சிங்கப்பூர்:டில்லியில், ஓடும் பஸ்சில், ஆறு பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு, சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவ மாணவி, நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அவரின் உடல், சிறப்பு விமானம் மூலம், நேற்று நள்ளிரவு டில்லி கொண்டு வரப்பட்டது.
டில்லியில், இம்மாதம், 16ம் தேதி இரவு, ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி ஒருவர், ஆறு பேர் கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு, கற்பழிக்கப்பட்டார். அவருடன் வந்த ஆண் நண்பரும் தாக்கப்பட்டார். பின், இருவரும் பஸ்சிலிருந்து தூக்கி வீசப்பட்டனர்.
இதில், படுகாயம் அடைந்த மருத்துவ மாணவி, டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு மூன்று அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டன.இதில், அவரின் உடல் நிலையில் பெருமளவு முன்னேற்றம் ஏற்படாதததை அடுத்து, இம்மாதம், 26ம் தேதி இரவு, ஆம்புலன்ஸ் விமானம் மூலம், சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டு, அங்கு மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த மருத்துவமனை, உடல் உறுப்புக்கள் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு பெயர் பெற்றது.
எலிசபெத் மருத்துவமனையின், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும், அவர் உடல் நிலையில், முன்னேற்றம் ஏற்படவில்லை. சிங்கப்பூர் நேரப்படி, நேற்று அதிகாலை, 4:45 மணிக்கு (இந்திய நேரம் நள்ளிரவு, 2:15) மாணவி மரணம் அடைந்தார்.இது தொடர்பாக, மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில், தலைமை நிர்வாக அதிகாரி, டாக்டர். கெல்வின் லோ வெளியிட்ட அறிக்கையில், "மாணவியின் உயிர் பிரிந்த போது, அவரின் அருகில் பெற்றோரும், சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் உடனிருந்தனர்.
மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள், மாணவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்' என, கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, மாணவியின் உடல், சிங்கப்பூரில் உள்ள பொது மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்த பின், நேற்றிரவு தனி விமானம் மூலம், டில்லி கொண்டு வரப்பட்டது.
மாணவியின் உடலை கொண்டு வருவதற்காக, ஏர் இந்தியா நிறுவனத்தின், "ஏர் பஸ்ஏ-319' ரக விமானம், நேற்று காலை, 8:00 மணிக்கு, டில்லியிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றது. விமானத்தில், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் உட்பட, சில உயரதிகாரிகள் சென்றனர். அவர்கள், சிங்கப்பூரிலிருந்து உடலை பெற்று, நேற்று நள்ளிரவு டில்லிக்கு எடுத்து வந்தனர்.
மாணவி மரணம் தொடர்பாக, சிங்கப்பூருக்கான, இந்திய தூதரக அதிகாரி, டி.சி.ஏ. ராகவன் கூறியதாவது:ஆறு பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட மருத்துவ மாணவி, சிறப்பான மருத்துவ சிகிச்சைக்காக, டில்லியிலிருந்து, சிங்கப்பூர் கொண்டு வரப்பட்டார். அவரின் உயிரைக் காப்பாற்ற, எலிசபெத் மருத்துவமனை டாக்டர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இருப்பினும், அவரின் உயிர் பிரிந்தது.
மாணவியின் மரணம், அவரின் குடும்பத்தினரை நிலைகுலையச் செய்திருந்தாலும், அவரை காப்பாற்ற சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதை உணர்ந்துள்ளனர். மாணவியின் மரணத்தை தொடர்ந்து, பிரதமர் விடுத்த இரங்கல் செய்தியை, அவரின் குடும்பத்தாரிடம் தெரிவித்து விட்டேன். இதுதவிர, சிங்கப்பூர் அரசு உட்பட, பல்வேறு தரப்பிலிருந்தும், இரங்கல் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
மாணவியின் குடும்பத்தினர், தங்களைப் பற்றிய விபரங்களை தெரிவிக்க வேண்டாம் என, கேட்டுக் கொண்டுள்ளதால், அதை தெரிவிக்க இயலாது.இவ்வாறு டி.சி.ஏ.ராகவன் கூறினார்.
மாணவியின் மரணத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா உட்பட, தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூருக்கு அனுப்பியது ஏன்? கண்காணிப்பாளர் விளக்கம்: ""டில்லியில், ஆறு பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட மருத்துவ மாணவியை, எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்பதற்காகவே, அவரை சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தோம்,'' என, டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் அதானி கூறினார். மருத்துவ மாணவியை, மருத்துவ சிகிச்சைக்காக, சிங்கப்பூருக்கு கொண்டு சென்றது தொடர்பாக, பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், டாக்டர் அதானி கூறியதாவது:
மருத்துவ மாணவியை, சிங்கப்பூர் மருத்துவமனைக்கு மாற்ற முடிவெடுத்தது, அரசியல் ரீதியான காரணமா அல்லது மருத்துவ ரீதியான காரணமா என, விவாதிக்க இது சரியான நேரம் அல்ல.மாணவி நலம் பெற வேண்டும் என, நாட்டிலுள்ள ஒவ்வொரு வரும் விரும்பினர். அவர் மீண்டு வருவார் என்றும் நம்பினர். அதனால், அவரை எப்படியாவது காப்பாற்ற விரும்பினோம்; அதற்காகவே, சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்.
மாணவியின் குடல் பகுதியிலும், "மர்ம' உறுப்பு பகுதியிலும் கடும் காயம் ஏற்பட்டிருந்தது. அதனால், அவரின் குடலில் பெரும் பகுதியை, நாங்கள் நீங்கி விட்டோம். அதன்பின்னும், அவரின் உடலில் மோசமான காயங்கள் இருந்தன.முதல், ஐந்து நாள் சிகிச்சையின் போது, மாணவியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், அவரின் உடலில் சில பகுதிகளில் சீழ் பிடிக்க ஆரம்பித்த பின், உடல் நிலை மோசமடையத் துவங்கியது.
இருந்தாலும், மாணவி நல்ல மன பலத்துடன் இருந்தார். சிகிச்சை பெறும் நிலையிலும், போலீசாரிடம் இரு முறை வாக்குமூலம் அளித்தார். அப்போது, மிக தெளிவாகவும், உஷராகவும் காணப்பட்டார். டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையிலும், சிங்கப்பூர் மருத்துவமனையிலும், மாணவிக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.மாணவி அடைந்திருந்த காயமே, அவரின் துயர முடிவுக்கு காரணமாகி விட்டது.இவ்வாறு, டாக்டர் அதானி கூறினார்.
டில்லி முதல்வர் விரட்டியடிப்பு : ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி, நேற்று அதிகாலை, சிங்கப்பூர் மருத்துவமனையில், மரணம் அடைந்ததால், டில்லியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. நகரின் மையப்பகுதி முழுவதையும், போலீசார் நேற்று தங்களின் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஆனாலும், ஆயிரக்கணக்கான இளைஞர்களும், பெண்களும், ஒரே இடத்தில் கூடி, மவுன அஞ்சலி செலுத்தினர்.
அதேநேரத்தில், மாணவி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க வந்த, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் விரட்டியடிக்கப்பட்டார்.சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, மருத்துவ மாணவி இறந்த செய்தி கேட்டதும், டில்லியின் முக்கிய பகுதிகளில் எல்லாம், நேற்று அதிகாலையிலேயே போலீசார் குவிக்கப்பட்டனர். மாணவி கற்பழிப்பு சம்பவத்திற்குப் பின், டில்லியில், வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததால், மீண்டும் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்தில், போலீசார் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
குறிப்பாக, "இந்தியா கேட்' மற்றும் அதை ஒட்டிய பகுதிகளை, தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த போலீசார், அந்தப் பகுதிகளுக்கு வரும் சாலைகள் அனைத்தையும், இழுத்து மூடினர். நேற்று சனிக்கிழமை என்பதாலும், பெரும்பாலான அரசு அலுவலங்களுக்கு விடுமுறை என்பதாலும், முக்கியமான, 10 மெட்ரோ ரயில்நிலையங்களும் உடனடியாக மூடப்பட்டன.மத்திய டில்லி பகுதி முழுவதும் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், ஜந்தர் மந்தர் மற்றும் ராம்லீலா மைதானங்களில், மக்கள் கூடி, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என, அறிவிக்கப்பட்டது.
அத்துடன், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் வீடுகளுக்கும், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. டில்லி போலீஸ் தலைமை அலுவலகத்திலும், போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த பாதுகாப்பு பணிகளுக்காக, டில்லி போலீசார் மட்டுமின்றி, ரிசர்வ் போலீஸ் படையினர் மற்றும் துணை ராணுவப் படையினரும் வரவழைக்கப் பட்டனர்.
