தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, பயிர் பாதிப்பு அனைத்து மாவட்டங்களிலும், பரவலாக உள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களுக்கு மட்டும் வேளாண்துறையினர், தனிக்கவனம் செலுத்தி சலுகைகள் அறிவித்து வருவது, மற்ற மாவட்ட விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வேளாண்மை அடிப்படையில், தமிழகத்தை ஏழு மண்டலங்களாக அரசு பிரித்துள்ளது. வடகிழக்கு மண்டலத்தில், காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வடமேற்கு மண்டலத்தில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல்லின் ஒரு பகுதியும்இடம் பெற்றுள்ளன.
மேற்கு மண்டலத்தில் ஈரோடு,கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் பெரம்பலூர் மற்றும் கரூர், நாமக்கல், அரியலூர் மாவட்டங்களின் ஒரு பகுதியும் அடங்கியுள்ளன.காவிரி டெல்டா மண்டலத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி மற்றும் கரூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களின் ஒரு பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
தெற்கு மண்டலத்தில் மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் அடங்கியுள்ளன.அதிக மழை பெறும் மண்டலத்தில், கன்னியாகுமரி, மலைப்பிரதேச மண்டலத்தில் நீலகிரி, கொடைக்கானல் இடம் பெற்றுள்ளன. மாநிலம் முழுவதும் நெல், கரும்பு, சோளம், கம்பு ஆகியவை பிரதானமாக பயிரிடப்பட்டாலும், குறிப்பிட்ட வகை தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள், மலர்கள் உள்ளிட்டவை, சில மண்டலங்களில் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.
*உற்பத்தி குறைகிறது....
நெல் உற்பத்தியை எடுத்துக்கொண்டால், காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டுமே, அதிகளவில் விளைவிக்கப்பட்டு வந்தது. தஞ்சாவூரை தமிழகத்தின் நெற்களஞ்சியம் என, போற்றும் அளவிற்கு அங்கு நெல் உற்பத்தி இருந்தது.
ஆனால், தண்ணீர் தட்டுப்பாடு, மின்வெட்டு, கூலியாட்கள் பற்றாக்குறை, உரங்களின் விலை உயர்வு போன்ற பல காரணங்களால், டெல்டா மண்டலத்தில், நெல் உற்பத்தி, ஆண்டுக்கு ஆண்டு, குறைந்து வருகிறது.
டெல்டா மண்டலத்தில், 20 லட்சம் ஏக்கராக இருந்த நெல் சாகுபடி பரப்பு, கடந்தாண்டு கணக்குப்படி, 15 லட்சம் ஏக்கராக குறைந்தது. இந்தாண்டு குறுவை சாகுபடி நடக்காத நிலையில், சம்பா சாகுபடி பரப்பு 11 லட்சம் ஏக்கராக உள்ளது.
ஆனால், அதேநேரத்தில் கடந்த ஆண்டு, மாநிலம் முழுவதும் 45 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பரப்பு குறையும் நேரங்களில், நெல் உற்பத்தியின் அளவை உயர்த்த, வடகிழக்கு மற்றும் தெற்கு மண்டலங்கள் கைகொடுத்து வருகின்றன.வடகிழக்கு பருவமழை போதுமான அளவில் பெய்யாததால், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக டெல்டா மாவட்டங்களில், மேற்கொள்ளப்பட்டுள்ள பயிர்கள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களிலும் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
*விவசாயிகள் தற்கொலை:
ஐந்து விவசாயிகள், தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், தண்ணீர் தட்டுப்பாட்டால், பயிர்கள் கருகுவதையும், வயல்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதை யும் கண்டு, மற்ற விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். டெல்டா மாவட்ட பயிர்களை காப்பதற்காக, விவசாயிகளுக்கு பல சலுகைகளையும் அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் சம்பா, சாகுபடி மேற்கொள்ள தேவையான உதவிகள் வழங்குவதற்காக, 70 கோடி ரூபாயை, இம்மண்டலத்திற்காக, அரசு ஒதுக்கியிருந்தது. அதில், சமுதாய நாற்று திட்டம், இலவச விதைகள், மானியம், வாடகைக்கு இயந்திரங்களை மானிய விலையில் பெறுதல் போன்ற சலுகைகள் பெற்று, விவசாயிகள் சாகுபடியை துவங்கினர்.
இதனால், டெல்டா மாவட்டங்களில் மட்டும், 11 லட்சம் ஏக்கரில், நெல் சாகுபடி நடந்துள்ளது. ஆனால், அதிகப்படியான சலுகைகள் ஏதும் பெறாமல், வங்கி கடன் உள்ளிட்ட சில சலுகைகளை மட்டும் பெற்று, மற்ற மண்டலங்களில் 12 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடந்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பயிர்களை மீட்க டெல்டா விவசாயிகளுக்கு மட்டும் அரசு பல சலுகைகளை அறிவித்துள்ளது.
அதன்படி, டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக, 12 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. 32 ஆயிரம், டீசல் பம்ப் மோட்டார்களை பயன்படுத்தி பாசனம் செய்வதற்கு, மானியமாக ஏக்கருக்கு 600 ரூபாய் வழங்கப்படும் என, அறிவிக்கப் பட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, நெற்பயிருக்கு வழங்கப்படும் 4,000 ரூபாய் நிவாரணம் 5,000 ரூபாயாக உயர்த்தப்படும் எனவும், அரசு அறிவித்துள்ளது.
பயிர் இழப்பு ஏற்பட்டால், அதை ஈடு செய்வதற்காக, பயிர் காப்பீடு திட்டத்திற்கான, முழு செலவையும் அரசே ஏற்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. ஆனால், மற்ற மாவட்டங்களுக்கென, இதுவரை எவ்வித சலுகையும் அரசால் அறிவிக்கப்படவில்லை.
*விவசாயிகள் அதிருப்தி:
இம்மாவட்டங்களில், பயிர்களின் நிலைமை குறித்து, அரசின் கவனத்திற்கு வேளாண்துறை அதிகாரிகள் எடுத்து செல்லாததே, இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதனால், மாவட்ட வேளாண்துறை அதிகாரிகள் மீது, விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
டெல்டா விவசாயத்திற்கு வழங்கியது போல, 12 மணிநேரம் மும்முனை மின்சாரம், டீசல் மோட்டார்களை இயக்க மானியம் வழங்க வேண்டும்; என்பதே, இம்மாவட்ட விவசாயிகளின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பாகவுள்ளது.இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:விளைநிலங்கள், பிற பயன்பாடுகளுக்கு மாற்றப்படுவதால், சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. தற்போதுள்ள நிலையில், நிலங்களை திறம்பட பயன்படுத்தவும், பயிரிடும் திறனை அதிகரிக்கவும், அரசு முயற்சிஎடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே, வரும் காலங்களில் உணவுப்பொருட்களின் விலைவாசியை கட்டுப்படுத்த முடியும்.
ஆனால், வேளாண்துறையினர், இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. ஆண்டுதோறும் விவசாயத்திற்காகவும், விவசாயிகளுக்காகவும், பட்ஜெட்டில் கோடி கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.இந்த நிதி, முழுமையாகவும், முறையாகவும் செலவிடப்பட்டால், இரண்டாம் பசுமை புரட்சியை ஏற்படுத்த முடியும். ஆனால், அதிகாரிகளின் மெத்தனத்தால், அரசு நிதி, வீணடிக்கப்பட்டு வருகிறது. வறட்சி போன்ற இக்கட்டான நேரத்தில், விவசாயிகளுக்கு சலுகைகள் வழங்குவதில் அரசு பாரபட்சம் காட்டக்கூடாது.
எந்த மாவட்டமாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவிகள் சென்று சேர வழிவகை செய்ய வேண்டும். நிவாரணம் கிடைக்காத பட்சத்தில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், விவசாய தொழில் நலிவடையும் நிலை உருவாகும். இதை கருத்தில் கொண்டு, விவசாயத்தை மேம்படுத்த இனியாவது வேளாண்துறையினர் செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சந்தையில் விற்க்கும் பொருளில் அதன் தயாரிப்பாளர் (Maximum Retail Price) அதிகபடியான விற்பனை விலை என்று அச்சடித்து விற்கிறார், ஆனால் விவசாயி விளைவிக்கும் பொருளுக்கு மட்டும் (Minimum Supporting Price) என்று ஒன்றை அரசு நிர்னைகிறது, விவசாயிகளே தங்கள் விளைவிக்கும் பொருளுக்கு விலையை நிர்னைக்கும் உரிமையை அரசுகள் கொடுத்தால் விவசாயிகளுக்கு மணியம் என்பதே தேவையில்லை.... குஜராத் மாநிலத்தில் Sardar Sarovar அணையில் நர்மதா ஆற்றில் ஆண்டு முழுவதும் விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது அதனால் அப்பகுதியில் விவசாயிகளுக்கு பாசனத்துக்கு மின்சார தேவை இல்லை, Narmada canal 534 kms (460 kms in Gujarat, 74 kms in Rajasthan) is totally a man made concrete canal of 250 meters width and 20 meters depth, so there is no room for wastage of water and now Gujarat government have started to install solar panel on the canal so there is double benefits preventing water from evaporation and providing the eco-frily clean electricity to the community. This is the government for people, that's why NaMo have got hat-trick in Gujarat....
என்ன செய்வது. இதுவரை ஆண்ட கட்சிகள் விவசாயத்தை காப்பாற்றவும் ,நீர் மேலாண்மை மீது அக்கறை செலுத்தாமையால் விவசாயம் அழிந்து கொண்டே வருகிறது. ஏறி குளங்கள் ஆக்கிரமிப்பை தடுப்பதற்கு பதிலாக ஆளும் கட்சியினரே ஆக்கிரமித்து கொள்கிறார்கள். ஏறி குளங்களை புதிதாக வெட்டுவதற்கு பதிலாக இருக்கும் ஏறி குளங்களை தூர்த்து ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து கொளுத்து திரிகிறார்கள். நதிகளை இணைக்க வேண்டியவர்கள் கால்வாய்களை தூர்த்து கல்லூரிகளையும் வணிக வளாகங்களையும் கட்டி கொள்கின்றனர்....எப்படி விளங்கும் விவசாயம்?
"ந்த மாவட்டமாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவிகள் சென்று சேர வழிவகை செய்ய வேண்டும். நிவாரணம் கிடைக்காத பட்சத்தில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், விவசாய தொழில் நலிவடையும் நிலை உருவாகும். இதை கருத்தில் கொண்டு, விவசாயத்தை மேம்படுத்த இனியாவது வேளாண்துறையினர் செயல்பட வேண்டும்." சரியான வார்த்தை.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.