திருப்பூர் : ""திருப்பூர் மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக, 8 லட்சம் ரூபாய் அரசு நிதி வரப்பெற்றுள்ளது'' என, தொழிற்சாலைகள் ஆய்வாளர் இளங்கோவன் பேசினார். திருப்பூர் "சேவ்' அமைப்பு சார்பில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான, சமூக பாதுகாப்பு திட்டம் குறித்த கருத்தரங்கு ரமணாஸ் ஓட்டலில் நேற்று நடந்தது. அதில், தொழிற்சாலைகள் ஆய்வாளர் இளங்கோவன் பேசியதாவது:கட்டுமான தொழிலாளர்கள், சலவையாளர்கள், முடி திருத்துவோர், கைத்தறி நெசவு, ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர்கள், பனை ஏறுவோர், ஓவியம் வரைவோர் என, 17 வகையான தொழில் புரிவோர் அமைப்பு சாரா தொழிலாளர் பட்டியலில் உள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் இணைந்துள்ள பயனாளிகளுக்கு நடப்பு காலாண்டில் வழங்குவதற்காக, ரூ. 8 லட்சம் அரசு நிதி
வரப்பெற்றுள்ளது.நலவாரியத்தில் உறுப்பினராக இணைவோர், விண்ணப்பம் பெறுவது, அடையாள அட்டை பெறுவது என, ஏதேனும் ஒரு செயல்பாட்டுக்காவது நேரில் வரவேண்டும், என்றார்.அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு மாநில செயலாளர் லீலாவதி பேசுகையில், ""அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் இருந்த 37 வாரியங்கள் தற்போது தனி வாரியங்களாக பிரிக்கப்பட்டுவிட்டன; தற்போது 17 வாரியங்கள் மட்டுமே உள்ளன. நலவாரியத்தில் இணைவதற்கு, பல்வேறு புதிய நடைமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.""தொழிற்சங்கங்களின் துணையின்றி, வி.ஏ.ஓ.,விடம் கையெழுத்து பெற்று, பயனாளிகள் நலவாரியத்துக்கு நேரில் வந்து உறுப்பினராக இணைய வேண்டியுள்ளது. இந்நடைமுறையால், தொழிலாளர்கள் வீண் அலைக்கழிப்புக்கு உள்ளாகின்றனர். தொழிலாளர்கள் வாரியத்தில் இணைவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும்'' என்றார்."சேவ்' அமைப்பு இயக்குனர் அலோசியஸ் தலைமை வகித்தார். திட்ட இயக்குனர் வியாகுலமேரி
வரவேற்றார். நலத்திட்ட உதவிகள் பெறுவதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து மகளிர் குழுவினர், அமைப்புசாரா தொழிலாளர்கள் தெரிவித்தனர். சி.ஐ.டி.யு., மாவட்ட துணை செயலாளர் முருகேசன், எல்.பி.எப்., பொதுசெயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.