புதுடில்லி : டில்லியில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட, ஆறு பேரில், இரண்டு பேர், அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்துள்ளனர். மற்ற இரண்டு பேர் சட்ட உதவி வேண்டும் என, கோரியுள்ளனர்.
டில்லியில், கடந்த மாதம், 16ம் தேதி, ஓடும் பஸ்சில், 23 வயது மருத்துவ மாணவியை, ஆறு பேர் பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக தாக்கி, தூக்கி வீசினர். மாணவியின் ஆண் நண்பரும் கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில், பலத்த காயமடைந்த மாணவி, சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கோர்ட்டில் ஆஜர் : இந்த பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், நான்கு பேரின், 14 நாள் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து, அவர்கள் நேற்று, டில்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில், மாஜிஸ்திரேட் ஜோதி கெலரின் அறையில், அவர் முன் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது, நான்கு பேரில் இருவரான, பவன் குப்தா மற்றும் வினய் சர்மா என்ற இருவரும், தங்களுக்கு சட்ட உதவி தேவையில்லை என்றும், வழக்கில், அப்ரூவராக மாற விரும்புவதாகவும், மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்தனர்.
அதேநேரத்தில், மற்ற இருவரான ராம்சிங் மற்றும் அவரின் சகோதரர் முகேஷ் ஆகியோர், தங்களுக்கு சட்ட உதவி வேண்டும் என, கேட்டனர். இதையடுத்து, நான்கு பேரின் நீதிமன்ற காவலையும், வரும், 19ம் தேதி வரை நீட்டித்த மாஜிஸ்திரேட், அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையை பரிசீலித்த கோர்ட், ஏற்கனவே பிறப்பித்துள்ள, "வாரன்ட்' அடிப்படையில், இன்று கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என, உத்தரவிட்டார்.
மாஜிஸ்திரேட் மேலும் கூறுகையில், "அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்துள்ள பவன் குப்தாவும், வினய் சர்மாவும், இதுதொடர்பாக, தக்க மனுவை, கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். ராம் சிங் மற்றும் முகேஷுக்கு சட்ட உதவி அளிக்கப்படும்' என்றார். கைதானவர்களில், ஐந்தாவது நபரான, அக்ஷய் தாக்கூரின், நீதிமன்ற காவல், வரும், 9ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனாலும், மற்றவர்களுடன் சேர்ந்து, அவனும் இன்று கோர்ட்டில் ஆஜராகிறான். கைதான ஆறாவது நபர், சிறார் என்பதால், அவன் தொடர்பான வழக்கு, சிறார் நீதிமன்றத்தில் நடைபெறும்.குற்றம் சுமத்தப்பட்டவர்கள், மாஜிஸ்திரேட்டின் அறையில் ஆஜர்ப்படுத்தப்பட்டாலும், நீதிபதி கோர்ட்டிலேயே உத்தரவுகளை பிறப்பித்தார். கோர்ட் நடவடிக்கை களை, பத்திரிகைகளில் பிரசுரிக்கக் கூடாது என, அங்கு ஆஜராகியிருந்த மீடியாக்களை சேர்ந்த யாருக்கும் உத்தரவிட வில்லை.
நிபுணர்கள் கருத்து : இதற்கிடையில், மரண தண்டனையிலிருந்து தப்புவதற்காகவே, பவன் குப்தாவும், வினய் சர்மாவும், தாங்கள் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சட்ட நிபுணர்களோ, "டில்லியில் நடந்தது போன்ற கொடூரமான பாலியல் பலாத்கார சம்பவங்களில், குற்றம் சாட்டப்பட்ட யாரும், அப்ரூவராக மாற முடியாது' என, தெரிவித்துள்ளனர்.
அவர் மேலும் கூறியதாவது: ஒரு சில வழக்குகளில், ஆதாரங்களைத் திரட்ட போலீசார் சிரமப்படுவர்; அப்படிப்பட்ட நேரங்களில், வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களையே, அப்ரூவராக மாறும்படி கேட்டுக்கொள்வர். இதன்மூலம், சாட்சியாக மாறுவோர், தண்டனையிலிருந்து தப்பலாம் அல்லது குறைவான தண்டனை பெறலாம். ஆனால், டில்லி சம்பவத்தில், அதற்கான வாய்ப்பு இல்லை. இவ்வாறு, சட்ட நிபுணர்கள் கூறினர்.மகளின் பெயரை வெளியிட கோரிக்கை : "டில்லியில் பாலியல் பலாத்காரத்திற்கு பலியான மருத்துவ மாணவியின் பெயரை, மத்திய அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும்' என, அந்த மாணவியின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தன் சொந்த கிராமத்தில், பிரிட்டன் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
ஆறு பேர் கும்பலால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பலியான என் மகளின் உண்மையான பெயரை அறிந்து கொள்ள உலகமே விரும்புகிறது. அவளின் பெயரை வெளியிடுவது, இதுபோன்ற பலாத்கார சம்பவங்களால் பாதிக்கப்பட்டு, உயிரோடு வாழும் பெண்களுக்கு, தைரியம் கொடுப்பதாக அமையும். என் மகள், தவறு எதையும் செய்யவில்லை. தன்னை பாதுகாத்துக் கொள்ள முற்பட்டே, அவள் இறந்தாள். அதனால், அவளின் பெயரை உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என, நாங்களும் ஆசைப்படுகிறோம். என் மகளை சீரழித்தவர்களை, நேருக்கு நேர் சந்திக்க, நான் முதலில் விரும்பினேன்.
ஆனால், இப்போது அதை விரும்பவில்லை. கோர்ட் அவர்களை தண்டிக்க வேண்டும். அவர்கள் தூக்கிலிடப்பட்டனர் என்பதை நான் கேட்க வேண்டும்; அது போதும். விலங்குகளைப் போல நடந்து கொண்ட, ஆறு பேருக்கும், மரண தண்டனை வழங்க வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை, சமூகத்தில் மற்றவர்களுக்கும் பாடமாக அமைய வேண்டும். இவ்வாறு, மாணவியின் தந்தை கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அதிகமாக தவறு செய்வது அதிகமாக படிக்காதவனே தவிர ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை குறிப்பிடுவது அறிவிளிக்க்கான பேச்சு மும்பையில் பயங்கரவாத தாக்குதல் ஏற்பட்டபோது காப்பாற்ற ஓடிவந்தது இந்தியன் என்ற முத்திரையுடன் வந்தவனே தவிர தனது இனத்தின் அடையாளமாக அல்ல அப்பொழுது யாரும் வேண்டாம் மகாராஷ்டிரா வீரர்கள் தான் உயிர் கொடுப்பார்கள் இவர் சொல்லவில்லை, இவருடைய பேச்சு கல்வி அறிவு இல்லாததால் இவ்வளவு பிரச்சனையும் கல்வியறிவை மேம்படுத்துவோம் ன்னு சொல்லி இருக்கணும் .. அத விட்டுட்டு, எங்கேயாவது ஒரு தப்பு நடந்த அவன் பிகாரி, மதராஷி, கன்னடிக்கா, மலையாளி ஒட்டு மத்த சமுதாயத்தை குறை கூறுவதை தவிர்க்க வேண்டும் ... நான் எழுதினத .. அவர் ஒன்னும் பார்க்க போறது இல்லை இருந்தாலும் இங்க நம்ம மக்களே பல நீதிபதிகளாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்காக
இது நல்லா இருக்கே... அப்போ என்ன வேணும்னாலும் குற்றம் பண்ணிட்டு, கடைசில, "ஐயா... நான் செஞ்சது தப்புதான்... அப்ரூவரா மாறிடறேன்"ன்னு சொல்லி தப்பிச்சுக்கலாமா... 17 வயசு 364 நாள்தான் ஆச்சு'ன்னா பாலியல் பலாத்காரம் பண்ணிட்டு அப்படியே கொலையும் பண்ணிட்டு வெளிய ஜாலியா சுத்தலாமா... அருமையான நாடு ஐயா நம் நாடு... சட்டத்துறை வல்லுனர்களே, ஆட்சியாளர்களே.... அப்படியே கையோட அப்ரூவரா மாறினவங்களுக்கும் மைனர் குற்றவாளிகளுக்கும் பாராட்டு விழா எடுத்து, ஒரு அரசு வேலையும் போட்டுக்குடுத்துடுங்க... வருங்கால சந்ததிகள் உங்களை வாழ்த்தும்...
இறந்த அந்த பெண்ணின் தந்தைக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். நல்ல கதையாக இருக்கிறதே. இந்த விஷயத்தில் எதற்கு குற்றத்தில் ஈடுபட்டவனே அப்ரூவராக மாற வேண்டும்? அதுதான் நெற்றியில் அடித்து ஒட்டிவிட்டார்களே இவர்கள் தான் குற்றவாளிகள் என்று. இன்னமும் என்ன விசாரணம், சட்ட உதவி வேண்டு இருக்கிறது. நம் நாட்டின் சட்ட முறைகள் இந்த லட்சணத்தில் தான் இருக்கும். கையும் களவுமாக பிடித்தால் கூட விசாரணை அது இது என்று ஒரு மாமாங்கம் கடத்துவார்கள். அப்படியே மரண தண்டனை விதித்தால் கூட ஜனாதிபதி கருணை காட்டி விடுவார். ஏன் என்றால் மனித உயிரை பறிக்க கிரிமினல்களை தவிர யாருக்கும் உரிமை இல்லையாம். கிரிமினல்கள் மட்டுமே மனித உயிர்களை பறிக்கலாம். அந்த கிரிமினல்களின் உயிரை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை. நல்ல சட்டம். இந்த லட்சணத்தில் ஒரு நீதிபதி ""குற்றங்களை தடுப்பது எப்படி"" என்று போதித்திருக்கிறார். சட்டங்கள் இந்த அளவுக்கு FLEXIBLE ஆக இருந்தால் குற்றங்களை எப்படி தடுக்க முடியும்? குற்றம் புரிய யாருக்கும் பயமே இருக்காதே. . பிறகு அந்த சிறுவன் விஷயம். அந்த வழக்கு அவன் சிறார் என்பதால் சிறார்கள் நீதிமன்றத்தில் நடைபெறுகிறதாம். ஒரு சிறுவன் செய்யும் காரியத்தையா அவன் செய்திருக்கிறான்? இந்த ஆறு பேர் மீதும் பாரபட்சமும் காட்டாமல் ஊர் பொதுவில் வைத்து தூக்கிலிட வேண்டும். உண்மையிலேயே குற்றங்கள் குறைய வேண்டும் அல்லது குற்றங்கள் நடப்பதை தடுக்க வேண்டும் என்று விரும்பும் சட்ட வல்லுனர்கள் இந்த கடுமையான தண்டனையை நிறைவேற்ற வேண்டும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.