delhi ush | ஜெயலலிதா வெளிநடப்பும், காங்கிரசும் - Jayalalitha | Dinamalar

ஜெ., வெளிநடப்பும், காங்கிரசும்

Updated : டிச 30, 2012 | Added : டிச 29, 2012
Advertisement
ஜெ., வெளிநடப்பும், காங்கிரசும்

தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள, தனி விமானம் மூலம் காலை 8:00 மணிக்கு, டில்லி வந்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. கூட்டத்தில் பேசிவிட்டு, மதியம் 2:00 மணிக்கு சென்னை திரும்புவதாக திட்டமிட்டிருந்தார். ஆனால், இந்த 10 நிமிட விவகாரத்தால், வெளிநடப்பு செய்த ஜெ., மதியம் 12:00 மணிக்கு விமானம் ஏறிவிட்டார்.முதல்வர்கள் பேச, 10 நிமிடம் தான் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூட்டத்திற்கு முதல்நாள் இரவு, அனைத்து முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பிவிட்டது மத்திய அரசு. கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வரை, காங்கிரசின் அந்தோணி, குலாம் நபி ஆசாத், வீரப்ப மொய்லி, வாசன் மற்றும் சரத்பவார் ஆகியோர் சந்தித்து, நலம் விசாரித்தனர். மோடி உட்பட, பல மாநில முதல்வர்களும் ஜெ.,யை சந்தித்தனர். முதல்வருக்கென்று, முதல் வரிசையில் ஒரு ஸ்பெஷல் இருக்கை அமைக்கப்பட்டிருந்தது. அவர் அமர்ந்த பிறகு, உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே அந்த இடத்திற்கு வந்து, நெடு நேரம் ஜெ.,வுடன் பேசிக் கொண்டிருந்தார்.வெளிநடப்பு எல்லாம், அரசியல் ஆதாயம், வெறும் நாடகம் என்று, காங்கிரஸ் அமைச்சர்கள் தரப்பில் பதில் சொல்லப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட சில காங்கிரஸ் அமைச்சர்கள், தனக்கு நெருக்கமானவர்களுக்கெல்லாம், மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்., அனுப்பினார்கள்.
அதில் எல்லாருக்கும், 10 நிமிடம் தான், 28 பக்க உரையில், 10வது பக்கத்தை படித்த போது, 10 நிமிடம் முடிந்துவிட்டது. மணி அடித்ததும், மற்ற பக்கங்களை படித்துவிட்டதாக எடுத்துக் கொள்ளவும் என்று சொல்லி அமர்ந்துவிட்ட ஜெ., 5 நிமிடம் கழித்துதான் வெளியே சென்றார். எனவே, இது எப்படி வெளிநடப்பாகும்? என்று, அதில் சொல்லப்பட்டிருந்தது.

பி.சி.,யின் ஆதிக்கம்

டில்லி அரசியல் மற்றும் அதிகார வட்டாரங்களில், முக்கிய தலைவர்களின் பெயர்களை, முழுவதுமாக சொல்லமாட்டார்கள்; சுருக்கமாகவே அழைப்பர். சீனியர் காங்கிரஸ் தலைவரும், மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தை செல்லமாக பி.சி., என்றே, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் அழைப்பர். தற்போது, இன்னொரு பி.சி., மிகவும் புகழ் பெற்றுள்ளதோடு, பவர்புல் ஆகவும் உள்ளார். இப்படி பி.சி., என்று அழைக்கப்படுபவர், புலோக் சட்டர்ஜி. சீனியர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சட்டர்ஜி, தற்போது பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, தலைமை செயலராக உள்ளார்.இவர் உத்தரவு இல்லாமல், எந்த ஒரு பைலும் பிரதமருக்குப் போகாது. நாட்டில், எந்த மூலையில் என்ன நடக்கிறது என்பது அனைத்தும், இவருக்குத் தெரியும். பிரதமருக்கு ஆலோசனை வழங்குவது, இவர்தான். ஜூனியர் அமைச்சர்கள், பிரதமரை சந்திப்பதற்கு பதிலாக, இவரை சந்தித்து, தங்கள் அமைச்சக விவரங்களைத் தெரிவிக்கின்றனர். அதிகாரிகளுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் இவர் மீது மரியாதை கலந்த பயம் உண்டு.சோனியா, எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, அவருக்கு சிறப்பு அதிகாரியாக பணியாற்றியவர் புலோக். எனவே, சோனியாவின் நம்பிக்கைக்குரிய அதிகாரி. சோனியாவிற்கும், பிரதமருக்கும் இடையே பாலமாக இருப்பதும், புலோக் சட்டர்ஜி என்கிற பி.சி., தான் என்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள்.

பிறந்த நாள் மாதம் டிசம்பர்

டிசம்பர் வந்தாலே, சென்னை களைகட்டிவிடும், காரணம் சங்கீத சீசன். டில்லியிலோ, டிசம்பர் என்றாலே, பிறந்த நாள் விழாக்கள் களை கட்டும். முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்களின் பிறந்த நாட்கள், டிசம்பரில் தான் வருகின்றன. அவர்களை சந்தித்து, வாழ்த்து சொல்ல, டில்லிக்கு படை எடுப்பார்கள் கட்சி தொண்டர்கள்.இந்த கொண்டாட்டங்களை ஆரம்பித்து வைப்பது, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் பிறந்த நாள் விழாதான். இவருடைய பிறந்த நாள் டிசம்பர் 9. இவர் வீட்டு வாசலில், காங்கிரஸ் தொண்டர்களின் கூட்டம் நிற்க, தலைவர்கள், பூச்செண்டுடன் உள்ளே செல்வார்கள்.இவரைத் தொடர்ந்து, பல தலைவர்களின் பிறந்த நாட்கள், டிசம்பரில் தான் வருகின்றன. முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு, டிசம்பர் 25ம் தேதி பிறந்த நாள். அவர் இப்போது உள்ள நிலையில், அவருக்கு இது நினைவிருக்கிறதா என்பதே சந்தேகம் தான். தமிழகத்தைச் சார்ந்த அமைச்சர், வாசனின் பிறந்த நாளும் டிசம்பரில் தான். தொண்டர்கள் கொண்டாட, வாசனோ ஊரிலேயே இருக்க மாட்டார். வெளியூருக்கு சென்று விடுவார். காங்கிரசின் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணி, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக கருதப்படும் அருண் ஜெட்லி ஆகியோரது, பிறந்த நாள் டிசம்பர் 28, வாசனுடைய பிறந்த நாளும் இதுவே.தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் பிறந்த நாள் டிசம்பர் 12. இப்படி டிசம்பர், அரசியல்வாதிகள் பிறந்த நாள் மாதமாக விளங்குகிறது. தொண்டர்களுக்கும், செலவை அதிகமாக்கும் மாதம் டிசம்பர்!

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை