கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட, பாரம்பரியமிக்க தனி ஆயுதப்படை, நூற்றாண்டை தொடும் நேரத்தில், அதை பட்டாலியனாக மாற்ற முயற்சி நடந்து வருகிறது. கமுதியில், ராமநாதபுரம் மன்னர்களால் ஆங்கிலேயர்கள் பிரமிக்கும் அளவில் உருவாக்கப்பட்ட கோட்டை உள்ளது. கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள் தங்கிய கோட்டை இது. சுதந்திரப் போராட்டத்தின் போது, நேதாஜியின், ஐ.என்.ஏ.,வில் அதிகளவில் சேர்ந்தவர்கள் என்ற பெருமை கமுதி, முதுகுளத்தூர், கடலாடிக்கு உண்டு. வெள்ளையர்களால் வாய்ப்பூட்டுச் சட்டம் போடப்பட்ட, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பிறந்தது என தொடர்ந்துகொண்டே செல்லும் வரலாற்று சுவடுகளை கொண்டது கமுதி. இங்கு சுதந்திர போராட்ட காலத்தில், இப்பகுதியை வீரர்களை எதிர்கொள்ள முடியாமல் ஆங்கிலேயர்கள், 1918ம் ஆண்டு, "கமுதி தனி ஆயுதப்படை'யை உருவாக்கினர். அதன் மூலம் சிறப்பு பயிற்சி அளித்து, துப்பாக்கிகளுடன் போலீசாரை, 24 மணி நேரமும் வலம் வரவைத்தனர். அந்த அளவிற்கு சுதந்திரப்போராட்டம் இப்பகுதியில் தீவிரமாக இருந்தது. சுதந்திரத்திற்கு பிறகும், தூவல் கலவரம், முதுகுளத்தூர் கலவரம், தமிழகத்தையே உலுக்கிய, 1957 கலவரம் என, இன்று வரை கலவரங்கள் ஓயாததால், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி உட்பட, தென் மாவட்டங்களில் ஏற்படும் கலவரத்தை ஒடுக்கவே, இந்த தனி ஆயுதப்படை தொடர்ந்து நீடிக்கிறது. இங்குள்ள, 157 போலீசாருக்கு, ஆங்கிலேயர்கள் கட்டிக்கொடுத்த, 57 குடியிருப்புகளே இன்றும் உள்ளன. மீதமுள்ளவர்கள், வெளியில் வாடகைக்குத்தான் தங்கியிருக்கிறார்கள். ராமநாதபுரம் எஸ்.பி.,யின் கட்டுப்பாட்டில் உள்ள இப்படையினர், இம்மாவட்டம் முழுவதும் மட்டுமின்றி, மற்ற மாவட்டங்களிலும், கலவர நேரத்தில் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனால் இவர்களை, இங்கிருந்து காலி செய்துவிட்டு, டி.ஜி.பி.,யின் கட்டுப்பாட்டில் உள்ள பட்டாலியன் படையை இங்கு அமைக்கவிருப்பதாகவும், அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. இங்கு பணிபுரியும், போலீசார் மட்டுமின்றி, இப்பகுதி பொதுமக்கள், நாராயணபுரம் ஊராட்சி நிர்வாகத்தினர், ஆயுதப்படையை மாற்றக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்பகுதி வளர்ச்சிக்காக, எஸ்.பி.,யாக, செந்தில்வேலன் இருந்தபோது, காவல் பயிற்சி கொண்டு வரப்பட்டு, மூன்று முறை போலீசார் பயிற்சியும், முடித்து சென்று விட்டனர். இதை பட்டாலியனாக மாற்றும் போது, காவல் பயிற்சி மையம் மூடுவிழா காணும், சூழலும் உருவாகியுள்ளது. அதையெல்லாம் விட, ஆயுதப்படையை மாற்றி, பட்டாலியனை கொண்டு வரும் பட்சத்தில் அவர்களுக்கு கலவர நேரத்தில் உத்தரவு வழங்க, எஸ்.பி.,க்கு அதிகாரம் இல்லாததால், டி.ஜி.பி.,யின் உத்தரவுக்காக காத்திருக்க வேண்டியிருக்கும். பட்டாலியனில் குறைந்த பட்சம், 800 முதல் 1,000 போலீசார் இருப்பதால், அவர்கள் தங்குவதற்கோ, பயிற்சிக்கோ போதுமான இட வசதியோ, கட்டட வசதியோ இல்லை என, போலீசார் தெரிவித்தனர்.