சென்னை: ""மலேசியாவிற்கு, இவ்வாண்டு, 7 லட்சம் இந்திய சுற்றுலா பயணிகள் வருவர் என, எதிர்பார்க்கிறோம்,'' என, மலேசியா சுற்றுலா துறை இயக்குனர் சுல்கிபிளை முகமது சையத் கூறினார். சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிப்பதற்காக, மலேசியா சுற்றுலாத்துறை மற்றும் தமிழகத்தில் உள்ள சுற்றுலா முகவர்களின் சந்திப்பு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.
இதில், மலேசியா அரசு சுற்றுலாத் துறையின், தென் மேற்கு ஆசிய இயக்குனர் சுல்கிபிளை முகமது சையத் கூறியதாவது: இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு, கடந்தாண்டு, 5 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்தனர். இவ்வாண்டு, 7 லட்சம் பயணிகள் வருவர் என, எதிர்பார்க்கிறோம். இதற்காக, இம்மாதம், 18ம் தேதி வரை, டில்லி, சென்னை, மும்பை மற்றும் கோல்கட்டாவில், இந்திய சுற்றுலா முகவர்களின் சந்திப்பு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலேசியா முக்கிய சுற்றுலா தலங்கள் குறித்த பயண திட்டங்கள் குறித்தும், அவற்றுக்கான போக்குவரத்து சலுகைகள் குறித்தும், இந்த கூட்டங்களில் விளக்கவுள்ளோம். சென்னையில் நடந்த கூட்டத்தில், தமிழகம் முழுவதிலிருந்தும், 200 முன்னணி பயண முகவர்கள் பங்கேற்றனர். மற்ற நாடுகளின் சுற்றுலா பயணிகளைவிட, இந்திய சுற்றுலா பயணிகளுக்கு, 25 சதவீதம் பயணச் செலவு குறைக்கும் வகையில், சலுகை திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில், இந்திய சினிமாக்களின் படப்பிடிப்புகள் நடத்த விரும்பினால், தேவையான சலுகைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.