காந்திகிராமம்: ""வசிப்பதற்கு ஒரு வீடும்,விவசாயம் செய்ய சிறிதளவு நிலமும் இல்லாத வாழ்க்கை வீணானது,'' என சென்னை நில மீட்பு இயக்க தலைவர் கிருஷ்ணம்மாள் பேசினார். திண்டுக்கல் காந்திகிராம அறக்கட்டளை சார்பில் நடந்த விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கிருஷ்ணம்மாள் பேசியதாவது: 1968 ல் கீழ்வெண்மணியில் மிகப்பெரிய புரட்சி செய்து, அதிக நிலம் வைத்திருந்தவர்களிடம் இருந்து, நிலமற்றோருக்கு ஒரு ஏக்கர் நிலம் வாங்கி தரப்பட்டது. இவர்கள் தங்களுடைய உழைப்பால் தற்போது மூன்று ஏக்கர் நிலம் வைத்துள்ளனர். பெண்கள் விழிப்புடன் செயல்பட்டால் தான், எந்தவொரு சமுதாய மாற்றமும் சாத்தியமாகும். விவசாயிகளுக்கு வசிக்க ஒரு வீடும், விவசாயம் செய்ய சிறிதளவு நிலமும் அவசியம் வேண்டும். இவை இரண்டும் இல்லாத வாழ்க்கை வீணானது.
உலகமயமாக்கல், தாராளமய மாக்கல், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு போன்ற தவறான கொள்கைகளால்,பாமர மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த பெண்கள் பொதுநல நோக்கில் செயல்பட வேண்டும், என்றார். காந்திகிராம அறக்கட்டளை செயலாளர் சிவக்குமார், ஜன சத்யா கிரக அமைப்பின் தலைவர் பி.வி.ராஜகோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.