சிதம்பரம்:சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நேற்று துவங்கிய 11வது உலக தமிழ் இணைய மாநாட்டை துணைவேந்தர் ராமநாதன் துவக்கி வைத்தார்.கணினி, இணையம் ஆகியவற்றில் தமிழின் பயன்பாடுகள், உலகில் தமிழும், தொழில் நுட்பமும் பல நாடுகளில் செய்துவரும் ஆராய்ச்சிகள் பயன்முறைகள் பலவற்றை உலக தமிழறிஞர்கள் கலந்தாய்வு செய்யவும், தமிழர்களிடையே பரப்பவும் 11வது உலக தமிழ் இணைய மாநாடு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக குமாராஜா முத்தையா அரங்கில் நேற்று துவங்கி வரும் 30ம் தேதி வரை நடக்கிறது.
மாநாட்டை துணைவேந்தர் ராமநாதன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மொழியியல் உயராய்வு மைய புல முதல்வர் கணேசன் வரவேற்றார். உத்தமம் அமைப்பின் தலைவர் மணிவண்ணன் தலைமை உரையாற்றினார்.இங்கிலாந்து சிவப்பிள்ளை, சிங்கப்பூர் மணியம், மலேஷியா இளந்தமிழ், இலங்கை சிவ அனுராஜ், ஆஸ்திரேலியா முகுந்த் ராமமூர்த்தி, இந்தியா ராமமூர்த்தி வாழ்த்திப் பேசினர்.
உலக நாடுகளில் இருந்த 100க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் வருகை தந்துள்ளனர். கருத்தரங்கம், கண்காட்சி, மக்கள் கூடம் என மூன்று முனைகளில் மாநாடு நடக்கிறது. கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.மாநாடு ஏற்பாடுகளை உத்தமம் அமைப்பின் தலைவர் மணிவண்ணன், கணித்தமிழ் சங்க தலைவர் வள்ளி ஆனந்தன் செய்துள்ளனர்.
தமிழறிஞர் இங்கிலாந்து சிவப்பிள்ளை பேச்சு: ஐரோப்பா இருக்கும் வரை தமிழ்மொழி சாகாது'' என இங்கிலாந்து சிவபிள்ளை பேசினார். சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக் கழகத்தில் நேற்று துவங்கிய உலகத்தமிழ் இணைய மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் கருத்துரை வழங்கினர்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சிவப்பிள்ளை பேசுகையில்,"ஐரோப்பா இருக்கும் வரை தமிழ் சாகாது. இணையதளத்தில் ஐரோப்பியா, அமெரிக்கா நாடுகளில் தமிழ் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்தில் 326 மொழி பேசப்படுகிறது. அவற்றில் தமிழ்மொழியும் ஒன்று. அதே போன்று பயிற்சி மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாக உள்ளது' என்றார்.
மலேசியாவைச் சேர்ந்த இளந்தமிழ் பேசுகையில்," மலேசியாவில் 523 தமிழ் பள்ளிகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். அரசு சார்பில் நிதி உதவி அளிக்கும் 60 தமிழ் பள்ளிகளில் 20 ஆயிரம் பேர் தமிழ் தொழில்நுட்பம் படிக்கின்றனர். மலேசியாவில் மலையா, சீனம் பேசுகிறவர்கள் யாரும் அந்த மொழி சோறு போடுமா என கேட்பது இல்லை. ஆனால் அடிப்படையில் தமிழ் உணர்வு இல்லாதவர்கள், "தமிழ்' சோறு போடுமா என கேட்கின்றனர். பேசுவதற்கும், கருத்துரை நடத்துவதற்கும் தமிழ் தொழில் நுட்பம் தேவைப்படுகிறது' என்றார்.
இலங்கை சிவ அனுராஜ் பேசுகையில்,"உலகத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி தமிழ்நாட்டிற்கு அடுத்தது இலங்கை தான். உலகத்தமிழ் இணைய மாநாடு இன்னும் இலங்கையில் நடத்தப்படவில்லை. 2004, 2005ம் ஆண்டு உலக தமிழ் இணைய மாநாடு நடத்த முயற்சி எடுக்கப்பட்டது. அப்போது அமைச்சர் இறந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. தமிழிலே தொழில்நுட்பம் பெற வேண்டும் என தமிழ் ஈழ மக்கள் ஆர்வமாக உள்ளனர்' என்றார்.
இந்தியாவைச் சேர்ந்த ராமமூர்த்தி பேசுகையில்,"பத்து நாடுகளில் உலகத்தமிழ் இணைய மாநாடு நடத்தப்பட்டுள்ளது. அதில் ஏழு மாநாடு வெளிநாடுகளிலும், தமிழ்நாட்டில் மூன்று மாநாடுகள் அரசு உதவியுடன் நடந்துள்ளது. அரசிற்கு இணையாக அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உதவியுடன் இன்று சிதம்பரத்தில் உலகத்தமிழ் இணைய மாநாடு நடத்தப்படுவது பெருமையாக உள்ளது. மொழியியல் கணினி என்பது ஊடகம். அதை உள்ளடக்கமாக பார்க்கலாம். கணினி வழியாக தமிழ் தொழில்நுட்பம் உள்ளடக்கம் வளர்ந்தால் தமிழ் வளரும்' என்றார்.
உலகத் தமிழ் இணைய மாநாட்டில் 142 கட்டுரைகள் சமர்ப்பிப்பு: மாநாட்டில், வெளிநாட்டை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கணினித்தமிழ் ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் கருத்துரை வழங்கினர்.பிற்பகல் மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் ஆய்வாளர்கள் 142 கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில் தொழில்நுட்பம் தொடர்பாக 48 கட்டுரைகளும், கல்வி தொடர்பாக 24 கட்டுரைகளும், பொதுவான தமிழ் கணினி சார்ந்த கட்டுரைகள் 70ம் அடங்கும்.
