நிலக்கோட்டை: மழை இல்லாமல் வைகை ஆறு வறண்டதால், ஆற்றுப்படுகை விவசாயிகள் இரு போக நெல் சாகுபடி செய்யவில்லை. வைகை ஆற்றில் உள்ள குடிநீர் திட்ட கிணறுகள் வறண்டு வருவதால் கிராமங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. திண்டுக்கல், நிலக்கோட்டை தாலுகாவில் ராமநாயக்கன்பட்டி, கண்ணாபட்டி, கொபட்டி, சிவஞானபுரம், குல்லிசெட்டிபட்டி, சித்தர்கள்நத்தம், விளாம்பட்டி, அணைப்பட்டி, ராமராஜபுரம், மட்டப்பாறை பகுதிகளில் வைகை ஆறு,
பெரியாறு கால்வாய் பாசனம் மூலம் இருபோக நெல் சாகுபடி செய்து வருகின்றனர். முதல் போகம் ஜூனில் துவங்கி அக்டோபரில் முடியும். இரண்டாம் போகம் அக்டோபர் மாத இறுதியில் துவங்கி ஜனவரி வரை நீடிக்கும். தென்மேற்கு பருவ மழை பொய்த்ததால், முதல் போக சாகுபடி செய்யவில்லை. இரண்டாம் போகத்தின் போது பத்து நாட்கள் தண்ணீ திறந்து விட்டனர். இதை நம்பி விலைக்கு விதை நெல் வாங்கி நாற்றாங்கால் விதைத்தனர். வடகிழக்கு பருவ மழை பொய்த்ததால், வைகை அணைக்கு நீர் வரத்து இல்லை. அணையிலிருந்தும் நீர் திறக்கப்படவில்லை. மழையில்லாததால் விதைத்த நாற்றாங்காலை அப்படியே விட்டு விட்டனர். நாற்றாங்காலில் ஆடு,மாடுகள் மேய்கின்றன.
வைகை ஆற்றுப் பாசனத்தை நம்பியிருக்கும் விளாம்பட்டி விவசாயி ரவிச்சந்திரன் கூறுகையில்,""வைகை அணையை நம்பி 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் கள்ளந்திரி வரை உள்ளது. நிலக்கோட்டை தாலுகாவில் மட்டும் 2 ஆயிரம் ஏக்கரில் இரு போக நெல் சாகுபடி நடக்கும். மழை இல்லாததால் இரு போகத்தையும் இழந்துவிட்டோம். ஒவ்வொரு விவசாயியும், நாற்றாங்கால் விதைக்க 20 ஆயிரம் ரூபாய் செலவிட்டுள்ளோம். காவிரி டெல்டா பகுதியில் வறட்சி நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வைகை பாசனத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்,'' என்றார்.
வைகை ஆறு வறண்டதால், ஆற்றங்கரையோரம் உள்ள கிணறுகளும் வற்றி விட்டன. வைகையை நம்பி உள்ள நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியங்கள், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, சின்னாளபட்டி பேரூராட்சிளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடிநீர் திட்ட கிணறுகளும் வற்றி வருகின்றன. இதே நிலை நீடித்தால் கிராமங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என ஊராட்சி தலைவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.