நிலையத்தின் படிக்கட்டை ஒட்டியு நிரம்பிவழிந்த நிலையில் ஒரு குப்பைத்தொட்டி அதன் அருகே, சாப்பிட்டு பல நாளானதன் காரணமாக ஒட்டிய வயிறுடன், உயிரை கண்களில் பிடித்து வைத்துக் கொண்டு, ஒரு தொழு நோய் பாதித்த இளைஞன், தன் பக்கத்தில் வீசியெறியப்பட்ட, அழுகிய வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட நினைத்து, சிரமப்பட்டு உடம்பால் நகர்ந்து கொண்டு இருந்தான்.
இந்த காட்சியை பார்த்த ஆயிரக்கணக்கான பயணிகள் "உச்' கொட்டி பரிதாபட்டதோடு சரி, யாரும் பக்கத்தில் போகவில்லை, முதல் காரணம் அவசரம், முக்கிய காரணம் இளைஞனின் உடம்பை உருக்குலைந்து கொண்டிருந்த தொழுநோய் ஏற்படுத்திய அருவருப்பு.
இந்த நேரம் ரயிலில் இருந்து இறங்கிய முதுமையான தோற்றம் கொண்ட கிறிஸ்துவ சகோதரி ஒருவர், இளைஞனை பார்த்த மாத்திரத்தில் தன் வயதையும் பொருட்படுத்தாமல் ஒடோடிப் போய் "மைசன்' என்று தூக்கி தனது மடியில் கிடத்திக் கொண்டார், பிறகு பையில் இருந்த உணவை ஊட்டிவிட்டு, குடிக்க தண்ணீர் கொடுத்து, தலையைக் கோதியபடி "யாராப்ப நீ' என்று விசாரித்தார்.
கர்நாடக மாநிலம் மதுரகிரி என்ற ஊரைச் சேர்ந்த ரமேஷ் பாபுவிற்கு தொழு நோய் என்று தெரிந்த உடனே பெற்றோரே வீட்டைவிட்டு துரத்திவிட்டனர். இந்த துரத்தல் எல்லா பக்கமும் தொடர்ந்தது. தொழுநோயும் வளர்ந்தது.
ஒரு கட்டத்தில் நடமாட முடியாத நிலையில், இந்த ரயில் நிலையத்தின் மூலையில் தஞ்சம் அடைந்துள்ளதாக தனது கதையை கூறிய ரமேஷ்பாபு, பெற்ற தாய் கூட தொடத் தயங்கி, துரத்தி விட்ட தன்னை தூக்கி மடியில் கிடத்தி, உணவு ஊட்டிய கருணை தெய்வத்தின் கைகளை பிடித்துக் கொண்டு கதறி அழுதார். அந்த சகோதரியின் விரல்கள் பிடித்து தொழுதார்.
"நான் வந்துட்டேன்ல, இனி அழக்கூடாது என்று கூறிய சகோதரி, உடனே போன் செய்தார். அடுத்த சில நிமிடங்களில் ஒரு வாகனம் வர, இருவரும் அதில் பயணப்பட்டனர்.
சில ஆண்டுகள் கழிந்தது
இப்போது ரமேஷ் பாபு பெங்களூரு மாநகராட்சியில் சுறு, சுறுப்பாக பணியாற்றும் உதவியாளர். "ரமேஷ்...ரமேஷ்'' என்று அலுவலகமே கூப்பிடுகிறது. கொஞ்சுகிறது. ஒரு காலத்தில் எனக்கு தொழுநோய் இருந்தது என்பதை இப்போது என்னாலயே நம்பமுடியவில்லை. தொழு நோய் முற்றிலும் குணமாகி மைனைவி குழந்தைகள், சொந்த வீடு என்று சந்தோஷமாக இருக்கிறேன் என்கிறார்.
இந்த அதிசயம் எப்படி நடந்தது .
