மதுரை: "ஓட்டுநர் உரிமம் இன்றி, வாகனம் ஓட்டியதால் இழப்பீடு குறைத்து வழங்க முடியாது. கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் 3 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்,' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. கும்பகோணத்தை சேர்ந்தவர் லட்சுமி. இவரது மகன் ராதாகிருஷ்ணன்,27. ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்தார். இவர், 2005 நவ.,15 ல் டூவீலரில் சென்றபோது, அரசு பஸ் மோதி பலியானார். இழப்பீடு கோரி, கும்பகோணம் மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில், லட்சுமி மனு தாக்கல் செய்தார். தீர்ப்பாயம்,"ஓட்டுநர் உரிமம் இன்றி ராதாகிருஷ்ணன் டூவீலர் ஓட்டியுள்ளார். அரசு போக்குவரத்துக் கழகம் பொறுப்பேற்க முடியாது. இருந்தாலும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகம், 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்,' என உத்தரவிட்டது. கூடுதல் இழப்பீடு கோரி, ஐகோர்ட் கிளையில் லட்சுமி மேல்முறையீடு செய்தார்.
நீதிபதி பி.தேவதாஸ்: ஒருகாலத்தில், உரிமம் இன்றி வாகனம் ஓட்டி விபத்து நடத்தால், ஓட்டியவர்தான் சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற கருத்து இருந்தது. இழப்பீடும் குறைத்து வழங்கப்பட்டது. தற்போது, அக்கருத்து மாறிவிட்டது.
உரிமம் இன்றி வாகனம் ஓட்டியதால், கவனக்குறைவு என கூறமுடியாது. கவனக்குறைவு மற்றும் வேகமாக ஓட்டியதாக சாட்சிகள் நிரூபிக்க வேண்டும். இவ்வழக்கில், உரிமம் இன்றி டூவீலர் ஓட்டியவரின் கவனக்குறைவு, வேகம்தான் விபத்திற்கு காரணம் என நிரூபிக்கப்படவில்லை. பஸ் டிரைவரின் வேகம் மற்றும் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பஸ் டிரைவருக்கு உரிமம் உள்ளதால், உரிமம் இன்றி ரோட்டில் வாகனம் ஓட்டுவோர் மீது மோதி விபத்து ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. ராதாகிருஷ்ணன் இறக்கும் போது மாதம் 3000 ரூபாய் சம்பாதித்துள்ளார். அவரது குடும்பத்திற்கு, போக்குவரத்துக் கழகம் 3 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், என உத்தரவிட்டார்.