district news | தமிழகம் முழுவதும் வர்த்தகர்கள், தொழில் அமைப்பினர் போர்க்கொடி : மின் தடையை கண்டித்து "ஸ்டிரைக்'| Dinamalar

தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் வர்த்தகர்கள், தொழில் அமைப்பினர் போர்க்கொடி : மின் தடையை கண்டித்து "ஸ்டிரைக்'

Added : ஜன 09, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

தமிழகம் முழுவதும் சீரான மின் வினியோகம் கோரி, சென்னை தவிர்த்து, மாநில அளவிலான வர்த்தகர்கள், தொழில் துறையினரின் கதவடைப்பு போராட்டம் இன்று நடக்கிறது. பெரும்பாலான அமைப்புகள் கதவடைப்பில் பங்கேற்கவுள்ளதால், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு உற்பத்தி இழப்பு ஏற்படும்.
தமிழகத்தில் சென்னை மண்டலம் தவிர்த்த, பிற பகுதிகளில் தினமும், 14 முதல் 18 மணி நேரம் வரை மின் வெட்டு ஏற்பட்டு வருவதால், தொழில் முனைவோர், தொழிலாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் என, அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொழில் வளர்ச்சி மிக்க கொங்கு மாவட்டங்களான, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, கணக்கிட முடியாது.
நம்பிக்கை இல்லை
சென்னையிலுள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு, தங்கு தடையற்ற மின்சாரத்தை வழங்கி வரும் தமிழக அரசு, தமிழகத்தில் பாரம்பரியமாக தொழில் செய்து வரும் சிறுதொழில் முனைவோரைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதேயில்லை என்ற குமுறல், தொழில் முனைவோரிடம் உள்ளது. புதிய மின் உற்பத்தி நிலையங்களைத் துவங்குவதும், தாமதமாகிக் கொண்டே வருவதால், மின் நிலைமை இப்போதைக்கு சீராகும் என்ற நம்பிக்கை, யாரிடமும் காணப்படவில்லை.
அதுவரையிலும், இருக்கும் மின்சாரத்தை சமமாகப் பங்கிட்டுத் தர வேண்டுமென்று, மாநிலம் முழுவதும் உள்ள தொழில் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன; மின் நிலைமை சீராகும் வரையிலும், பன்னாட்டு நிறுவனங்களுடன் புதிதாக புரிந்துணர்வு ஒப்பந்தம் எதையும் போடக் கூடாது என்ற தொழில் அமைப்புகளின் கோரிக்கையையும் அரசு ஏற்கவில்லை.
இதனால், சென்னை தவிர்த்த தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் உள்ள மக்கள் அனைவரும், அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த பாரபட்சத்தை எதிர்த்து, தனித்தனியாக போராட்டங்கள் நடத்தியதற்கு பலன் கிடைக்கவில்லை.
அதனால், தமிழகத்தில் சென்னை மண்டலம் தவிர்த்த அனைத்து மாவட்டங்களில் உள்ள தொழில், வர்த்தகம் மற்றும் சமூக அமைப்புகளை ஒருங்கிணைத்து, தமிழ்நாடு மின் நுகர்வோர் கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆதரவு
மின்சாரத்தை சென்னை உட்பட எல்லா பகுதிகளுக்கும், அனைத்து நுகர்வோருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்க வேண்டுமென்ற ஒரே கோரிக்கையை வலியுறுத்தி, இன்று காலை, 6:00 மணியிலிருந்து மாலை, 6:00 மணி வரை, ஒரு நாள் கதவடைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்துக்கு, தொழில் மாவட்டமான கோவையில் பலத்த ஆதரவு கிடைத்துள்ளது. கொடிசியா, தொழில் வர்த்தக சபை, சீமா, சைமா, சைகா, டாக்ட், காட்மா உட்பட 39 தொழில் அமைப்புகள் இதில் பங்கேற்கின்றன.
கூட்டுக்குழுவில் பங்கேற்றுள்ள தொழில் வர்த்தக சபை கோவை கிளையின் நிர்வாகி பழனிச்சாமி கூறுகையில், ""கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 50 ஆயிரத்துக்கும் அதிகமான சிறு, குறுந்தொழில் கூடங்கள், பல லட்சம் விசைத்தறிக் கூடங்கள் இன்று மூடப்படுகின்றன. ஐந்து லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் இதில் பங்கேற்பர். கோவையில் மட்டுமே, இன்று ஒரே நாளில், 500 கோடி ரூபாய்க்கு உற்பத்தி இழப்பு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார்.
தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மகேந்திர ராமதாஸ் கூறியதாவது:
கடந்த மாதம், 8ம் தேதியன்றுதான், இந்த கூட்டுக்குழு துவக்கப்பட்டது; ஒரே மாதத்தில், ஏராளமான அமைப்புகள் இதில் இணைந்துள்ளன.
மதுரை, திருச்சி, கடலூர், விருதுநகர் என, பல மாவட்டங்களிலும் ஆதரவு அதிகமாகவுள்ளது. குறிப்பாக, கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற தொழில் மாவட்டங்கள் ஸ்தம்பிக்கும் வாய்ப்புள்ளது. இந்த கதவடைப்பு, அரசின் கவனத்தை ஈர்க்குமென்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓட்டல்
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், ஜவுளி, ஓட்டல் மற்றும் நகைத் தொழில்களைச் சேர்ந்த அமைப்புகள், இந்த கதவடைப்பில் பங்கேற்க இயலவில்லை என்று கூறியுள்ளன; அடுத்த கட்டப் போராட்டத்தில், தங்களை இணைத்துக் கொள்வதாக வணிகர் அமைப்புகள் உறுதியளித்துள்ளன.
ஒரு வாரத்துக்குள் தீர்வு காணப்படாவிட்டால், அடுத்த கட்டப் போராட்டம் பற்றி ஆலோசிக்கப்படுமென்று கூட்டுக்குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் குழு -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை