கொசு உற்பத்தியாகும் வகையில் திறந்து வைக்கப் பட்டுள்ள, அரசு, தனியார் கட்டடங்களின் குடிநீர் தொட்டிகளை, மாநகராட்சியே மூடிவிட்டு, அதற்கான கட்டணத்தை சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்க திட்டமிட்டுள்ளது. கொசுக்களால் நோய்
பரவுவதை தடுக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.
கொசு ஒழிப்புக்காக சென்னை மாநகராட்சி, ஆண்டுக்கு 3.5 கோடி ரூபாய் செலவு செய்தாலும், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. குப்பை, கழிவுநீர்,
சுகாதாரமின்மை போன்ற பல காரணங்கள் கொசு பெருக்கத்தின் பின்னணியில் சங்கிலி தொடராக உள்ளன.
புகை அடித்தல், கொசு மருந்து தெளித்தல் என, பல கட்ட நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்தாலும், பொதுமக்கள், தனியார், அரசு நிர்வாகங்களின் போதிய
ஒத்துழைப்பு இல்லை.
"டெங்கு' உள்ளிட்ட நோய் பாதிப்பில்லாத சென்னையை உருவாக்க, "உங்கள் கட்டடங்களை நீங்களே சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். குடிநீர் தொட்டிகளை மூடி வையுங்கள். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்போம்' என, அரசு, தனியார் நிறுவனங்களுக்கு ஏற்கனவே மாநகராட்சி அறிவுறுத்தி இருந்தது.
ஆலோசனை
எனினும், இந்த அறிவுறுத்தலை, அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் முழுமையான அளவில் பின்பற்றவில்லை. குடிநீர் தொட்டிகளை மூடி வைப்பதை அமல்படுத்துவது குறித்து, ஆணையர் விக்ரம் கபூர், சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
"அரசு கட்டடங்களில், குடிநீர் தொட்டிகள் மூடப்படாமல் உள்ளன. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதில் சிரமங்கள் உள்ளன' என, துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுகாதார பிரச்னையில் சிறப்பு கவனம் செலுத்தவும், மாநகராட்சி விதிகளின்படி தனியார், அரசு கட்டடங்களுக்கு உரிய நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கவும், ஆணையர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, குடிநீர் தொட்டிகளை திறந்து வைத்துள்ள தனியார் கட்டடங்கள் மட்டுமின்றி, அரசு கட்டடங்களுக்கும் நோட்டீஸ் வழங்கும் பணியை, மாநகராட்சி சுகாதார துறையினர் முடுக்கி விட்டுள்ளனர்.
நோட்டீஸ் கொடுத்தும், அதே நிலை தொடர்ந்தால், சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
அடுத்த கட்டம்
நோட்டீஸ் எச்சரிக்கை விடுத்தும் அலட்சியம் காட்டினால், அரசு, தனியார் கட்டடங்களின் குடிநீர் தொட்டிகளை மாநகராட்சியே மூடவும், அதற்கான செலவு தொகையை, சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மாநகராட்சி சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாநகராட்சி விதிகள், பிரிவு 83, 84ன் படி, குடிநீர் தொட்டிகளை திறந்து வைத்துள்ள கட்டடங்களுக்கு நோட்டீஸ் கொடுத்து நடவடிக்கை எடுக்கவும், பிரிவு, 85ன் கீழ், தொட்டியை மாநகராட்சியே மூடிவிட்டு, அதற்கான கட்டணத்தை, சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கவும் முடியும்.
இதன்படியே, கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் வகையில், தொட்டிகளை மூடி, கட்டணம் வசூலிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட உள்ளது. எவ்வளவு கட்டணம் என்பதெல்லாம், இடம், தொட்டியின் தன்மைக்கேற்ப வேறுபடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.