தமிழகத்தில், பருவமழை பொய்த்து விட்ட நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலின் பெருக்கம் காரணமாக, மேய்ச்சல் நிலங்களும் குறைந்து விட்டதால், ஆடுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆடுகளை வாங்க வியாபாரிகள் ஆந்திராவுக்கு படையெடுக்க துவங்கி உள்ளனர். பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, தேவையான அளவு ஆடுகள் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஆடு வளர்ப்பில், ஈரோடு முதலிடத்தையும், சேலம் இரண்டாம் இடத்தையும், திருநெல்வேலி மாவட்டம் மூன்றாம் இடத்திலும் உள்ளன. அதைத் தொடர்ந்து, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்கள் உள்ளன.நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதால், நீர் நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு விட்டன. அது மட்டுமின்றி, குறைந்த அளவில் உள்ள மேய்ச்சல் நிலங்களிலும், புற்கள், தழைகள் இன்றி வறட்சியாக காணப்படுகிறது.
மேலும், பெருகி வரும் ரியல் எஸ்டேட் தொழில் காரணமாக மேய்ச்சல் நிலப்பரப்பு குறைந்ததால், ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்த விவசாயிகள், மாற்றுத் தொழிலுக்கு செல்லத் துவங்கி விட்டனர். தற்போது, பனிப் பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளதால், ஆடுகளுக்கு நீல நாக்கு உள்ளிட்ட கொடிய நோய் தாக்கமும் அதிகரித்து வருவது, ஆடு வளர்ப்போர் மத்தியில், கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் பெரிய ஆட்டுச் சந்தைகளாக கருதப்படும், ஈரோடு, நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம், திருச்செங்கோடு, மேச்சேரி, திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஆகிய சந்தைகளுக்கு, விற்பனைக்கு வரும் ஆடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
குறைந்த எண்ணிக்கையில், விற்பனைக்கு வரும் ஆடுகளின் விலையும், கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் அசைவ பிரியர்களை திருப்தி படுத்தும் வகையில், ஆட்டு வியாபாரிகள், தற்போது ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு, ஆடுகளை கொள்முதல் செய்ய படையெடுத்து உள்ளனர்.
தமிழகத்தில், கடந்த மாதம் வரை, 10 கிலோ எடை கொண்ட ஆடு, உயிருடன் 4,500 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை, விற்பனை செய்யப்பட்டது. தற்போது, 5,500 ரூபாய் முதல், 6,000 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.ஆடு விலையில் ஏற்பட்ட உயர்வை அடுத்து, சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில், ஆட்டுக் கறியின் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வரை, ஆட்டுக்கறி கிலோ, 400 ரூபாய்க்கு விற்றது, தற்போது, 425 முதல், 475 ரூபாய் வரை, விற்பனையாகிறது.
சேலத்தில் கடந்த வாரம் வரை, கிலோ, 380 ரூபாய்க்கு விற்றது, 400 ரூபாயாக அதிகரித்துள் ளது. தமிழகத்தில் ஆடுகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், பொங்கல் பண்டிகையின் போது ஆட்டுக்கறியின் விலை,500 ரூபாய் வரை உயர்வு ஏற்படும். அதே சமயம், வெள்ளாடு களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால், பொங்கல் பண்டிகையின் போது, தேவையான அளவு ஆட்டுக்கறி கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.