தெலுங்கானா தனி மாநில கோரிக்கை குறித்து விவாதிக்க, மத்திய அரசு கூட்டியிருந்த, அனைத்துக் கட்சி கூட்டம், தோல்வியில் முடிந்தது. அனைத்து கட்சிகளும், தங்களின் முந்தைய நிலைப்பாட்டில், உறுதியாக இருந்ததால், எந்த ஒரு முடிவும் எட்டப் படவில்லை. ஆனாலும், ""ஒரு மாதத்திற்குள், இப்பிரச்னைக்கு, தீர்வு காணப்படும்,'' என, மத்திய உள்துறை
அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே தெரிவித்தார்.
ஆந்திராவைப் பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. இதுதொடர்பாக, ஆந்திராவில், பல்வேறு போராட்டங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. இந்த தனி மாநில கோரிக்கை குறித்து விவாதிக்க, டில்லியில் நேற்று, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மத்திய உள்துறை அமைச்சர், சுசில் குமார் ஷிண்டே தலைமையில் நடந்த, இந்தக் கூட்டத்தில், ஆந்திர காங்., முதல்வர் கிரண்குமார் ரெட்டி உட்பட, அந்த மாநிலத்தை சேர்ந்த, எட்டு முக்கிய அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்குப் பின், நிருபர்களிடம் பேசிய, மத்திய உள்துறை அமைச்சர், சுசில் குமார் ஷிண்டே கூறியதாவது:
அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற, எட்டு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்களை, மிகுந்த கவனத்துடன் கேட்டேன். கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தும், மத்திய அரசிடம் விளக்கப்படும். தனி மாநில கோரிக்கை தொடர்பாக, தீர ஆலோசனை செய்து, ஒரு மாதத்திற்குள், இப்பிரச்னைக்கு நிச்சயம் தீர்வு காணப்படும்.
இந்த விவகாரத்தில், ஆந்திர மாநில மக்களும், இளைஞர்களும், அமைதி காக்க வேண்டும். தெலுங்கானா பிரச்னைக்காக, மற்றொரு முறை அனைத்து கட்சி கூட்டம், கூட்டப்படாது. இதுவே கடைசி கூட்டம்.இவ்வாறு ஷிண்டே கூறினார்.அதேநேரத்தில், அனைத்துக் கட்சி கூட்டம் குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
சந்திர சேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், பா.ஜ., மார்க்சிஸ்ட் கம்யூ., இந்திய கம்யூனிஸ்ட், ஜெகன் மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் மற்றும் மஜ்லிஸ் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள், இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.ஒவ்வொரு கட்சியிலிருந்தும், தலா இருவர் வந்திருந்தனர். பத்திரிகையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படாமல் நடந்த இந்தக் கூட்டத்தில், எந்த ஒரு தெளிவான முடிவும் எடுக்கப்படவில்லை.
தெலுங்கானா தனி மாநில கோரிக்கை விஷயத்தில், எந்த ஒரு கட்சியும், தங்களின் முந்தைய நிலைப்பாட்டில் இருந்து விலகவில்லை; விட்டுக் கொடுக்கவில்லை. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பா.ஜ., மற்றும் இந்திய கம்யூ., பிரதிநிதிகள், தனி மாநில கோரிக்கைக்கு ஆதரவாகப் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூ., மற்றும் மஜ்லிஸ் முஸ்லிம் கட்சியினர் எதிராகப் பேசினர்.
ஆந்திராவின் முக்கிய கட்சிகளான, காங்கிரஸ், தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் போன்றவை வழக்கம் போல, இந்த கூட்டத்திலும், தங்களின் நிலைப்பாட்டை தெளிவு படுத்தவில்லை.
