சேலம்: தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவர் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்குமார், அவரின் உதவியாளர் கவுசிக பூபதி ஆகியோர் மீதான, குண்டாஸ் ரத்தை எதிர்த்து, மாநகர போலீசின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை, ஜன., 2ல் நடக்கிறது. வீரபாண்டி ஆறுமுகம் இறந்து விட்டதால், வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்படும் நிலையில், உறவினர்களுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்குமார், உதவியாளர் கவுசிக பூபதி ஆகியோர் மீது, அங்கம்மாள் காலனி நிலம், பிரிமியர் ரோலர் மில் நிலம், கோயமுத்தூர் ஜூவல்லரியின் நிலம், தாசநாயக்கன்பட்டி பாலமோகன்ராஜியின் நிலம், விவசாய கூட்டுறவு சங்க நிலம் ஆக்கிரமிப்பு ஆகிய வழக்குகளில் சிக்கினர். இதில், வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர்களான பாரப்பட்டி சுரேஷ்குமார், கடந்த ஜன., 30ம் தேதியும், கவுசிக பூபதி, மார்ச், 1ம் தேதியும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். ஜூன், 2ம் தேதி, அங்கம்மாள் காலனி குடிசை எரிப்பு சம்பவத்துக்கு பின், ஜூன், 18ம் தேதி முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், குண்டாசில் கைது செய்யப்பட்டார். இந்த கைதை எதிர்த்து, வீரபாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மனைவி லீலாவதி, ஜூன், 25ம் தேதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மூன்று பேரின் மனுக்களும் சேர்த்து விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இந்த மூன்று பேர் மீதான, குண்டர் தடுப்பு சட்ட கைதை ரத்து செய்து, அக்., 13ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது; மூவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து, சேலம் மாநகர போலீஸ் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், நவ., 23ம் தேதி, வீரபாண்டி ஆறுமுகம், சென்னையில் மரணம் அடைந்தார். அவரின் இறப்பு சான்றிதழை பெற்றுள்ள, மாநகர போலீசார், குண்டர் தடுப்பு சட்ட மேல் முறையீட்டில் இருந்து, அவரை மட்டும் விடுவிக்க தேவையான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸ் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான வக்கீல் ரஞ்சித்குமாரே, டில்லி உச்ச நீதிமன்றத்திலும், இந்த வழக்கில் ஆஜராகிறார். இந்த வழக்கு மேல் முறையிடு குறித்து, உச்ச நீதிமன்றத்தில் இருந்து, வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர்களான, பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுசிக பூபதி ஆகியோருக்கு, சம்மன் வந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை, ஜன., 2ல் உச்சநீதிமன்றத்தில் வர உள்ளது. இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறியதாவது: பொதுவாக, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர், ஓர் ஆண்டு சிறை வாசம் அனுபவிக்க வேண்டும். ஆனால், இவர்கள் குறைந்த நாட்களே அனுபவித்து உள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிரான தீர்ப்பு வரும் பட்சத்தில், ஏற்கனவே அவர்கள் சிறையில் இருந்த நாட்கள் போக, மீதமுள்ள நாட்கள் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.