புதுக்கோட்டை: வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை உட்பட டெல்டா பகுதி மாவட்டங்களை, வறட்சி மாவட்டங்களாக, தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், காவிரி டெல்டா பகுதிகுட்பட்டதாக இருந்தும், கடைமடைப் பகுதியாக உள்ளதால், பருவமழையை நம்பியே விவசாயம் நடக்கிறது. தென்மேற்கு பருவமழையை நம்பி குறுவை சாகுபடியும், வடகிழக்கு பருவமழையை நம்பி சம்பா சாகுபடியும் நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டதால், குறுவை சாகுபடி அடியோடு முடங்கியது. இந்நிலையில் நிலம் புயலால், ஒன்றிரண்டு நாள் மழை பெய்ததாலும், மேகமூட்டத்துடன் பருவமழை பெய்வதற்கான அறிகுறி தென்பட்டதாலும், மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் சம்பா சாகுபடியை துவக்கினர்.
மாவட்டம் முழுவதும், 80 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையும் பொய்த்துவிட்டது. நீர்நிலைகள் அனைத்தும் தண்ணீரின்றி வறண்டு விட்டதால், பயிர் கருகி வருகிறது. விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இதற்கிடையே காவிரியில் தண்ணீர் திறந்துவிட, கர்நாடகா அரசு மறுத்துவிட்டதால், கல்லணை பாசனத்தை நம்பியுள்ள டெல்டா பகுதிகளிலும் கடும் வறட்சி நிலவுகிறது.
அப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர் கருநடவு (அரை பருவம்) ஏறிய நிலையில், தண்ணீரின்றி கருகி வருகிறது. பயிர் கருகியதால் மனவேதனையடைந்த, அம்மாவட்ட டெல்டா பகுதி விவசாயிகள், இருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவமும் நடந்தது.
தற்போது கோடையை மிஞ்சும் விதத்தில் வெயில் வாட்டி வதைப்பதால், மாவட்டம் முழுவதும் வறட்சியான சூழல் நிலவுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், பம்புசெட் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளும் நிலைகுலைந்து போய் உள்ளனர். தண்ணீர் மற்றும் தீவன பற்றாக்குறையினால் கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
வழக்கத்துக்கு மாறாக கடும் வறட்சி நிலவுவதால், புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளும், விவசாய அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, புதுக்கோட்டை உட்பட டெல்டா பகுதி மாவட்டங்களை, தமிழக அரசு விரைவில் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்காக, புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா பயிர் சாகுபடி நிலவரம், இதர பயிர் சாகுபடி நிலவரம், வறட்சியினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, கருகியுள்ள பயிர், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ஆகியவை குறித்து அறிக்கை தயார் செய்யுமாறு வி.ஏ.ஓ.,க்களுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதற்காக, புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், நேற்று ஆர்.டி.ஓ., தலைமையில், வி.ஏ.ஓ., மற்றும் ஆர்.ஐ.,க்கள் கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.