ஸ்ரீபெரும்புதூர்: படப்பை அருகே, அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு, இடத்தை காலி செய்யும்படி வருவாய் துறை, "நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. இதனால், பல லட்சம் ரூபாய் கொடுத்து, புறம்போக்கு நிலத்தை வாங்கிய, பிரபல நகைச்சுவை நடிகர் உட்பட அனைவரும் பீதி அடைந்துள்ளனர்.
சென்னை, படப்பை குறுவட்டத்திற்குட்பட்ட, மணிமங்கலம் கிராமத்தில், ஏரிக்கு அருகில், பல நூறு ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்நிலத்தை, 30 ஆண்டுகளுக்கு முன், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து, பூச்செடிகள் நடவு செய்து வந்தனர். அவர்கள் வருவாய் துறையினர் மூலம், நிலத்திற்கு தண்ட வரி செலுத்தி வந்தனர்.
பின், அதை காரணம் காண்பித்து, ஆக்கிரமிப்பாளர்கள் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை உரிமை கொண்டாடினர். அவர்கள் ஆக்கிரமிப்பு செய்து, வசித்து வந்த பகுதிக்கு, புஷ்பகிரி என பெயர் சூட்டினர்.
அதன் பின், ஆந்திராவை சேர்ந்தவர்கள், தங்கள் பராமரிப்பில் இருந்த நிலங்களை, குறைந்த விலைக்கு விற்று விட்டு ஊருக்குச் சென்றனர். சென்னை மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த தொழில் அதிபர்கள், பிரபல நகைச்சுவை நடிகர் உட்பட திரைப்பட நட்சத்திரங்கள் நிலத்தை வாங்கி, தென்னை, மா, என தோட்டங்கள் அமைத்து பராமரித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம், வருவாய் துறையினர், திடீரென, அரசுக்கு சொந்தமான, 70 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ள, 19 பேருக்கு, படப்பை வருவாய் ஆய்வாளர் நோட்டீஸ் வழங்கினார். "நோட்டீஸ் கிடைத்த இரண்டு வாரங்களுக்குள், ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற வேண்டும்; இல்லையெனில், வருவாய் துறையினர், ஆக்கிரமிப்புகளை அகற்றுவர்' என, நோட்டீசில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து, வருவாய் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசுக்கு சொந்தமான, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, எவ்வித அரசு உத்தரவும் இல்லாமல், ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில் வருவாய் துறையினர், பதிவேடுகளில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் 19 பேருக்கு, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள, 70 ஏக்கர் நிலம் விரைவில் கையகப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.