மெட்ரோ ரயில் திட்டங்களில், இயக்குதல் - பாதுகாப்பு - பராமரிப்பு நடைமுறைகள் அடங்கிய கையேடுகளுக்கு, ஒப்புதல் வழங்குவதை மாற்றி அமைத்து, மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் அனைத்து பெருநகரங்களிலும், விரைவான, உயர்த்தர போக்குவரத்து வசதியை உறுதி செய்வதற்காக, மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போதைய நிலையில், கோல்கட்டா, டில்லி, பெங்களூரு நகரங்களில், மெட்ரோ ரயில் போக்குவரத்து செயல்படுகிறது.
சென்னை, ஐதராபாத், குர்கான், ஜெய்பூர், மும்பை, கொச்சி நகரங்களில் இதற்கான திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இவற்றுக்கு அடுத்தபடியாக, மேலும், 11 நகரங்களில், மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
இதற்காக, ஒவ்வொரு நகரத்துக்கும், தனித்தனியாக மெட்ரோ ரயில் போக்குவரத்து நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளன.சென்னையில், 41 கிலோ மீட்டர் தொலைவுக்கு, இரு மார்க்கங்களில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக, சுரங்க மற்றும் மேம்பால ரயில் பாதைகளும், ரயில் நிலையங்களும் கட்டப்பட்டு வருகின்றன.
பராமரிப்பு கையேடு:பெருமளவில் மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து திட்டங்களை செயல்படுத்தும்போது, அதன் பராமரிப்பு, இயக்க, பாதுகாப்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது குறித்த நடைமுறைகள் அடங்கிய கையேடு இறுதி செய்யப்பட வேண்டும்.இதில் குறிப்பிடப்படும் நடைமுறைகளின் அடிப்படையிலேயே, பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்படும்.
மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் கால அளவு, தொழில்நுட்ப வரைவு திட்டம், பயணிகளுக்கான இடவசதி, பாதுகாப்பு வசதிகள், மின் கசிவு; தீ விபத்து பாதுகாப்பு , ரயில் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள், போன்ற பல்வேறு விவரங்கள் அடங்கியதாக, இந்த கையேடு இருக்கும்.
இத்தகைய கையேடுகளுக்கு, ஒப்புதல் அளிக்கும் நடைமுறை குறித்து, ரயில்வே அமைச்சகம், மெட்ரோ ரயில் நிர்வாகங்கள் இடையே, பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன.
இதில் முடிவெடுக்க, மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கிடையிலான குழுவும், மெட்ரோ ரயில் நிர்வாகங்களை உள்ளடக்கிய துணைக்குழுவும், சில மாதங்களாக ஆய்வுக்கூட்டங்கள் நடத்தின. இதன் முடிவுகள் அடங்கிய அறிக்கை, ரயில்வே வாரியத்திடம் அக்டோபரில் அளிக்கப்பட்டது.
உத்தரவு:இதன் அடிப்படையில், மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறையின், பெருநகர துரித போக்குவரத்து பிரிவு இயக்குநர் பிரகாஷ் சிங் பிறப்பித்துள்ள புதிய உத்தரவு விவரம்:
* மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான பராமரிப்பு கையேடுகளுக்கு, அந்தந்த மெட்ரோ ரயில் நிறுவனங்களின், தொழில்நுட்ப இயக்குநர் நிலையிலேயே ஒப்புதல் பெறலாம்.
* அதற்கு முன், இந்த ஆவணங்களின் பிரதிகளை, மெட்ரோ ரயில் திட்டங்களின் பராமரிப்பு, பாதுகாப்பு குறித்த தணிக்கை பயன்பாட்டுக்காக, ரயில்வே அமைச்சகம், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆகியோருக்கு அனுப்ப வேண்டும்.
* ஒவ்வொரு மெட்ரோ ரயில் திட்டங்களிலும், இயக்க, பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, பல்வேறு துணைப்பிரிவுகளின் பராமரிப்பு, ஆகிய பிரிவுகளுக்கான தனித்தனி கையேடுகள், கட்டாயம் இருக்க வேண்டும். வர்த்தக ரீதியாக, மெட்ரோ ரயில் திட்டங்களை துவக்கும் முன், இப்பணிகள் முடிக்க வேண்டும்.இந்த உத்தரவை செயல்படுத்தும்படி, சென்னை, டில்லி, மும்பை, கோல்கட்டா உள்ளிட்ட, எட்டு மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.