,போலீஸ் கமிஷனர் விசாரணை நடத்தி, மூன்று மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, நஷ்டஈடாக, 5,000 ரூபாய் அளிக்க வேண்டும்.இனிமேல், இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்கும் வகையில், "சூரிய அஸ்தமனத்திற்கு பின், பெண்களை கைது செய்து, எந்தவொரு குற்றத்திற்காகவும், காவலில் வைக்க கூடாது' என, அனைத்து காவல் நிலையங்களுக்கும் கண்டிப்பான உத்தரவை, டி.ஜி.பி.,யும், நகர போலீஸ் கமிஷனரும் பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் கண்டிப்புடன் கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.