இன்று நிறைவு விழா:
உலகத் தமிழ் மாநாட்டின் 2ம் நாளான இன்று காலை தமிழ் ஆய்வாளர்கள் பேசுகின்றனர். பிற்பகல் நிறைவு விழா நடக்கிறது. அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் மீனாட்சிசுந்தரம் தலைமையுரையாற்றுகிறார். மொழியில் உயராய்வு மைய புல முதல்வர் கணேசன் முன்னிலை வகிக்கிறார். அண்ணாமலை பல்கலைக்கழக தமிழியல்துறை பேராசிரியர் அரங்க.பாரி வரவேற்கிறார்.சென்னை தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் சேகர், உலகத் தமிழ் சங்க தனி அலுவலர் பசும்பொன், கணித்தமிழ் சங்க தலைவர் வள்ளி ஆனந்தன், மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி நடராஜ பிள்ளை ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ நிறைவுரையாற்றுகிறார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த மாநாட்டு மேடையில் உள்ள பெரிய மனிதர்களின் உடைகளைப் பார்த்தாலே ஓரளவு ஊகிக்க முடிகிறது... தமிழ் சாகுமா சாகாதா என்பது... பெரிய பெரிய பேராசிரியர்கள் எழுதி, சரி பார்த்து வெளியிட்ட 'கலிபோர்னியா தமிழ்க் கழக' மழலையர் பாடப் புத்தகத்தில் உள்ள சந்திப் பிழைகளையும், மற்ற எழுத்துப் பிழைகளையும் பார்த்தால் ஒருவாறு தெரிகிறது... தமிழ் வாழுமா வாழாதா என்று... "நானும் என் மனைவியும் சிந்திப்பதே ஆங்கிலத்தில் தான்" என்று தமிழ் நண்பர்கள் சொல்லக் கேட்கும்போது தெளிவாகத் தெரிகிறது தமிழின் எதிர்காலம். தமிழர்கள் தங்கள் வாழ்விலிருந்து தூக்கியெறிந்தபின், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும், கூலிக்காரர்களின் மொழியாகத் தன் கடைசி நாட்களைக் கழிக்கவேண்டும் என்பதுதான் தமிழ்த் தாயின் தலிவிதியோ?
தமிழை வளர்க்க வேண்டும் என்று நாம் நினைக்கும் அதே வேளையில் எந்த எந்த துறையில் வளர்க்க வேண்டும் என்கிற சரியான வழி காட்டுதல் இல்லாததால் நாம் தடுமாறுகிறோம் என்பது உண்மை. உதரணத்துக்கு WIKIPEDIA போன்ற இணைய தளங்களில் தமிழ் வலை பக்கங்கள் மிகவும் கம்மி. அனைத்து BA BSC BCOM BE மாணவர்கள் குறைந்தது 5 பக்கங்களாவது தமிழில் கட்டுரை எழுதி வெளியிட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். நான் என்னுடைய சார்பாக வரும் 2013 வருடத்தில் 10 பக்கங்கள் எழுத வேண்டும் என்று உறுதி எடுத்துள்ளேன். நீங்கள் மற்ற மொழிகளில் படித்த விஷயங்களை தமிழில் மொழிமாற்றம் செய்து BLOGS என்றழைக்கப்படும் இணைய தளங்களில் வெளியிடுங்கள். மேலும் தமிழக அரசானது காவல் துறை முதல் ரேஷன் கடை வரை எங்கெல்லாம் தமிழ் பயன் படுத்த முடியும் என்பதை ஆராய்ந்து அனைத்து துறைகளிலும் தமிழிலேயே கணினியில் தகவலை பதிவு செய்து கொள்ளுவதை கட்டாயம் ஆக்கி அதை திறம்பட செய்வதற்கு தேவையா மென்பொருள் மற்றும் எனையா வசதிகளை செய்து தரவேண்டும். சும்மா நெஞ்சை நிமிர்த்தி குரலை உயர்த்தி தமிழ் வாழ்க என்றால் மட்டும் தமிழ் வாழ்ந்து விடாது. இதை அனைவரும் உணர வேண்டும்.
தமிழை வளர்ப்பதாக பேசும் பலரும் தமிழை சரியான திசையில் அழைத்து செல்லவில்லை. இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டு மக்களுக்கு மொழி மீது உள்ள பற்று கம்மி. ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளி தமிழில் பேசினால் வெறி பிடித்தவன் என்று நினைக்கும் ஆனவபோக்கு உள்ளது. மற்ற மொழிகளை கண்டிப்பாக கற்றுல்கொள்ள வேண்டும் அதே நேரத்தில் நம் பிள்ளைகளுக்கு தமிழை கற்று தந்து அவர்கள் சரியாக பேசி வருகிறார்களா என்பதையும் பார்க்க வேண்டும்.
இங்கிலாந்தில் 326 மொழி பேசப்படுகிறது. அவற்றில் தமிழ்மொழியும் ஒன்று. அதே போன்று பயிற்சி மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாக உள்ளது' என்றார்.-அப்போ சீக்கிரமா தமிழன் அங்கேயும் தனித் தமிழ் தேசம் கேட்டு போராட்டம் துவங்கி அங்கிருந்தும் தமிழர் எண்ணிக்கையை குறைத்து விடுவானா? நிதானமாக யோசிப்போம். அண்ட போன இடத்தில் கூடாரம் பிடிங்கியது போல இருக்கும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.