மேச்சேரி அருகே, அனுமதி இன்றி இயங்கிய வெடி தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட விபத்தில், பலியான எட்டு பேர் உடல்கள், நேற்று எரியூட்டப்பட்டன. ஒரே பகுதியை சேர்ந்த, ஐந்து பேர் பலியானதாலும், உறவினர்கள் வீடு, வீடாக சென்று துக்கம் விசாரித்ததாலும், பாரக்கல்லூர் கிராமமே சோகத்தில் மூழ்கியது. சேலம் மாவட்டம், மேச்சேரி அடுத்த மன்னாதன் காட்டுவளவு கிராமத்தை சேர்ந்தவர், சரவணன்; இவர் மனைவி சாந்தி, 35. இவர், அருகிலுள்ள செங்காட்டூர் பிரிவு ரோட்டில், வாணவெடி தயாரிப்பு ஆலை நடத்தினார். வாணவெடி தயாரிப்புக்கான உரிமம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்தது.
உரிமம் புதுப்பிக்காத நிலையில், சாந்தி, தன் ஆலையில் வாணவெடி, பாறை தகர்க்கும் தோட்டா ஆகியவற்றை, சட்ட விரோதமாக தயாரித்தார். இங்கு, 17க்கும் மேற்பட்டோர் வேலை செய்தனர். நேற்று முன்தினம், ஆலையில் நடந்த வெடி விபத்தில், எட்டு பேர் உடல் கருகி பலியாயினர்; படுகாயம் அடைந்த, ஆறு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
பிரேத பரிசோதனைக்கு பின், விபத்தில் பலியான வெடி தயாரிப்பு ஆலை உரிமையாளர் சாந்தி, அவரது மகன் சூர்யா உடல், சொந்த ஊரான மன்னாதன் காட்டுவளவிலும்; சிவகாமி உடல், அவரது சொந்த ஊரான வெள்ளாற்றிலும் நேற்று எரியூட்டப்பட்டது. ஈஸ்வரி, அவரது மகள் தீபா உடல், பாரக்கல்லூர் மயானத்திலும்; தங்கம், கேசவன், விஜயா உடல், அவர்களது சொந்த நிலத்தில் எரியூட்டப்பட்டது. பலியான ஐந்து பேரும், ஒரே கிராமத்தைச் சேர்ந்த உறவினர்கள். அவர்களது உறவினர்கள், ஒவ்வொரு வீடாக சென்று, துக்கம் விசாரித்து கதறி அழுதனர். இதனால், கிராமமே நேற்று சோகத்தில் மூழ்கியது.
பள்ளி மாணவர் மூவர் பலி : விபத்தில் பலியான சூர்யா, மேச்சேரி ராகவேந்திரா பள்ளியில், மூன்றாம் வகுப்பும்; தீபா, பாராக்கல்லூர் அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பும், கேசவன், அதே பள்ளியில், எட்டாம் வகுப்பும் படிக்கின்றனர்.
தப்பிய மாணவி : வெடிதயாரிப்பு ஆலை உரிமையாளர் சாந்தியின் மகன் சூர்யா, மகள் தனுஸ்ரீ இருவரையும், நேற்று முன்தினம் ஆலைக்கு கூட்டி சென்றார். விபத்து நடப்பதற்கு முன், தனுஸ்ரீ அருகிலுள்ள கடைக்கு சென்றதால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஏற்கனவே தந்தையை இழந்த தனுஸ்ரீ, விபத்தில் தாய், சகோதரனை இழந்து, மாயனத்தில் உறவினருடன் சோகமாக நின்றிருந்தார்.
மர்ம மொபட் : விபத்தில் தரைமட்டமான வாணவெடி தயாரிப்பு ஆலை அருகில், விறகு கட்டைகள் அடுக்கிய நிலையில், மொபட் ஒன்று நின்று கொண்டிருக்கிறது. மொபட் யாருக்கு சொந்தமானது என்பது தெரியவில்லை. மர்ம மொபட் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாணவெடி தயாரிப்பு பணிக்கு செல்லும் பெண்கள், பணியிடத்தில் நைட்டி அணிந்தே வேலை செய்துள்ளனர். இதனால், அவர்கள் மடித்து வைத்திருந்த புடவை, விபத்தில் ஆங்காங்கே மரங்களில் தொங்கி கொண்டிருந்தது.
வெடி விபத்தில் மூன்று தலைமுறையினர் பலி : மேச்சேரி அடுத்த மன்னாதன்காட்டுவளவு கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன்கள் ராஜேந்திரன், சரவணன். கந்தசாமி, 20 ஆண்டுக்கு மேலாக வாணவெடி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். செங்காட்டூர் பிரிவு ரோட்டில், வாணவெடி தயாரிப்பு ஆலை மற்றும் குடோனும் வைத்துள்ளார். சில ஆண்டுக்கு முன், தன் வீட்டில் வாணவெடி தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில், கந்தசாமி உயிரிழந்தார். அவரது மூத்த மகன் ராஜேந்திரன், உப்புபள்ளத்திலுள்ள வெடி தயாரிப்பு ஆலையில் வேலை செய்த போது ஏற்பட்ட விபத்தில், உடல் கருகி பலியானார். இளைய மகன் சரவணன், அவரது மனைவி சாந்தி. செங்காட்டூர் பிரிவு ரோட்டில், வெடிதயாரிப்பு ஆலை நடத்தி வந்த சரவணன், மூன்று ஆண்டுகளுக்கு முன், மஞ்சள்காமாலை நோயால் இறந்து விட்டார். எனவே, அவரது மனைவி சாந்தி தொடர்ந்து வெடிமருந்து ஆலையை நடத்தி வந்தார். ஏற்கனவே, கந்தசாமி, அவரது மகன் வாணவெடி விபத்தில் பலியான நிலையில், நேற்று முன்தினம் நடந்த விபத்தில் மருமகள் சாந்தி, பேரன் சூர்யாவும் பலியாயினர். தாத்தா, மகன், பேரன் என, ஒரே குடும்பத்தில், மூன்று தலைமுறையும் வாணவெடி விபத்தில் பலியானது, கிராம மக்களை வேதனையில் ஆழ்த்தியது.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.