ஜந்தர் மந்தர் பகுதியை நோக்கி, செல்லும் வாகனங்கள் அனைத்தும், சோதனைக்கு பிறகே, அனுமதிக்கப்பட்டன. இதனால், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர், அலுவலகங்களுக்கு செல்ல, மிகுந்த சிரமப்பட்டனர்.இருந்தாலும், போலீசாரின் இவ்வளவு கெடுபிடிகளை தாண்டி, ஜந்தர் மந்தர் பகுதியில், காலை முதலே, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பெண்கள் அமைப்பினர், இளைஞர்கள் என , பல தரப்பினரும் குவியத் துவங்கினர்.
அங்கிருந்து, இந்தியா கேட் பகுதிக்கு சென்று , உயிரிழந்த மாணவிக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட போது, அதற்கு, போலீசார் அனுமதிக்க அளிக்வில்லை. இதனால், அங்கேயே அமர்ந்தனர். மெழுகுவர்த்தி ஏந்தியும், கற்பழிப்புக்கு எதிரான வாசகங்களை கொண்ட பேனர்களை பிடித்தபடியும் அமர்ந்திருந்தனர். சிலர், "நீதி கிடைக்க வேண்டும்' என, குரல் எழுப்பினர்.
இவர்களோடு, ஏழை மக்கள் கட்சியின் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவாலும் அமர்ந்திருந்தார். ஆயிரக்கணக்கானோர் அங்கு கூடியிருந்த போதும், பெரிய அளவில் பதட்டம் ஏதும் இல்லை. சிலர் பிரார்த்தனை பாடல்களை பாடியபடி, இருந்தனர்.மதியத்துக்கு மேல், டில்லி முதல்வர் ஷீலா தீட்சித், ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்தார். இளைஞர்கள், மாணவ, மாணவியரோடு சேர்ந்து, மவுன அஞ்சலி செலுத்தவும், இரங்கல் தெரிவிக்கவும், போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தவும், அவர் விரும்புகிறார் என, கூறப்பட்டாலும், அதை கூடியிருந்தவர்கள்
ஏற்கவில்லை.ஷீலா தீட்சித்தின் காரை மறிக்க ஆரம்பித்தனர். "அவர் உள்ளே வரக் கூடாது' என, அனைவரும் திரண்டனர்.
இதனால், காரை விட்டு இறங்கிய முதல்வரால், சில அடி தூரம் கூட போக முடியவில்லை. வேறு வழியின்றி, அங்கிருந்த நடைமேடையில், ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி, உயிரிழந்த மாணவிக்காக சில நிமிடங்கள், கைகூப்பி மவுன அஞ்சலி செலுத்தி, காருக்கு திரும்பினார். போலீசார் அவரை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
மற்றொரு புறம், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தை மாணவர்கள், ஊர்வலமாக சென்று, உயிரிழந்த பெண், கடைசியாக பஸ் ஏறிய, முனிர்கா பஸ் நிறுத்தம் அருகே கூடி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கற்பழிப்பு சம்பவங்கள் உண்மை என்று நிருபிக்கபட்டால் அவர்களுக்கு மரணதண்டனை உறுதிசெய்யப்படவேண்டும். அவர்கள் திருந்துவார்கள என்று அரசு சோதிச்சு பார்பதற்குள் அவன் வேறொருவன் மீண்டும் உருவாவதற்கு காரணமாக இருப்பான். மேல்முரையீடுனு கேசு தொடர்ந்துகொண்டே இருக்கும். இருக்குற கேச பாக்குறதுக்கே தப்பு பண்றவங்க ஆயுளுமே முடிஞ்சாகூட கேசு முடியாது. அவ்வளவு கேசு நம்ம நாட்டுல நிறைய இருக்கு. இந்த டெல்லி மாணவி பிரச்சினையில் சம்பந்தந்தபட்ட குற்றவாளிகள் அல்லாது வேறு யாரும் சப்போட்டுக்கு வந்தால் அவருடைய இணை குற்றவாளியாக அதாவது குற்றத்தை தூண்டுபவராக எண்ணி அவரையும் சிறையில் அடைக்க வேண்டும்.
கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் அடையாள அணி வகுப்புக்கு ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள். இதிலிருந்தே பொது மக்களின் ஆத்திரதைக் குறைக்க, டூப்ளிகேட்டுகளை சும்மானாச்சுக்கும் கைது செய்திருப்பதுபோல தெரிகிறது . உண்மைக் குற்றவாளிகளின் முழு விவரங்களை வெளியிட என்ன தயக்கம்? நான் ஒரு பெண் நான் ஆட்சிக்கு வந்தால் 100%சட்ட ஒழுங்கைப்பாதுகாப்போம்னு சொன்ன ஒரு பெண்ணின் ஆட்சியிலேயே தலைநகரிலேயே ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.