பெங்களூரு பக்கத்தில் உள்ளது சுமன்ன ஹள்ளி; இங்கு அரசின் வேண்டுகோளுக்கிணங்க ஓரு தொழுநோய் இல்லம் ஒன்று, அங்குள்ள கிறிஸ்துவ தொண்டு நிறுவனத்தால் 77ம் ஆண்டு துவங்கப்பட்டது. தொழு நோய் இல்லம் தயராகிவிட்டது, தொழு நோயாளிகளும் வந்துவிட்டனர், ஆனால் அவர்களை பரிவுடன் பார்த்துக்கொள்ள ஒரு அன்புமயமான சகோதரி தேவைப்பட்டார். மாநிலம் முழுவதும் உள்ள சகோதரிகள் அனைவருக்கும் வேண்டுகோள் விடப்பட்டது.
அப்போது சிக்மகளூரில் அரசு பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்துக்கொண்டிருந்த சிஸ்டர் மேரியின் கைக்கும் இந்த வேண்டுகோள் கடிதம் கிடைத்தது. அடுத்த நிமிடமே தான் பார்த்த அரசு வேலையை தூக்கி எறிந்துவிட்டு, இந்த தொழுநோய் இல்லத்தின் பொறுப்பாளராக சேர்ந்துகொண்டார், இல்லையில்லை அர்ப்பணித்துக் கொண்டார் .
அன்று முதல் இன்று வரை கிட்டத்தட்ட 36 வருடங்களாக இந்த தொழுநோய் இல்லத்தில், கருணையே உருவான தாயாக புன்னகையுடன் வலம் வருகிறார் மேரி.
இல்லத்தில் உள்ள தொழுநோயாளிகளை சரியான மருந்து மாத்திரை கொடுத்து குணப்படுத்துவதும், குணமான அவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதும், வேலைக்கு தகுதியில்லாதவர்களுக்கு சிறு கடைகள் அமைத்து கொடுப்பதுமாக, அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தருகிறார், பின்னர் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து, குடும்பம் நடத்தவும் ஏற்பாடு செய்து விடுகிறார்.
இப்போது கிட்டத்தட்ட ஐநூறு பேர் பெங்களூரில் உள்ள அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்க்கின்றனர், அந்த 500 பேரில் ஒருவர்தான் கட்டுரையின் ஆரம்பத்தில் இடம் பெற்ற ரமேஷ் பாபு, 800 பேர்வரை முழுமையாக குணமாகி அரசு கொடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர்.அத்தனை பேர் வீட்டு பூஜை அறைகளிலும் தவறாமல் மேரியின் படம் இடம் பெற்றிருக்கிறது.
இப்போது 75 வயதாகும் மேரிக்கு பல மாநில மற்றும் தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. உண்மையில் இதன் மூலம் விருதுகள் கவுரவம் தேடிக்கொண்டன.,அவரை பொறுத்தவரை "அம்மா, நான் இப்ப நல்ல இருக்கேம்மா'' என்று கைபிடித்து பேசும் முன்னாள் தொழுநோயாளியின் ஆனந்த கண்ணீர்தான் பெரிய விருது.
பெங்களூரில், வாழும் அன்னை தெரசாவாக வலம் வரும் சகோதரி மேரியை வாழ்த்த வயதும், தகுதியும் இல்லாததால் வணங்குவோம்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
கடவுள் இந்த உலகத்தில் மனிதனாக பிறந்தததே மனிதனை நேசித்ததால் தான் .கடவுள் உன்னில் வாழ்ந்தால் இந்த உலகம் கடவுளைக்காணும் . இந்த அன்பு உன் அன்பு அல்ல. தெய்வம் உன்னில் உள்ளதால் உள்ள தெய்வத்தின் அன்பு..இயேசு சொன்னார் ,ஒருவரில் ஒருவர் அன்பு கூறுங்கள் அதனால் நீங்கள் என்னுடைய சீடர்கள் என்பதை இந்த உலகம் அறிந்து கொள்ளும் .இது தெய்வ செயல் . இது மதம் அல்ல.தெய்வம் உண்டு. அன்பே தெய்வம்.மனிதனால் மாத்திரம் இது செய்ய இயலாதது. உலகம் இன்னும் இறைவன் எங்கே என்று தேடிக்கொண்டு இருக்கின்றது ....
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.