திருவண்ணாமலை : நித்யானந்தா இந்தாண்டு பிறந்த நாளை சிறப்பாக பக்தர்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளார். அவரது நேரடி கண்காணிப்பில், விழா ஏற்பாடு நடந்து வருவதால், திருவண்ணாமலை தியான பீடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நித்யானந்தாவுக்கு, 2012ம் ஆண்டு மிகவும் சோதனையான ஆண்டாக அமைந்தது. அவர் பல்வேறு இன்னல்களை சந்தித்து, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினார்.
இதில், கடந்தாண்டு ஏப்., 29ம் தேதி, 203வது மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்ட போது, மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்த போதும், மற்றொருபுறம் இந்து அமைப்புகள் , பிற ஆதீனம், பிற மடத்தை சேர்ந்தவர்களின் எதிர்ப்பு போன்றவை, இவரது நிம்மதியை பறித்தன.
ஏற்கனவே நடிகை ரஞ்சிதாவுடன் பாலியல் சர்ச்சை ஓயாத நிலையில், இளைய ஆதீன பொறுப்பு ஏற்றதும், அதற்கு வந்த எதிர்ப்பாளர்களையும் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
பிடதி ஆசிரமத்தில் நிருபர்களுடன் மோதல் ஏற்பட்டு, கடந்த ஜூன், 12ம் தேதி, பிடதி ஆசிரமம் சீல் வைக்கப்பட்டு, மறுநாள் கர்நாடகா போலீசாரால், நித்யானந்தா கைது செய்யப்பட்டதால், அடுத்த சறுக்கல் ஏற்பட்டது,
அக்., 16ம் தேதி, "மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நியமித்தது செல்லாது' என, தமிழக அரசு அறிவித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனால், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், நித்யானந்தாவை இளைய ஆதீனம் பொறுப்பிலிருந்து நீக்கினார்.
இதனால், கடந்தாண்டு இவருக்கு அடிமேல் அடியாக, ஆண்டு முழுவதும் நித்யானந்தாவுக்கு சோதனையாக அமைந்தது. இவரது சீடர்கள் சிலர் விரக்திக்கு ஆளாகினர். சிலர் நித்யானந்தாவின் சீடர் என, சொல்வதை தவிர்த்து, அவரிடமிருந்து விலகி செல்ல துவங்கினர்.
அதனால், அவருக்கு கடந்த காலங்களை போல் சீடர்கள் கூட்டம் இல்லாமல் குறைந்து விட்டது. இதனால், அவரது சீடர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்து, மீண்டும் தன் பழைய இமேஜை கொண்டு வர, அவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அதற்காக, 2013ம் ஆண்டில் அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தார். அவரது பிறந்த நாள் நட்சத்திரம் நாளை வருவதால், அவரது, 36வது பிறந்தநாளை, 36வது அவதார பெருநாளாக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தியான பீடத்தில் கொண்டாட முடிவு செய்துள்ளார்.
இதற்காக, தியான பீடத்தில் பிரமாண்டமாக பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அன்னதானம் வழங்க, அங்கு போதுமான இடம் இல்லாததால், அவரது தியான பீடத்தின் எதிரில் உள்ள சீனுவாசா உயர்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
எப்போதும் தியான பீடத்தில் எந்த விழா நடந்தாலும், அவரது சீடர்களே ஏற்பாடு செய்வது வழக்கம். ஆனால், இந்த முறை விழா சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக, மூன்று நாட்களுக்கு முன்னதாகவே திருவண்ணாமலைக்கு வந்துவிட்ட நித்யானந்தா, விழா ஏற்பாடுகளை தன் நேரடி பார்வையில் செய்து வருகிறார்.
அவரது ஆசிரமத்திற்கு வெளியூரிலிருந்து, சீடர்கள் வருகை தர துவங்கி விட்டனர். இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் இந்து அற நிலையத்துறை அதிகாரிகளும், போலீசாரும் தியான பீடத்தில் நடக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.