சென்னை: "கூட்டணி கட்சிகளை திருப்திபடுத்தி, ஆட்சியை தக்க வைத்து கொள்வதிலேயே, மத்திய அரசு குறியாக உள்ளது. பொதுமக்கள் நலனை புறக்கணித்து வருகிறது' என, முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டியுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், டில்லியில் நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில், அவர் பேசியதாவது: ஒரு சடங்காக, தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் நடக்கிறது. 12வது ஐந்தாண்டு திட்டத்தில் சேர்க்க, மாநில அரசுகள் ஏற்கனவே பல திட்ட பரிந்துரைகளை அளித்துள்ளது. ஆனால், திட்ட இறுதி அறிக்கையில், மாநில அரசுகளின் பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை.
இப்போக்கு, மத்திய, "மைனாரிட்டி' அரசின், பெரிய அண்ணன் போக்கையே, வெளிப்படுத்துகிறது. மக்களின் பிரச்னைகளில் அரசு போதிய கவனம் செலுத்துவதில்லை. ஆட்சியை தக்க வைத்து கொள்வதிலேயே, ஒவ்வொரு நாளையும் மத்திய அரசு செலவிடுகிறது. நாட்டின் பொருளாதார மேலாண்மையில், பரிதாபமாக தோல்வியடைந்துள்ளது. இதன் எதிரொலி, மக்கள் மீது சுமத்தப்படுகிறது. மத்திய அரசின் அணுகுமுறையால், தமிழகம் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
தமிழக முதல்வராக, நான் பொறுப்பேற்றவுடன், மத்திய அரசின் உதவிக்காக திட்டங்களை அளித்தேன். பலமுறை அதுகுறித்து நினைவூட்டல்களையும் செய்தேன். இதுவரை, அக்கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.
தொழில் முதலீடுகளை கவர்வதற்காக, தமிழக அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தை உருவாக்கினோம். மத்திய அரசின் போதிய உதவி இல்லாததால், விமான நிலையம், மெட்ரோ ரயில் மற்றும் சாலை திட்டங்களை நிறைவேற்றுவதில், பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடும், சட்ட கடமையை நிறைவேற்றுவதில் கூட, மத்திய அரசு செயல்படாமல் உள்ளது. தமிழக மீனவர்களை காப்பாற்றுவதிலும் தோல்வியடைந்துள்ளது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும், ஒரு கட்சியின், குடும்ப வியாபாரத்துக்காக, தமிழக அரசு கேபிள் நிறுவனத்துக்கு, டிஜிட்டல் உரிமம் வழங்கப்படவில்லை. அரசை காப்பாற்றிக் கொள்ள, கூட்டணிக் கட்சிகளை திருப்திபடுத்தும் மத்திய அரசு, பொதுமக்களின் நலனை புறக்கணித்து வருகிறது. அதிகாரத்தை குவித்து வைத்துள்ள மத்திய அரசு, மாநில அரசின், மக்கள் நல செயல்பாடுகளை கட்டுப்படுத்தி வருகிறது. மத்திய அரசுக்காக, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாமல் காத்திருக்க மாட்டோம். மக்கள் திட்டங்களை நிறைவேற்ற, எங்களுக்கு பல வழிகள் உள்ளன. 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், தமிழகம் உயரிய வளர்ச்சியை எட்டும். நாட்டின் வளர்ச்சி விகிதத்தை, 12 சதவீதமாக எட்ட இலக்கு நிர்ணயிக்குமாறு கடந்த கூட்டத்தில் வலியுறுத்தினேன். ஆனால், 9 மற்றும் 8.2 என, திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. தமிழகம், 11வது ஐந்தாண்டு திட்டத்தில், 7.4 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.
இது, நாட்டின் சாராசரி வளர்ச்சி விகிதத்தை விட அதிகம். தி.மு.க., ஆட்சியின் செயல்பாடு குறைவு இருந்தாலும், இந்த நிலையை தமிழகம் எட்டியுள்ளது. தமிழகத்துக்கு, 11வது ஐந்தாண்டு திட்டத்தில், 24.42 சதவீத நிதி அளிக்கப்படது. ஆனால், 12வது ஐந்தாண்டு திட்டத்தில், 23.08 சதவீதமாக குறைத்துள்ளது. மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறையே இதற்கு காரணம். மத்திய அரசு திட்டங்களுக்கான நிதியில், தமிழகத்துக்கு, 4.3 சதவீத தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம், நாட்டின் மக்கள் தொகையில், 6 சதவீதத்தை கொண்டுள்ளது. சிறப்பான வளர்ச்சியை எட்டி வரும் மாநிலங்களுக்கு, தண்டனை அளிப்பது போல, மத்திய அரசு நிதியை குறைத்து வருகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. சிறு வணிகர்களை பாதிக்கும் வகையில், மத்திய அரசின் வரி சீரமைப்பு உள்ளது. மக்களுக்கு நேரடியாக பணம் அளிக்கும் திட்டம், தேர்தல் வெற்றிக்காக செய்யப்படுகிறது. இத்திட்டம், அடிப்படை தெரியாமல் அமல் செய்யப்படுகிறது. அதேபோல், தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டமும் அரசியலாக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் நிறைவேற்றுவதில், தமிழகம் பாரபட்சமாக நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் நிலவும், கடும் மின் பற்றாக்குறையைப் போக்க உதவுமாறு பல கடிதங்கள் எழுதிவிட்டேன், ஆனால் உதவி கிடைக்கவில்லை. மாறாக, மின் பாதையை பலப்படுத்துங்கள் என, உபதேசங்கள் தான் வந்தன. மத்திய அரசின் மூலம், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும், 2,830 மெகாவாட் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாக உள்ள, 2,000 மெகாவாட் மின்சாரம் ஆகியவற்றை முழுமையாக தமிழகத்துக்கே வழங்க வேண்டும். மாநிலங்களுக்கு இடையே, மின் பகிர்மான திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும். தேசிய வளர்ச்சிக் கூட்டம் மூலம், மாநில முதல்வர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இக்கூட்டத்தை சடங்காக கருதாமல், மக்கள் நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாறாக, அரசியல் முக்கியத்துவம் கொடுத்து, திட்டங்களை ஒதுக்குவது, மாநிலங்களுக்கு செய்யும் அநீதியாகும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.