""அரசு மருத்துவமனைகளில், "டெங்கு' காய்ச்சலுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதை, என் மனைவியின் மூலம் அனுபவபூர்வமாக தெரிந்துக் கொண்டேன்,'' என, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., தமிழழகன் கூறினார். திட்டக்குடி, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., தமிழழகன். இவரது மனைவி திராவிட செல்வி, 40. உடல்நிலை பாதிக்கப்பட்ட இவருக்கு, ரத்த பரிசோதனை செய்ததில், "டெங்கு' காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. கடந்த, 21ம்தேதி, கடலூர் மாவட்ட அரசு பொது மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதால், குணமடைந்து வருகிறார்.
ஆனால், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும், அவரது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சிலரும், "தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு, அரசு மருத்துவமனைகளில் சரியான சிகிச்சைகள் அளிக்கப்படுவது இல்லை' என, கூறி வருகின்றனர்.
""உண்மையில், அரசு மருத்துவமனைகளில், "டெங்கு'விற்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதை, என் மனைவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் மூலம் அனுபவ பூர்வமாக தெரிந்துக் கொண்டேன்,'' என்கிறார் தமிழழகன்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது: என் மனைவியை, கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது, அவரின் ரத்தத்தில், தட்டை அணுக்களின் எண்ணிக்கை, 80 ஆயிரம் மட்டுமே இருந்தன. தற்போது, அந்த எண்ணிக்கை, 2.35 லட்சத்தை தாண்டியுள்ளது. இரண்டு நாட்களில் வீடு திரும்ப இருக்கிறார். என் மனைவியை போலவே, பலரும் இங்கு தரமான சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். சில அரசியல்வாதிகள் தான், அரசு மருத்துவமனைகளில், "டெங்கு'விற்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்கின்றனர். அரசு மீது புகார் கூறவில்லை எனில், அவர்களால் கட்சி நடத்த முடியாமல் போய்விடும் என்பதால், இவ்வாறு செய்கின்றனர். இவ்வாறு தமிழழகன் கூறினார். தே.மு.தி.க.,விலிருந்தபடியே, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தர, முதன் முதலில் கிளம்பிய, நான்கு, எம்.எல்.ஏ.,க்களில், இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர், கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வருகிறார்.
நமது நிருபர்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.