"மத்திய அரசு முடிவு :என்னவோ, அதன் அடிப்படையிலேயே, எங்களின் முடிவை எடுக்க முடியும்' என, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் பிரதிநிதிகள் தெரிவித்தனர். தெலுங்கு தேசம் பிரதிநிதிகளோ, 2008ம் ஆண்டில், ஜனாதிபதிக்கு, தங்கள் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு எழுதிய கடிதத்தை குறிப்பிட்டு, அதில் குறிப்பிட்டுள்ளது போல, "தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை எதிர்க்கப் போவதில்லை' என்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற, காங்., பிரதிநிதிகளில் ஒருவரான, தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த சுரேஷ் ரெட்டி, தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். மற்றொரு காங்., பிரதிநிதியான, வெங்கட் ரெட்டியோ, "ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் நீடிப்பது அவசியம்' என்றார்.அரைத்த மாவையே அரைக்கும் வகையில், வெறும் பெயரளவில் நடந்த கூட்டமாகவே, அனைத்துக் கட்சி கூட்டம் இருந்ததே தவிர, புதிதாக சொல்வதற்கு ஒன்றுமே இல்லை.இவ்வாறு தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.
"ஒன்றுக்கும் உதவாத கூட்டம்':அனைத்துக் கட்சி கூட்டம் பற்றி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் கூறியதாவது:ஒன்றுக்கும் உதவாத ஆலோசனை கூட்டம் இது. மற்றொரு முறை, மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளேன். தெலுங்கானா தனி மாநில கோரிக்கையில், மத்திய அரசுக்கு அக்கறையே இல்லை. காங்கிரஸ் நினைத்தால் ஒரே நாளில் முடிவெடுக்க முடியும். ஒரு மாதத்திற்குள் தீர்வு காணப்படும் என்பது ஏமாற்று வித்தை. இது போல, ஆயிரம் முறை சொல்லிவிட்டனர்.
இந்தப் பொய்யை, இனி மேலும் யாரும் நம்ப மாட்டார்கள். அனைத்துக் கட்சி கூட்டத்தை முடித்த பிறகு, "ஒரு வாரத்தில் முடிவு காணப்படும்' என்றாவது சொல்லியிருக்கலாம் அல்லது, " கூட்டம் குறித்து பிரதமரிடம் விளக்குவேன்' என்றாவது சொல்லியிருக்கலாம். அதை விட்டு விட்டு, "ஒரு மாதத்திற்குள் தீர்வு காணப்படும்' என, கூறுவது முற்றிலும் நாடகம்.
இந்த நாடகத்தை, பல ஆண்டுகளாகவே காங்கிரசார் நடத்தி வருகின்றனர்; அதே நாடகத்தை, இனியும் தொடரப் போகின்றனர். கொடுத்த வாக்குறுதியை, நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றுகின்றனர். முதல் கட்டமாக, தெலுங்கானா பகுதி முழுதுவம், நாளை, "பந்த்' நடத்தப்படும். அடுத்த கட்டம் குறித்து, ஆலோசனை செய்து விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு சந்திர சேகர ராவ் கூறினார்.
அதேநேரத்தில், அனைத்துக் கட்சி கூட்டம் நடந்த, மத்திய உள்துறை அமைச்சக அலுவலகம் உள்ள, நார்த் பிளாக் முன், நேற்று பலத்த பாதுகாப்பை மீறி, 50க்கும் மேற்பட்டோர் கூடி, தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.போலீசார் அவர்களை மிகுந்த சிரமப்பட்டு, அப்புறப்படுத்தினர்.
- நமது டில்லி நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இரண்டாயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் தெலுங்கானா பிரச்சினைக்குத் தீர்வு காண்பது பிறகு கிடக்கட்டும். இவர் அமர்ந்து ஆளும், இவரது சொந்தக் கட்சியால் ஆளப்படும் மத்திய அரசு மற்றும் மாநில அரசுத் தலைநகரமான தில்லியிலேயே 23 வயது மாணவி கொடூரமாகக் கற்பழித்துக் கொல்லப்படுவது போன்ற கொடுமைகளைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கட்டும். கையாலாகாக காங்கிரஸ் கட்சியின் கேவலமான நிர்வாகத் திறமைக்கு இதுவே சிறந்த சான்று. இதற்கு ஆதரவு கருணாநிதி என்பவர் வேறு.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.