ஐதராபாத்:ஆந்திராவில், சட்டசபை தேர்தல் நெருங்குவதால், அங்குள்ள அரசியல்வாதிகளின் பார்வை, மீடியாக்கள் மீது திரும்பியுள்ளது. "டிவி' சேனல்களில், தங்களை பற்றிய செய்திகள் வெளியாக வேண்டும் என்பதற்காக, ஆளாளுக்கு, "டிவி' சேனல்களை, துவங்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதனால், கடும் குழப்பமடைந்துள்ள, ஆந்திர மாநில மக்கள், "டிவி'க்களுக்கு, மூடு விழா நடத்தி விட்டு, பத்திரிகைகளை படிக்க துவங்கியுள்ளனர்.
ஆந்திராவில், 2014ல், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. லோக்சபா தேர்தலும், சட்டசபை தேர்தலுடன், சேர்ந்து நடக்கவுள்ளதால், ஆந்திர மாநில அரசியல்வாதிகளை, பரபரப்பு தொற்றியுள்ளது. ஆளும் கட்சியாக உள்ள, காங்கிரஸ், "எப்படியாவது, ஆட்சியை தக்க வைக்க வேண்டும்' என்ற, முயற்சியுடன், களம் இறங்கியுள்ளது.எதிர்க்கட்சிகளான, தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பா.ஜ., மற்றும் இடதுசாரி கட்சிகளும், தேர்தலை எதிர்கொள்ள, ஆயத்தமாகியுள்ளன. இவர்களுடன், புதிதாக கட்சி துவங்கியுள்ள, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர், ஜெகன் மோகன் ரெட்டியும், ஆந்திர அரசியலில், மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில், சிறையில் இருந்தபடியே, காய் நகர்த்தி வருகிறார்.
தேர்தல் நெருங்குவதால், தங்களைப் பற்றிய செய்திகள், தினமும் வெளியில் வரவேண்டும் என, அரசியல்வாதிகள் விரும்புகின்றனர். ஜெகன் மோகன் ரெட்டிக்கு, சொந்தமாக, ஏற்கனவே, "சாக்ஷி' என்ற பெயரில், "டிவி' சேனலும், அதே பெயரில் தினசரி பத்திரிகையும் உள்ளன. இதில், தொடர்ந்து, அவரைப் பற்றிய, செய்திகள் இடம் பெறுகின்றன.
தெலுங்கானா ஆதரவாளர்களுக்காக, "டி' என்ற பெயரில், "டிவி' சேனல் செயல்பட்டு வருகிறது. சந்திரபாபு நாயுடுவின், தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக, "ஈநாடு' என்ற சேனலும், அதே பெயரிலான தினசரியும் செயல்படுகின்றன.
இந்நிலையில், ஆந்திராவில் உள்ள, முக்கிய அரசியல் கட்சியினர், அனைவருக்குமே, தங்கள் சார்பில், ஒரு, "டிவி' சேனல் இருந்தால், தங்களைப் பற்றிய செய்திகள், தினமும் வெளிவருமே' என்ற ஆசை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, கிரண்குமார் ரெட்டியின் உறவினர்கள், "ஐ நியூஸ்' மற்றும், "ஏடிவி' ஆகியவற்றின், பெரும்பாலான பங்குகளை வாங்கியுள்ளனர். இதையடுத்து, இந்த இரண்டு சேனல்களும், கிரண்குமார் ரெட்டியை பற்றிய செய்திகளை, தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன.
மாநில போக்குவரத்து அமைச்சரும், ஆந்திர மாநில காங்., தலைவருமான, சத்யநாராயணாவும், தன் பங்கிற்கு, களத்தில் இறங்கியுள்ளார். பிரபலமான, "ஜி24 கண்டலு' என்ற, "டிவி' சேனலை, இவரின் உறவினர்கள், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். நஷ்டம் ஏற்பட்டதால், மூடப்பட்டிருந்த, இந்த சேனல், தற்போது தேர்தல் நெருங்குவதால், மீண்டும், செயல்படத் துவங்கியுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக, "10 டிவி' என்ற சேனலும், அடுத்த மாதம் முதல், நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், "டிவி 99' என்ற, சேனலை, அடுத்த ஆண்டு முதல், துவங்க முயற்சித்து வருகிறது. பா.ஜ., சார்பில், "ஆரஞ்ச் டிவி'என்ற சேனல், விரைவில் துவக்கப்படவுள்ளது.
இதன் அலுவலகத்துக்காக, ஐதரபாத்தில், நான்கு மாடி கட்டடம் ஒன்று, விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. சமீபகாலமாகவே, ஆந்திராவில், "டிவி' சேனல்களின் எண்ணிக்கை, வேகமாக அதிகரித்து வருகின்றது. தற்போது, 16 செய்தி சேனல்கள், இயங்கி வருகின்றன. இவற்றில், பெரும்பாலானவை, அரசியல்வாதிகளுக்கு சொந்தமானவை."டிவி' சேனல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குழப்பமடைந்துள்ள, ஆந்திர மாநில பொதுமக்கள், "டிவி'க்களுக்கு மூடு விழா நடத்தி விட்டு, நடுநிலையான தினசரி பத்திரிகைகளை படிக்க துவங்கியுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.