தி.மு.க., வாரிசு அரசியலை, சங்கர மடத்திற்கு ஒப்பிட்டு, மத்திய அமைச்சர் அழகிரி பேசியதை கண்டித்து, சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில், தி.மு.க., வுக்கு எதிராக, கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
தன் பேச்சுக்கு அழகிரி வருத்தம் தெரிவித்து, வாபஸ் பெறவில்லை என்றால், அறிவாலயம் முன், முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என, தமிழ்நாடு இந்து மகா சபை அறிவித்துள்ளது. பா.ம.க.,வை சேர்ந்த சிலர், தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி, சமீபத்தில் சென்னை அறிவாலயத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பேசிய, தி.மு.க., தலைவர் கருணாநிதி, "என் ஆயுள் முழுவதும், தமிழ் சமுதாய மேன்மைக்காக பாடுபடுவேன்; எனக்கு பின் ஸ்டாலின் பாடுபடுவார்' என்றார். தன் பேச்சில், தனக்கு பின் அடுத்த தலைவர் ஸ்டாலின் என்பதை, கருணாநிதி மறைமுகமாக தெரிவித்தார்.
இது குறித்து மத்திய அமைச்சர் அழகிரி, நிருபர்களிடம் கூறுகையில், "தி.மு.க., ஒன்றும் சங்கரமடம் அல்ல. கட்சி பதவிக்கு யார் வரவேண்டும் என்பதை பொதுக்குழு, செயற்குழுக் கூடி முடிவு செய்யும்' என்றார். இந்நிலையில் சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில், தமிழ்நாடு இந்து மகா சபை சார்பில், தி.மு.க., வுக்கு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
சென்னை நகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், "சங்கரமடம் ஒரு புனிதமான இடம். கடவுள் இல்லை என்று சொல்லும் கருணாநிதி குடும்பத்திற்கு, சங்கரமடத்தை பற்றி பேசுவதற்கு, என்ன அருகதை இருக்கிறது. வன்மையாக கண்டிக்கிறோம்' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
இது குறித்து தமிழ்நாடு இந்து மகாசபை தலைவர் ஸ்ரீகண்டன் கூறியதாவது: தமிழகத்தில், 75 சதவீதம் இந்துக்கள் உள்ளனர். அவர்களின் மனம் புண்படும்படி, "இந்துக்கள் திருடர்கள்' என்ற வார்த்தையை கருணாநிதி ஏற்கனவே பயன்படுத்தினார். தற்போது, அவரது மகன் அழகிரி, தி.மு.க., குடும்ப வாரிசை, சங்கரமடத்துடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். சங்கர மடத்தில் வாரிசு அரசியல் நடக்கவில்லை. பாரம்பரியமிக்க, புனிதமான இடத்தை, அரசியலாக்கி பேசியது கண்டிக்கத்தக்கது. அழகிரி, தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால், அடுத்தக் கட்டமா, அறிவாலயம் முன் முற்றுகை போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
-நமது நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.