பெங்களுரு: ""என் திருமண செலவை, பெண் வீட்டார் தான் செய்தனர். சில செலவுகளுக்கு ஜெயலலிதா பணம் கொடுத்தது பற்றி தெரியாது,'' என, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், சுதாகரன் பதிலளித்தார்.தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.வழக்கை விசாரிக்கும், நீதிபதி பாலகிருஷ்ணாவின் கேள்விகளுக்கு பதிலளிக்க, நான்காவது நாளாக, சுதாகரன் நேற்று ஆஜரானார். மூன்று நாட்களில், 447 கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், நேற்று, 185 கேள்விகளுக்கு பதில் அளித்தார்.சுதாகரன் அளித்த பதில்:என் திருமண செலவுகளை, என் மனைவி வீட்டார் செய்தனர். திருமண செலவு, 5.91 கோடி ரூபாய் என, விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு, ஊழல் தடுப்பு போலீசாரிடம் தகவல் கொடுத்தது பற்றி எனக்கு தெரியாது.என் திருமணத்துக்கு பர்னிச்சர், பாத்திரங்கள் வாங்கியதற்கு சலபதிராவ், சச்சிதானந்தா ஆகியோருக்கும், திருமணத்துக்கு போட்டோ எடுத்ததற்கு ஆறுமுகம் என்பவருக்கும், வாடகை கார் இயக்கியதற்கும், திருமண செலவுகளுக்காக ஜெயலலிதா, "செக்' கொடுத்தாரா என்பது பற்றியும் தெரியாது.திருமணத்துக்காக, எனக்கு 22 சூட், 22 சர்ட், ஷர்வாணி வாங்க, 1.45 லட்சத்துக்கு, காசோலை கொடுக்கப்பட்டது பற்றியும் தெரியாது.சூப்பர் டூப்பர் கம்பெனிக்கு, சசிகலா, அவரது வங்கி கணக்கிலிருந்து, 48 லட்சம் ரூபாய் கொடுத்தது உண்மை. திருமணத்துக்காக, கண்டசா கார் வாடகைக்கு எடுத்ததற்கு, ஜெயலலிதா, பணம் கொடுத்தது பற்றியும், ராதா வெங்கடாச்சலாவுக்கு, சசிகலா பணம் கொடுத்தது, கங்கை அமரனுக்கு பணம் வழங்கியதும் எனக்கு தெரியாது.என் பெயரில், வங்கி கணக்கு துவங்க போயஸ் கார்டன் விலாசம் கொடுத்து, சசிகலா கையெழுத்திட்டார். போயஸ் கார்டன் வீட்டீல், நான், என் மனைவி சத்ய லட்சுமி, சசிகலா, இளவரசி, அவரது மகன் விவேக் ஆகியோர் தங்கியிருந்ததாக, ஜெயராம் என்பவர் கூறியுள்ளார்; அவர் யாரென்றே எனக்கு தெரியாது.இவ்வாறு சுதாகரன் பதில் அளித்தார்.வழக்கின் அடுத்த விசாரணையை, ஜனவரி, 2ம் தேதிக்கு, நீதிபதி பாலகிருஷ்ணா ஒத்தி வைத்தார்.