மதுரை:மதுரை அரசு மருத்துவமனையில், சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்ட "எக்ஸ்ரே' ஒருங்கிணைப்புத் திட்டம், பல வார்டுகளில் செயல்பட வில்லை.
இங்கு, ரூ.20 லட்சத்தில், "டிஜிட்டல் எக்ஸ்ரே' ஒருங்கிணைக்கும் பணி நடந்தது. "பிலிம் எக்ஸ்ரே' மூலம் எடுக்கப்படும் போது, "பிலிம்' பற்றாக்குறை ஏற்படுகிறது. இதற்காக "டிஜிட்டல் எக்ஸ்ரே' கொண்டு வரப்பட்டது. இதிலும், "சிடி'யாக பதிவு செய்து கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது.
எனவே, கம்ப்யூட்டர் மூலம் வார்டுகள் இணைக்கப்பட்டன. நோயாளியை படம் எடுத்தவுடன், கம்ப்யூட்டரில் அந்த எக்ஸ்ரேவை, வார்டு டாக்டர் பார்த்து, சிகிச்சை அளிக்க
முடியும்.
மக்களிடம் வரவேற்பு பெற்ற இத்திட்டம், தொடர்ந்து செயல்படாததால், "சிடி' பதிவு செய்வது தாமதமாகிறது. விபத்தில் அடிபடும் அவசர சிகிச்சை நோயாளிகளுக்கு கூட, உடனடியாக "சிடி' கிடைப்பதில்லை.
இதனால் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. தாமதத்தை தவிர்க்கும் வகையில், அத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த, டீன் மோகன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.