மதுரை
: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், போலீஸ் பற்றாக்குறை நிலவுகிறது.
இதை தவிர்க்க, "ஹெவி, மீடியம், லோ' என மூன்று வகையாக, ஸ்டேஷன்களை பிரித்து,
போலீசாரை நியமிக்கும் திட்டம் கிடப்பில் உள்ளது. பல மாவட்டங்களில் சட்டம்
ஒழுங்கு, குற்றங்கள், போக்குவரத்துக்கு ஏற்ப, போலீசார்
நியமிக்கப்படவில்லை. இருக்கிற போலீசாரை வைத்தே அதிகாரிகள் சமாளித்து
வருகின்றனர். போலீஸ் துறையில், 2306 இன்ஸ்பெக்டர்கள், 7239 எஸ்.ஐ.,க்கள்
14,720 பட்டாலியன் போலீசார், 82,442 மற்ற போலீசார் என எண்ணிக்கை
நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஸ்டேஷன் போலீசார் ஓய்வு பெற்ற பின்,
அவர்களிடத்தில் ஆயுதப்படை போலீசாரை நியமிக்க வேண்டும் என்பது விதி. ஆனால்,
பல மாவட்டங்களில், நியமிக்கப்படாததால், ஸ்டேஷன் போலீசாருக்கு பணிச்சுமை
அதிகரித்துள்ளது. இதனால், அவர்களும் விருப்ப ஓய்வு பெற்றோ அல்லது வேறு
பிரிவுகளுக்கோ சென்றுவிடுவதால், வயதான சிறப்பு எஸ்.ஐ.,க்களை கொண்டு, பணிகளை
கவனிக்க வேண்டியுள்ளது. இதிலும் சிலர், மாற்றுப்பணியாக வெளியே செல்வதால்,
சட்டம் ஒழுங்கில் மட்டுமே கவனம் செலுத்த முடிகிறது. மதுரை நகர் உட்பட பல
மாவட்டங்களில், 20 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய மக்கட்தொகைக்கு ஏற்ப
நிர்ணயிக்கப்பட்ட போலீஸ் எண்ணிக்கையே இன்றும் தொடர்கிறது. தற்போது, புறநகர்
பகுதிகள் எல்லாம் நகராகிவிட்டன. மக்கட்தொகையும் அதிகரித்து வருகிறது.
ஆனால், அதற்கேற்ப போலீஸ் இல்லை. ஆள் பற்றாக்குறையால் ரோந்து செல்ல
முடியாததால், குற்றங்கள் அதிகரிக்கின்றன. புறக்காவல் நிலையங்கள் "தூங்கி'
வழிகின்றன. போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த ஆள் இல்லாததால், விபத்துகள்
தொடர்கின்றன.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க, கடந்தாட்சியில்
டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் இருந்தபோது, சட்டம் ஒழுங்கு, குற்றம்,
போக்குவரத்தை பொறுத்து, ஸ்டேஷன்களை "ஹெவி, மீடியம், லோ' என, மூன்று வகையாக
பிரித்து, அதற்கேற்ப போலீசாரை நியமிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது.
இதன்படி, ஒரு ஸ்டேஷனிற்கு குறைந்தது 75 போலீசார் நியமிக்கப்படுவர் எனவும்
அறிவிக்கப்பட்டது. இதனால் "குஷி'யான போலீசார், கூடுதலாக ஆட்கள் வேண்டும்
என்பதற்காக, அனைத்து ஸ்டேஷன்களையும் "ஹெவி' என கணக்கெடுத்து,
டி.ஜி.பி.,க்கு அறிக்கை சமர்ப்பித்தனர். சில மாதங்களிலேயே ஆட்சி மாற்றம்
ஏற்பட்டது. லத்திகாசரணும் இடமாற்றப்பட்டு, ஓய்வு பெற்றார். இதனால் போலீஸ்
பற்றாக்குறையை போக்கும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டது. தற்போதைய
சூழலில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, குற்றங்களை தடுக்க, விபத்தில்லா
தமிழகத்தை உருவாக்க, அத்திட்டத்தை செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.