ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடிக்கு குறைந்தளவிலேயே வெளிநாடுகளில் இருந்து பிளமிங்கோ பறவைகள் வந்துள்ளன. நவம்பர், டிசம்பர், ஜனவரியில் தனுஷ்கோடி, கோதண்ட ராமர் கோயில், முகுந்தராயர் சத்திரம் பகுதியை சுற்றி, மழை நீருடன் கடல் நீரும் சூழ்ந்து, குளிர்ந்த காற்றுடன், பனி பொழியும். இதை அனுபவிக்க, ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து பிளமிங்கோ உட்பட ஆயிரக்கணக்கான பறவைகள் வரும். மூன்று மாதங்கள் தங்கி, சவுக்கு மரக்காட்டில் முட்டையிட்டு, குஞ்சுகளுடன் நாடு திரும்பும். இவற்றை கடந்தாண்டில் சிலர், வேட்டையாடினர். சிலர் இறைச்சியை விற்றனர். தடுக்க வேண்டிய, வனத்துறையினர் அலட்சியமாக இருந்ததால், வேட்டைக்காரர்களின் ராஜ்யமாக இருந்தது. இதனால், இந்தாண்டு தாமதமாக, 100க்கும் குறைவான பறவைகளை வந்துள்ளன. கோதண்ட ராமர் கோயில் அருகே குவிந்துள்ளன. இவை அணிவகுத்து நிற்கும் அழகையும், பறக்கும் போது, வானில் சிவப்பு நிற போர்வை விரித்திருப்பது போன்ற அழகை, பொதுமக்கள் ரசித்து வருகின்றனர். இவற்றை வேட்டைக்காரர்களிடம் இருந்து பாதுகாக்க, வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.