சாஸ்திரி நகர்: திருடிய நகைகளை பெசன்ட் நகர் கடற்கரையில் புதைத்து வைத்ததாக குற்றவாளி சொன்னதால், சிறப்பு பிரிவு போலீசார் அங்கு பல மணி நேரம் தோண்டியும், குண்டுமணி தங்கம் கூட கிடைக்காமல் வெறும் கையுடன் திரும்பினர்.
சென்னை, தி.நகர் துணை கமிஷனர் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், கடந்த ஒரு மாதத்திற்கு முன், ஒரு வீட்டில் புகுந்த திருடர்கள், பீரோவில் இருந்த 115 சவரன் நகைகளையும், 2 லட்சம் ரூபாயையும் திருடிச் சென்றனர். இதையடுத்து, தி.நகர், துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், அடையாறு துணை கமிஷனர் சுதாகர் தலைமையிலான தனிப்படையினரும், இதுகுறித்து விசாரித்தனர். இதில், திருட்டில் ஈடுபட்டது, பழைய குற்றவாளியான, கோடம்பாக்கம், காமராஜ் காலனியைச் சேர்ந்த மார்க்கெட் சேகர், 34, என்பது தெரியவந்தது. அவனை தனிப்படையினர் சுற்றி வளைத்துப் பிடித்து, தீவிர விசாரணை நடத்தினர். இதில், திருட்டியதை ஒப்புக் கொண்டான். மார்க்கெட் சேகருடன் தற்போது சேர்ந்து வாழ்பவர், பெசன்ட் நகர், ஓடை குப்பத்தைச் சேர்ந்த மதனா, 37. இவரும் ஒரு குற்றவாளி. துரைப்பாக்கத்தில், மார்க்கெட் சேகருடன் சேர்ந்து வீடு புகுந்து திருடி உள்ளார். மதனாவின் பெரியம்மா மகன் ரகு, சகோதரிகள் சுமித்ரா மற்றும் கல்பனா. மார்க்கெட் சேகர், தான் திருடும் நகைகளை, மதனாவிடம் கொடுத்து வைப்பார். அவர், தன் சகோதரன் மற்றும் சகோதரிகள் உதவியுடன், பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை பகுதியில், கவர்னர் விருந்தினர் மாளிகை பின்புறம் உள்ள மணலில் அவற்றை புதைத்து வைத்திருப்பதாக, விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து, சிறப்பு பிரிவு போலீசார் நேற்று அதிகாலை முதல், பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். பல மணி நேரம் பல இடங்களில் தோண்டிப் பார்த்தும், குண்டுமணி நகைகள் கூட சிக்காததால், விரக்தியடைந்து புறப்பட்டனர். இதையடுத்து, மார்க்கெட் சேகரிடம் விசாரணையை, போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். துரைப்பாக்கம் திருட்டு வழக்கில் சிக்கிய மதனாவை, துரைப்பாக்கம் போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.