district news | கடலூர் மாவட்ட விவசாயிகளை துரத்தும் துயரம் : "தானே'விற்கு பின் விவசாயம் கடும் பாதிப்பு| Dinamalar

தமிழ்நாடு

கடலூர் மாவட்ட விவசாயிகளை துரத்தும் துயரம் : "தானே'விற்கு பின் விவசாயம் கடும் பாதிப்பு

Added : ஜன 09, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் இயற்கை சீற்றம் மற்றும் சமீப காலமாக நீடித்து வரும் பலமணி நேர மின் வெட்டு காரணமாக விவசாயிகள் மீளாத் துயரில் ஆழ்ந்துள்ளனர்.
இம்மாவட்டத்தில் 80 சதவீதம் பேர் விவசாயிகள், விவசாயக் கூலிகளாக உள்ளனர். மாவட்டத்தில், நெல், கரும்பு, வாழை, மணிலா, மா, பலா, முந்திரி, தென்னை, மரவள்ளி, பருத்தி, உளுந்து, கொய்யா, பூச்செடிகள், காய்கறி போன்றவை பயிர் செய்யப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளில் நிகழ்ந்த சுனாமி, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் மாவட்ட மக்கள் பெரும் பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகின்றனர். கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி வீசிய ""தானே' புயலின் கோரத் தாண்டவத்தில் விவசாயிகள், மீனவர்கள், சிறு குறு தொழில் செய்வோர், வியாபாரிகள், வர்த்தகர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.
இதில், ஈடுசெய்ய முடியாத இழப்பை சந்தித்தவர்கள் விவசாயிகளே. இனி இழக்க வேறொன்றும் இல்லை என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். தோட்டக்கலைப் பயிர்கள் உள்ளிட்ட 3 லட்சம் ஏக்கர் விவசாயப் பயிர்கள் பாதிக்கப்பட்டன.
அதில், ஒரு லட்சம் ஏக்கர் முந்திரி, 815 ஏக்கர் மா மரங்கள், பலா 1,225, தென்னை 2,027 ஏக்கர் என நீண்ட கால பலன் தரும் ஒரு கோடி மரங்களுக்கும் மேல் அடியோடு சாய்ந்து விவசாயிகளை நிலைகுலையச் செய்தது. இப்பயிர்களை மீண்டும் பயிர் செய்து நல்ல முறையில் மகசூல் பெற குறைந்தது 10 ஆண்டுகளாகும்.
"தானே' புயலில் சாய்ந்த முந்திரிகள், தளிர் விட்டு துளிர்க்க ஆரம்பித்ததால் மீண்டும் மகசூல் தரும் என்ற நம்பிக்கையில், விவசாயிகள் அதனை வெட்டி அகற்றவில்லை. ஆனால் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 10ல் ஒரு பங்குகூட முந்திரி மகசூல் தரவில்லை.
பண்ருட்டி, காடாம்புலியூர் பகுதிகளில் முந்திரியைத் தவிர வேறு பயிர்களை விவசாயம் செய்ய வேண்டும் எனில் பாசனத்திற்கு தண்ணீர் தேவை. இப்பகுதியில் 450 முதல் 600 அடி ஆழத்தில் தான் தண்ணீர் கிடைக்கும். போர்வெல் போட்டு மின் மோட்டார் அமைக்க 6 லட்சம் ரூபாய் வரை செலவாகும். வேறு வழியின்றி புயலில் சாய்ந்த முந்திரியை விவசாயிகள் வெட்டி அகற்றாமல் உள்ளனர். அதனையும் அகற்றினால் கொஞ்ச நஞ்சம் கிடைக்கும் வருவாயும் கிடைக்காது.
முந்திரியில் ஊடுபயிராக பச்சைப் பயறு, தட்டைப் பயறு, துவரை போன்றவற்றை பயிர் செய்து வந்தனர். இந்தாண்டு போதியளவு மழையும் பெய்யாததால் முந்திரி நிலங்கள் வறண்டு ஊடுபயிரும் செய்ய முடியவில்லை.
கருகும் சம்பா நெற்பயிர்கள்
சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலில் அதிகளவு நெல் பயிரிடப்படுகிறது. மாவட்டத்தில் இரண்டரை லட்சம் ஏக்கர் நெல் பயிரிடும் பரப்பளவாகும். "தானே' புயலின் போது கதிர்விடும் பருவத்திலிருந்த சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்ததால், மகசூல் பாதித்தது. ஏக்கருக்கு 10 மூட்டை நெல் அறுவடை செய்ததே பெரிய விஷயமாக இருந்தது.
புயலைத் தொடர்ந்து மின் வெட்டு, மழை பொய்த்தது போன்ற காரணங்களால் அடுத்தடுத்து வந்த நவரை, குறுவைப் பட்டங்கள் தாமதமாகின. மேட்டூர் தண்ணீர் வர தாமதமானதால், இந்தாண்டு சம்பா நடவு ஒரு மாதத்திற்கு மேல் தாமதமானது. தற்போது கதிர் வரும் நிலையில் உள்ள சம்பா நெற்பயிர்கள் போதிய தண்ணீர் இன்றி கருகி வருகின்றன.
கடந்த 2008ம் ஆண்டு முதல் மேட்டூரிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது தாமதமானதால், டெல்டா பகுதியில் உளுந்து சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தென்னையில் காய்ப்பு இல்லை
"புயலில் தோப்பிலிருந்த 30 ஆண்டு தென்னை மரங்கள் 50 சதவீதம் விழுந்தன. மீதமுள்ள மரங்களில் புயலடித்து ஓராண்டாகியும் சரியான காய்ப்பு இல்லை. அப்படியே காய்க்கும் ஓரிரு தேங்காய்களும் சிறியதாகவும், அதில் ஒருவித பூச்சித் தாக்குதலும் காணப்படுகிறது.
வாடிய வாழை விவசாயிகள்
மாவட்டத்தில் போர்வெல் பாசனம் மூலமே கரும்பு, வாழை உள்ளிட்டவை பயிர் செய்யப்படுகின்றன. மூன்று மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதால், கரும்பு, வாழைக்குப் போதியளவு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
"தானே' புயலில் அறுவடை செய்யும் நிலையிலிருந்த வாழை சாய்ந்து விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தின. தொடர்ந்து இந்தாண்டு பயிர் செய்த வாழையும், இரண்டு முறை வீசிய ‹றைக் காற்றில் சேதமடைந்தன. இரண்டு ஆண்டுகளாக விவசாயம் பாதித்து வருமானம் இல்லாத நிலையில், தற்போது பகலில் 3 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.
இரவில் எப்போது வருகிறது என தெரியவில்லை. போதிய பாசனம் செய்ய முடியாமல், வயலில் ஈரப்பதமின்றி வாழைகள் கருகி வருவதால் வாழை விவசாயிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை