திருச்சி: மாவட்டத்தில் இரண்டு இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடப்பதால், மாடுகளுடன் மல்லுக்கட்ட இளைஞர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
விளைநிலமும், வீரமும் தமிழர்களின் இருகண்கள். தமிழர்களின் பாரம்பரியத்தில், நிலத்துக்கும், வீரத்துக்கும் தொடர்புடைய விழாக்களே அதிகளவு இருக்கின்றன. அறுவடை திருநாள் எனப்படும் பொங்கல் பண்டிகையையும் இதை வகையை சேர்ந்ததுதான்.
உழைக்கும் கால்நடைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, மாட்டுப்பொங்கல் விழாவை தமிழர்கள் கொண்டாடினாலும், அதே கால்நடையை கொண்டு, வீரத்தை வெளிப்படுத்தும் விதமாக, ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்டுவதும் வழக்கம்.
தமிழகத்தில் மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில், காலம்காலமாக ஜல்லிக்கட்டு நடந்தது. விலங்குளை துன்புறுத்துவதாக கூறி, ஜல்லிக்கட்டை தடை செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதையடுத்து, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் விதித்த மற்றும் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தில் உள்ள கடுமையான நிபந்தனைகள் காரணமாக, 750 கிராமங்களில் நடந்த ஜல்லிக்கட்டு, 2007-08 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட நடக்கவில்லை.
இதை எதிர்த்து, தமிழர் வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தை அணுகினர். இதன்விளைவாக, கடுமையான நிபந்தனைகள் சிறிதளவு தளர்த்தப்பட்டன.
குறிப்பாக, அரசிதழில் இடம்பெற்றுள்ள கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும். விலங்குகள் நல வாரியத்தில் பதிவுச் செய்யப்பட்ட மாடுகள் மட்டுமே பங்கேற்கவேண்டும். 2 லட்ச ரூபாய் ரூபாய் பிணையத் தொகை செலுத்தவேண்டும் போன்ற நிபந்தனைகள் கட்டாயமாக்கப்பட்டன.
இதன்காரணமாக, திருச்சியில், 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்த நிலையில், நிபந்தனைக்குட்பட்ட, திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூர், துவரங்குறிச்சி அருகேயுள்ள ஆவாரங்காடு ஆகிய, இரண்டு இடங்களில் மட்டுமே நடப்பாண்டு நடக்கிறது.
குறிப்பாக, பெரிய சூரியூரில் வரும், 15ம் தேதி, ஜல்லிக்கட்டு நடக்கிறது. ஏற்பாடுகளை, ஊரே ஒன்று திரண்டு ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பொதுமந்தையில், 2 வாடிவாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன. சீறிபாயும் காளைகள் மக்கள் கூட்டத்துக்கு சென்றுவிடாத வகையில், இரும்பு மற்றும் சவுக்கு கொண்ட இரட்டை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்முறையாக, மதுரை அலங்காநல்லூர் போல, பார்வையாளர்கள் மாடம் (காலரி) அமைக்கப்படுகிறது.
அலங்காநல்லூரில் காலரியில் அமர பணம் வசூல் செய்யப்படும். பெரிய சூரியூரில் அனைவரும் இலவசமாக அமர்ந்து ஜல்லிக்கட்டை ரசிக்கலாம். தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு, மதுரை பாலமேட்டிலும், அடுத்தநாள் பெரிய சூரியூரிலும் நடப்பதால், ஜல்லிக்கட்டு குறித்த எதிர்பார்ப்பு இளைஞர்களிடையே எகிறியுள்ளது. இதேபோல, வரும் 16ம் தேதி நடக்கும் ஆவாரங்காடு ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.