ரயில்வேயில் இரண்டரை லட்சம் காலியிடங்களை நிரப்புவதில் நிலவும் தாமதத்தை கண்டித்து, வேலை நிறுத்தம் செய்வதற்கு, ரகசிய ஓட்டெடுப்பு நடத்த, அகில இந்திய ரயில்வே சம்மேளனம் முடிவு செய்துள்ளது. இச்சம்மேளன தேசிய துணை தலைவர் ராஜா ஸ்ரீதர் கூறியதாவது: ரயில் பயணிகளின் பாதுகாப்பில் நேரடி தொடர்புடைய இன்ஜின் டிரைவர், கார்டுகள் பணியிடங்கள் ஒன்றரை லட்சம் காலியாக உள்ளன. பணியிலுள்ள டிரைவர், கார்டுகள் கூடுதல் நேரம் பணிபுரிய நிர்பந்திக்கப்படுகின்றனர். தெற்கு ரயில்வேயில் மட்டும், 8,000 பணியிடங்கள் காலியாகவுள்ளன.
இவற்றை நிரப்புவதில் தாமதம் நிலவுகிறது. பதவி சீரமைப்பு, புதிய ஓய்வூதிய திட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து, மத்திய அரசு மெத்தனம் காட்டுகிறது. வரும் ஏப்ரலுக்குள், இக்கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில், நாடு தழுவிய அளவில், ரயில் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட, ஊழியர்களிடம் ரகசிய ஓட்டெடுப்பு நடத்த, விசாகப்பட்டினத்தில் நடந்த, சம்மேளன மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. எனவே, மத்திய அரசு, ரயில்வே வாரியம் கோரிக்கைகளை நிறைவேற்ற தாமதம் செய்யக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -