சென்னை: வக்பு வாரியத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இருவர், நியமனத்தை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி, அரசுக்கு, "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.
சென்னை, புதுப்பேட்டையைச் சேர்ந்த, வழக்கறிஞர் அப்துல் ரகுமான் தாக்கல் செய்த மனு: வத்தலக்குண்டுவில் உள்ள, ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தின், இடைக்காலக் குழுத் தலைவராக உள்ளேன். வக்பு வாரியத் தலைவராக, தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டு, நியமிக்கப்பட்டுள்ளார். வாரிய உறுப்பினராக இவரை நியமிப்பதற்கு தகுதியில்லை.
எம்.எல்.ஏ.,க்களில் இருந்து, இரண்டு பேர், வக்பு வாரிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், முகமது ஜான், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை துறை அமைச்சராக உள்ளார். வக்பு வாரிய சட்டப்படி, சில பிரச்னைகளில், சிறுபான்மை துறையிடம் தான், மேல்முறையீடு செய்ய வேண்டும்.
சிறுபான்மை துறை, அமைச்சரின் கீழ் வருவதால், அவரை, வக்பு வாரிய உறுப்பினராக நியமிப்பதற்கு தகுதியில்லை. எனவே, வக்பு வாரிய உறுப்பினர்களாக, தமிழ்மகன் உசேன், அமைச்சர் முகமது ஜான் ஆகியோரை, நியமித்தது சட்டவிரோதமானது.
வக்பு வாரிய தலைவராக, தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்ட பின், வத்தலக்குண்டு, ஜும்மா பெரிய பள்ளிவாசல் நடவடிக்கைகள், விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த விசாரணைகளை நடத்த, வாரியத் தலைவர் தமிழ்மகன் உசேன், உறுப்பினரான, அமைச்சர் முகமது ஜான் ஆகியோருக்கு தகுதியில்லை.
எனவே, நான் தலைவராக இருக்கும், ஜும்மா பெரிய பள்ளிவாசல் தொடர்பான விசாரணையில் பங்கேற்க, வக்பு வாரிய உறுப்பினரான அமைச்சர் முகமது ஜான், வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன், மற்றும் பரூக் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும். இவர்களை, வக்பு வாரிய உறுப்பினர்களாக நியமித்ததை, ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை, நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார். மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, அரசுக்கு, "நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார்.